Wednesday, September 21, 2011

உடலை விட்டு வெளியேறும் ஆன்மா!


- என்.கணேசன்
மரண விளிம்பு அனுபவங்கள் மூலம் அல்லாமலேயே சிலர் உடலை விட்டு வெளியே சென்று காணக் கூடிய சக்தி பெற்றிருந்தார்கள். அவை Out of body experiences (OBE) என்ற பெயரில் பல்வேறு நாடுகளில் ஆராயப்பட்டு வருகின்றன.
முதலில் 1960 களில் டாக்டர் சார்லஸ் டார்ட் (Dr. Chares Tart) என்பவர் இது குறித்து நம்பத்தகுந்த ஆராய்ச்சிகள் செய்து சிலருக்கு அந்த சக்தி உள்ளது என்பதை ஒப்புக் கொண்டிருக்கிறார்.
இது போன்ற சக்திகள் இன்றைக்கு நம்மைத் திகைக்க வைத்தாலும் பல பழம் கலாச்சாரங்களில் இவை பரிபூரணமாக நம்பப்பட்டன. டீன் ஷீல்ஸ் (Dean Sheils) என்ற தொல்பொருள் ஆராய்ச்சியாளர் 60 பழைய கலாச்சாரங்களை ஆராய்ந்து அறுபதில் மூன்று கலாச்சாரங்களில் மட்டும் உடலை விட்டு வெளியே செல்லும் அனுபவங்கள் பற்றிய நம்பிக்கைகள் இருக்கவில்லை என்றும் மற்ற 57 கலாச்சாரங்களில் அதீத நம்பிக்கையிலிருந்து ஓரளவு நம்பிக்கை வரை இருந்திருக்கிறது என்று சொல்கிறார்.
சென்ற நூற்றாண்டில் இந்த மரண விளிம்பு அனுபவமல்லாத உடலை விட்டு வெளியேறும் அனுபவங்களை ஆராய்ந்ததில் சில சக்தி படைத்தவர்களிடம் மட்டும் இந்த ஆராய்ச்சிகள் சந்தேகத்திற்கு இடமில்லாமல் நிரூபணம் ஆகி உள்ளது. மற்ற பெரும்பாலான ஆராய்ச்சிகள் அந்த அனுபவங்களை அடைந்தவர்களாக தாங்களாக சொல்லிக் கொண்ட ஆட்களைத் திரட்டி நடத்தப்பட்டன. அப்படி சொல்லிக் கொண்டு வந்தவர்களில் பெரும்பாலானோர் தாங்களாக கற்பனை செய்து கொண்டும், அந்த கற்பனையையே உறுதியாக நிஜம் என்று நம்பிக்கொண்டும் வந்தவர்கள் என்பது ஆராய்ச்சிகளில் தெரிந்தது.
பலரை ஒரு அறையில் உள்ளே இருத்தி சற்று தொலைவில் வேறு அறையில் சில பொருள்களை வைத்து அல்லது சில எண்களை கரும்பலகையில் எழுதி வைத்து அதை கண்டுபிடித்துச் சொல்லச் சொன்னார்கள். பெரும்பாலானோர் யூகத்தின் பேரில் சம்பந்தம் இல்லாத பதில்களையே சொன்னார்கள் என்று ஆராய்ச்சிகள் சொல்கின்றன.
ஆழ்மன ஆராய்ச்சிகளில் ஆழ்மன சக்தியை நிரூபிக்கும் சில ஆராய்ச்சிகள் இருக்குமானால் அப்படி இல்லாததை சுட்டிக் காட்டும் சில ஆராய்ச்சிகளும் உள்ளன என்பதையும் நாம் கருத்தில் கொள்ள வேண்டும். அப்படி ஆழ்மன சக்தி ஆராய்ச்சிகளில் ஈடுபட்டு நிரூபிக்க முடியாமல் போனவர்களில் ஒருசிலர் ஒருசில முறை உண்மையாகவே அந்த சக்திகள் பெற்ற அனுபவங்கள் உடையவர்களாக இருந்த போதும் ஆராய்ச்சிக் கூட சூழ்நிலையில் அதை திரும்பவும் செய்து காட்ட முடியாதவர்களாகக் கூட இருக்கலாம். ஆனாலும் ஒரு உண்மையைக் கண்டுபிடிக்கும் முன்னால் பல போலிகளை சந்திக்கிற நிலைமை ஆழ்மன ஆராய்ச்சிகளில் இருந்து வருகிறது என்பதை நாம் ஒப்புக் கொண்டே ஆக வேண்டும்.
உண்மையாக உடலை விட்டு வெளியே சென்றதாக நம்பப்பட்ட மனிதர்களின் அனுபவங்களைக் கேட்ட போது பலரும் மூன்று விஷயங்களை ஒருமித்து சொன்னார்கள். உடலை விட்டு வெளியேறிய பின்பும் எதோ ஒரு அபூர்வ சக்தியையும், சில அதிர்வலைகளயும் தாங்கள் உணர்ந்ததாகச் சொன்னார்கள். விசித்திரமான பலத்த சத்தங்களைக் கேட்டதாகச் சொன்னார்கள். தங்கள் உடல்களையும் மற்றவர்களையும் தெளிவாகக் காண முடிந்ததாகச் சொன்னார்கள்.
ஆதாரபூர்வமான மரண விளிம்பு அனுபவ ஆராய்ச்சிகளின் மூலம் உடலை விட்டு வெளியேறியவுடன் மனிதனால் கண்களின் உதவியில்லாமலேயே காண முடிகிறது, காதுகளின் உதவியில்லாமலேயே கேட்க முடிகிறது, மொழியின் உதவியில்லாமலேயே பேச முடிகிறது என்பதை தெளிவாக நாம் அறிந்தோம். அந்த ஆராய்ச்சிகளில் பங்கு கொண்ட மனிதர்கள் மகான்கள் அல்ல, அபூர்வ சக்தியாளர்கள் அல்ல, வாழ்ந்த காலத்தில் ஆழ்மன சக்திகளில் நாட்டம் கொண்டவர்களும் அல்ல. நாம் நம் வாழ்க்கையில் அடிக்கடி சந்திக்க முடிந்த சாதாரண மனிதர்கள். ஆனாலும் அவர்களால் கூட உடலை விட்டுப் பிரிந்த பின்னர், காண, கேட்க, பேச, புரிந்து கொள்ள முடிகிறது என்பது தான் நாம் கவனிக்க வேண்டிய முக்கிய செய்தி. மரண விளிம்பு அனுபவமல்லாத பிற உடலை விட்டு வெளியேறிய அனுபவ ஆராய்ச்சிகள் கூட இதையே தான் உறுதிபடுத்துகின்றன என்பதையும் பார்த்தோம்.
ஆழ்மன சக்திகளைப் பெறும் முயற்சியில் அடுத்த கட்டத்திற்குப் போகும் முன் இது வரை நாம் ஆங்காங்கே ஆராய்ச்சிகளின் மூலமாக அறிந்த சில முக்கிய அடிப்படை உண்மைகள் மற்றும் தகவல்களைத் தொகுத்து சுருக்கமாக திரும்பவும் நினைவுபடுத்திக் கொள்வோம்.
ஆழ்மன சக்திகள் மனிதனுக்கு இயல்பானவை. மேல்மட்ட மன நிலையிலேயே மேற்போக்காய் வாழ்ந்து பழகிய மனிதன் ஆழத்தில் புதைந்து இருக்கும் தன் இயல்பான சக்திகளை அறியாமலேயே வாழ்கின்றான். ஐம்புலன்கள் வழியாகவே எதையும் அறிந்து பழகி விட்ட அவனுக்கு பயன்படுத்தாமல் இருக்கின்ற ஆழ்மன சக்திகள் மேல்மட்ட மனநிலைக்கு அற்புதங்களாகவே தெரிகின்றன.
ஆழ்மன சக்தியைப் பயன்படுத்தி நோய்களைக் குணமாக்க முடியும், தூரத்தில் இருப்பவர்களுக்கு செய்தியை அனுப்பவும் பெறவும் முடியும், தொடாமலேயே பொருள்களைப் பாதிக்க முடியும், உடல் மீது முழுக் கட்டுப்பாடு வைத்துக் கொள்ள முடியும், மற்றவர்கள் எண்ணங்களில் ஆதிக்கம் செலுத்த முடியும், கடந்த கால, நிகழ் கால, எதிர் கால நிகழ்ச்சிகளை அறிய முடியும், உடலை விட்டு வெளியேறி சஞ்சரிக்க முடியும்.
ஆழ்மன சக்தியை அடையத் தடையாக இருப்பவை அவநம்பிக்கையும், அவசரமும், அமைதியின்மையும். அவற்றை விலக்கினால் ஒழிய ஆழ்மன சக்திகள் சாத்தியப்படுவது கஷ்டம்.
ஆழ்மன சக்திகள் கைகூடுவது மேல்மன சலசலப்புகள் குறைந்து ஆழ்மன எல்லைக்குள் நுழையும் போது தான். கிட்டத்தட்ட எல்லா ஆழமன சாதனையாளர்களும் அப்படிச் சென்றே அற்புத சக்திகளைக் காட்டி இருக்கிறார்கள். மேல்மனதின் பரபரப்பும், சலசலப்பும் குறைந்து ஆழ்மன எல்லைக்குச் செல்ல தியானம் மிகவும் உதவுகிறது.
தியானத்தில் மனதை லயிக்கச் செய்து பழக்குவது ஆழ்மன சக்தியை உணரவும், பயன்படுத்தவும் மிக முக்கிய பயிற்சியாகும். தியானத்தின் மூலம் ஆல்ஃபா, தீட்டா அலைகள் கொண்ட அமைதியான மனநிலைக்குச் சென்றால் எல்லா உண்மைகளை உணரவும் முடியும், சக்திகளைப் பெறவும் முடியும்.

மரணத்துக்குப் பின் என்ன?


 என்.கணேசன்
ஆழ்மன சக்தியில் ஒன்பது வகை வெளிப்பாடுகளில் ஒன்றாக உடலை விட்டு வெளியேறி அனைத்தையும் காண முடிந்த சக்தியைக் குறிப்பிட்டு இருந்தோம். அப்படி உடலை விட்டு வெளியேறிய பின் காண்பது மட்டுமல்லாமல், கேட்பது, உணர்வது, தகவல்கள் தெரிவிப்பது, அறிந்து கொள்வது போன்றவையும் சாத்தியமாகும் ஆழ்மன சக்தியை சித்தர்கள், யோகிகள், தெய்வீகசக்தி உடையவர்கள் போன்றோர் பெற்றிருந்ததாக பல நாடுகளின் பழங்கால ஏடுகளில் குறிப்புகள் உள்ளன.
ஆனால், சாதாரண மனிதர்கள் உடலை விட்டுப் பிரிவது ஒரே ஒரு சமயத்தில் தான். அது அவரவர் மரண காலத்தில் தான். அந்த சமயத்தில் புலன்கள் வழியாகக் கிடைக்கும் அறிவை ஐம்புலன்கள் உதவியில்லாமலேயே மனிதனால் அறிய முடிகிறது. இதை சொல்வது மெய்ஞான சித்தர்கள் மட்டும் அல்ல. இன்றைய விஞ்ஞான ஆராய்ச்சிகளும் தான். இப்படிச் சொல்லும் நிலையை ஆராய்ச்சியாளர்கள் எட்டியது எப்படி என்று பார்ப்போமா?
மரணத்துக்குப் பின் என்ன ஆகிறது என்கிற கேள்வி மனிதன் சிந்திக்க ஆரம்பித்து விட்ட காலத்திலேயே அவனுள் எழுந்த கேள்வி. இதற்குப் பதிலாக பல சித்தாந்தந்தங்களை மனிதன் உருவாக்கி இருந்தாலும் அந்த சித்தாந்தங்கள் சரியா என்று சரிபார்த்துக் கொள்ளுதல் இயலாத காரியமாகவே மனிதனுக்கு இருந்து வந்தது. ஏனென்றால் இறந்து விட்ட பின்னரே தெரிந்து ஊர்ஜிதப்படுத்திக் கொள்ள வேண்டிய விஷயங்கள் அவை. இறந்து விட்டாலோ திரும்பி வந்து சொல்லுதல் சாத்தியமில்லை. இந்த சிக்கல் மரணத்துக்குப் பின் என்ன என்ற கேள்வியைப் பெரிய கேள்விக்குறியாகவே மனிதனுக்கு தக்க வைத்து விட்டது.
பெரும்பாலான எல்லா மதங்களும் தங்கள் தங்கள் சித்தாந்தங்களைச் சொல்லி மரணத்துக்குப் பின் இது தான் திட்டவட்டமாக சொன்னாலும் பகுத்தறிவு கொண்ட மனிதன் அது சரியா என்று ஆராய ஆசைப்பட்டான். காரணம், மதங்களின் சித்தாந்தங்கள் ஒன்றுக்கொன்று முரணாக இருந்தன. பல அறிஞர்களும் தங்கள் பங்குக்கு சில சித்தாந்தங்களைச் சொன்னார்கள். கிழக்கத்திய நாடுகளில் 'கூடு விட்டு கூடு பாய்தல்', மரணத்துக்குப் பிந்தைய பயணம் போன்ற அமானுஷ்ய பதிவுகள் அதிகமாக இருந்தாலும் மேற்கத்திய நாடுகளில் அது போன்ற பதிவுகள் குறைவே. ஆனாலும் அவையும் இதில் மேற்கொண்டு அறியும் ஆவலைத் தூண்டுவனவாக இருந்தன.
பல நூற்றாண்டுகளுக்கு முன்பு ப்ளேடோ (Plato) என்ற கிரேக்க ஞானி தன் குடியரசு (Republic) என்ற நூலில் ஓரிடத்தில் இறந்து விட்டதாகக் கருதப்பட்ட சிப்பாய் ஒருவன் கொள்ளி வைக்கப்படும் முன் எழுந்து தன் தற்காலிக மரணத்துக்குப் பின் என்ன ஆயிற்று என்று விவரிப்பதாக எழுதியிருக்கிறார். அந்த விவரிப்புகளில் சில பிற்கால விஞ்ஞானக் கண்டுபிடிப்புகளுக்கு ஒத்து வருகின்றன.
சுமார் ஒரு நூற்றாண்டுக்கு முன் எகிப்திற்குச் சென்ற பால் ப்ரண்டன் (Paul Brunton) என்ற இங்கிலாந்து தத்துவஞானி விசேஷ அனுமதி பெற்று பிரமிடின் உள்ளே ஓர் இரவு தனியாகத் தங்கினார். அந்த இரவில் அவர் உடலை விட்டு வெளியேறி தன் உடலைத் தெளிவாகப் பார்த்ததாகத் தெரிவிக்கிறார். பிரமிடுக்குள் அவர் தனியாகக் கழித்த அந்த இரவின் அனுபவங்கள் பற்றி ரகசிய எகிப்தில் ஒரு தேடல் (A search in secret Egypt) என்ற புத்தகத்தில் சுவாரசியமாக எழுதியுள்ளார். அந்த அனுபவத்தில் நம் தற்போதைய அலசலுக்குத் தேவையான மரண் விளிம்பு அனுபவப் பகுதியை மட்டும் பார்ப்போம்...
"... அவருடைய தசைகள் எல்லாம் இறுக ஆரம்பித்தன. அவருடைய உடல் முழுவதும் பக்கவாதம் வந்தது போல் செயல் இழக்க ஆரம்பித்தது. முழு உடலும் பாறையாக கனக்க ஆரம்பித்தது. உடலில் இருந்து உணர்வுகள் மங்க ஆரம்பித்தன. மரணம் நெருங்குவது போல் இருந்தது. ஆனால் பால் ப்ரண்டனின் தத்துவார்த்தமான பக்குவம் அதற்கு பயப்படவில்லை.
ஒருவித இனம் புரியாத சிலிர்ப்பு தண்டுவடத்தில் கீழிருந்து மேலாகப் பரவி கடைசியில் மூளையில் மட்டும் ஏதோ உணர்வு தங்கியது. பால் ப்ரண்டன் நினைவை இழக்க ஆரம்பித்தார். நினைவினை இழக்க ஆரம்பிக்கும் அந்த நேரத்தில் "நாளை என்னுடைய பிணத்தை இந்தப் பிரமிடினுள் பார்ப்பார்கள். இதுவே என் முடிவு" என்ற எண்ணம் வந்து போயிற்று.
உடலெல்லாம் மரத்தாலும் தலையில் மட்டும் லேசான உணர்வு சிறிது நேரம் தங்கியிருந்தது. ஏதோ சூறாவளியில் சிக்கியதைப் போல் ஒரு உணர்வு மூளையில் தங்கி ஏதோ ஒரு துளை வழியாக வெளியேறுவதை பால் ப்ரண்டன் உணர்ந்தார். பின் உடலிலிருந்து பரிபூரண விடுதலை பெற்றது போல் உணர்ந்தார். உடலின் கனம் இல்லாமல் லேசானதைப் போன்று தோன்றிய அந்த நேரத்தில் உடல் தானல்ல என்பது அவருக்குப் புரிந்தது. இவ்வளவு நாள் தான் அடைபட்டிருந்த சிறையாகவே உடல் தோன்றியது. உடலை விட்டு வெளியே வந்திருந்த போதும் இன்னும் எல்லாவற்றையும் காணக் கூடிய சக்தியும், உணரக் கூடிய சக்தியும் தன்னை விட்டு போய் விடவில்லை என்பது புரிந்த போது அவருக்குத் திகைப்பு மேலிட்டது. இன்னும் சொல்லப் போனால் முன்னெப்போதையும் விட உணர்வுகள் கூர்மை பெற்றது போல் தோன்றியது.
அவரால் அவர் உடலைத் தெளிவாகப் பார்க்க முடிந்தது. கண்கள் லேசாக மூடிய, இரண்டு கைகளையும் மடித்து மார்பில் வைத்திருந்த தன் உடலை அவர் ஆச்சரியத்துடன் பார்த்தார். ஏக காலத்தில் நிற்பதைப் போலவும் மிதப்பதைப் போலவும் அவருக்குத் தோன்றியது..."
1944ல் உலகப் புகழ் பெற்ற மனவியல் நிபுணர் கார்ல் ஜங் (Carl Jung) சுவிட்சர்லாந்து மருத்துவமனை ஒன்றில் மாரடைப்பால் தனக்கு ஏற்பட்ட சிறிது நேர மரண அனுபவத்தை விரிவாக தன் சுய சரிதத்தில் எழுதியுள்ளார். அவரது அனுபவமும் பிற்கால ஆராய்ச்சியாளர்கள் தொகுத்த அனுபவங்களோடு ஒருசிலவற்றில் ஒத்துப் போகிறது. அதைவிட சுவாரசியமான விஷயம் என்னவென்றால் அவர் உடலை விட்டுப் பிரிந்து இந்த பூமியையே சில மைல்கள் தொலைவில் கண்டதாகக் கூறி அண்டசராசரத்தில் பார்த்த அந்த வியத்தகு காட்சி எப்படி இருந்தது என்றும் எழுதியுள்ளார். அதற்குப் பின் பற்பல ஆண்டுகளுக்குப் பின் விண்வெளிக்குச் சென்று மனிதன் பார்த்த காட்சியும், கார்ல் ஜங்க் கண்ட காட்சியும் ஒத்துப் போனது தான் பெரிய ஆச்சரியம்.
இது போன்ற நிகழ்வுகள் விஞ்ஞான ஆராய்ச்சியாளர்களையும் கவர்ந்திருக்க வேண்டும். அவர்கள் இது போன்ற அனுபவங்கள் கற்பனையா இல்லை நிஜமா என்று அறிய விரும்பினார்கள். அதை ஆராய முற்பட்டார்கள். அதற்கு மரணத்தின் விளிம்பு வரை சென்று வந்த மனிதர்களின் அனுபவங்கள் ஆராய்ச்சிக்கு எடுத்துக் கொள்ளப்பட்டன. மரணத்துக்குப் பிறகு என்ன என்ற கேள்விக்கு முழுவதுமாய் விரிவான விடை கிடைக்கா விட்டாலும் மரணத்துக்குப் பின் உடனடியாகச் சில நிமிடங்கள் என்ன நடக்கின்றன என்பதை விஞ்ஞானம் ஓரளவு கண்டுபிடித்திருக்கிறது.
இந்த ஆராய்ச்சிகள் தனிப்பட்ட அளவில் அங்கொன்றும், இங்கொன்றும் நடந்து கொண்டிருந்தாலும் மிகவும் பிரபலமானதும், மேலும் அதிக ஆராய்ச்சியாளர்களை ஈர்த்ததும் டாக்டர் ரேமண்ட் மூடி (Dr. Raymond Moody) என்பவர் 1975 ஆம் ஆண்டு எழுதிய வாழ்க்கைக்குப் பின் வாழ்க்கை (Life after Life) என்ற புத்தகம் வெளியான பின்பு தான். மரணத்தின் விளிம்பு வரை வந்து சில வினாடிகள் முதல் ஓரிரு நிமிடங்கள் வரை இதயத்துடிப்பும், மூச்சும் நின்று போய் பின் மறு உயிர் பெற்ற மனிதர்களை மருத்துவமனைகளின் ஆவணங்கள் மூலம் கண்டறிந்து பேட்டி எடுத்து அவற்றை மீண்டும் சிகிச்சை செய்த மருத்துவர்களின் கருத்துகளுடன் ஒப்பிட்டு ரேமண்ட் மூடி ஆழமான ஆராய்ச்சிகள் செய்திருக்கிறார். மரணத்தை எட்டிப்பார்த்த 150 நபர்களை வைத்து பல ஆண்டுகள் தொடர்ச்சியாகச் செய்த ஆராய்ச்சிகளை தன் புத்தகத்தில் விரிவாக ரேமண்ட் மூடி எழுதியிருக்கிறார்.
மரண விளிம்பு அனுபவம் (NDE-Near Death Experience) என்ற சொற்றொடரை முதலில் உபயோகப்படுத்தியது ரேமண்ட் மூடி தான். அந்த தொடரே இன்று வரை இது குறித்து ஆராயும் ஆராய்ச்சியாளர்களால் பயன்படுத்தப்படுகிறது. அவர் ஆராய்ச்சி செய்த அந்த 150 பேருமே பல தரப்பட்ட மனிதர்கள். ஆனால் அவர்கள் சொன்ன அனுபவங்களில் சில அனுபவங்கள் ஒரே மாதிரியாக இருந்தன. பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்ற, நாட்டின் பல்வேறு பகுதிகளில் வசித்து வந்த அந்த மனிதர்கள் சந்தித்த அனுபவங்களில் முக்கியமாக ஒன்பது அம்சங்கள் ஒன்றுபட்டதை அவர் தன் நூலில் வியப்புடன் கூறுகிறார்.

பகிராத எண்ணத்தை உணர முடியுமா?


- என்.கணேசன்
தியானத்தைப் பற்றி இதுவரை சற்று விரிவாகவே விளக்கியதற்கு முக்கிய காரணம், ஆரம்பத்திலேயே குறிப்பிட்டது போல நம்மை நாம் முழுமையாக அறிய தியானம் மிகவும் உதவுகிறது என்பது தான். எத்தனையோ சக்திகள் இருந்தும் வாழ்நாள் முழுவதும் அதை அறியாமல், அறியாத காரணத்தால் அதைப் பயன்படுத்தாமல் மனிதர்கள் பலவீனர்களாய் வாழ்ந்து மடியும் அவலம் இன்று அதிகம் இருக்கிறது.
நாம் உண்மையை அறிய ஐம்புலன்களையே நம்புகிறோம். ஐம்புலன்களின் உதவி இல்லாமலேயே அவற்றால் அறிய முடிந்தவற்றைக் காட்டிலும் அதிகமாக, நுட்பமாக, துல்லியமாக சிலவற்றை அறிய முடியும் என்று சொன்னால் நம்புவதில் நாம் பெரும் சிரமத்தை உணர்கிறோம். காரணம் அதை எளிதில் விளக்கவோ, விளங்கிக் கொள்வதற்கோ முடிவதில்லை.
ஆனால் தாவரங்கள், விலங்குகள் கூட அசாத்தியமான, எப்படி முடிகிறது என்று விளக்க முடியாத பல அபூர்வசக்திகளைப் பெற்றுள்ளன என்பதற்கு நிறைய ஆதாரங்கள் உள்ளன. இதில் சிலவற்றை முன்பே சிறிது சொல்லி இருந்தாலும் கூடுதல் தகவல்கள் அறிந்து கொள்வது இந்த இடத்தில் பொருத்தமாக இருக்கும் என்று நான் நினைக்கிறேன்.
1960களில் க்ளீவ் பாக்ஸ்டர் (Cleve Baxter) என்ற விஞ்ஞானி தாவரங்களை வைத்து சில பரிசோதனைகள் செய்தார். தாவரங்களில் polygraph electrodes-ஐ இணைத்து செய்த பரிசோதனைகளில் தாவரங்கள் மனித எண்ணங்களை அறிந்து கொண்டு அதன்படி செயல்படுகின்றன என்பதைக் கண்டுபிடித்தார். அந்தச் செடிகளுக்குத் தண்ணீர் ஊற்ற அவர் தயாரானபோதே அந்த செடி இலைகளில் அதற்கேற்ற ஒரு மாற்றம் உருவானதைக் கருவிகள் அடையாளம் காண்பித்தது அவருக்கு ஆச்சரியத்தை ஏற்ப்படுத்தியது.
அவர் அதற்கு தீங்கு விளவிப்பது போல மனதில் கற்பனை செய்தால் ஏதாவது மாற்றம் தெரிகிறதா என்று ஆராய, மனதில் அதன் இலைகளைத் தீப்பற்ற வைப்பது போல் மனதில் கற்பனை செய்தால் அதன் இலைகள் அதை உணருமா என்பதை அறிய முயற்சித்தார். ஆனால் அவர் கற்பனைக்கு வடிவம் தரும் முன்னேயே, அவருக்கு எண்ணம் எழுந்தவுடனேயே அந்தத் தாவர இலைகளில் அதற்கேற்றாற்போல் மாற்றம் பதிவானது அவருடைய ஆச்சரியத்தை மேலும் அதிகப்படுத்தியது. அவருடைய தொடர்ந்த ஆராய்ச்சிகளில் தாவரங்கள் தங்களை அழிக்க வருபவர்கள் அருகில் வரும் போதும், தங்களை வளர்ப்பவர்கள் மற்றும் நேசிப்பவர்கள் அருகில் வரும் போதும் அதற்கேற்றாற்போல் வேறு வேறு விதமாக உணர்கின்றன என்பதைக் கண்டுபிடித்தார். மனித எண்ணங்களை எப்படி தாவரங்கள் அறிகின்றன என்பதற்கு இன்னமும் சரியான விஞ்ஞான விளக்கமில்லை.
அதே போல் விலங்குகளில் நாய் மற்றும் குதிரை தங்கள் எஜமானர்களின் எண்ணங்களை உணர வல்லவை என்று கண்டுபிடித்திருக்கிறார்கள். அவர்களுடைய மனநிலைகளுக்குத் தகுந்தபடி நடந்து கொள்கின்றன என்று சொல்கிறார்கள். நாய்களை மிகவும் நேசித்து வளர்த்துபவர்கள் வீட்டுக்குச் சென்றால் அவர்களுடைய நாய்கள் எந்த அளவு புரிந்து கொண்டு நடக்கின்றன என்பதைக் கதை கதையாய் சொல்வார்கள்.
அதே போல் வேட்டைக்குச் செல்பவர்களும் விலங்குகளின் சில விசேஷ நடவடிக்கைகளைப் பதிவு செய்திருக்கிறார்கள். காடுகளில் விலங்குகளை வேட்டையாட அவர்கள் மறைந்து பதுங்கி இருக்கும் போது மோப்பத்தினால் கூட அவை அறிய முடியாத தூரத்தில் வரும் போதே ஏதோ ஒரு விதத்தில் அபாயத்தை உணர்கின்றன என்பதை அனுபவபூர்வமாகச் சொல்கிறார்கள்.
பார்க்க முடியாதபடி மறைந்திருந்தாலும், மோப்பம் பிடிக்க முடியாத தூரத்தில் இருந்தாலும் அவை ஒரு கணம் ஸ்தம்பித்து நின்று விட்டு, பின் சிலிர்த்துக் கொண்டு அந்த வழியே வராமல் வேறு வழியாகப் பயணிப்பதைத் தெரிவிக்கிறார்கள். ஒரு சில விலங்குகள் அபாயத்தை எதிர்கொள்ளும் போது எழுப்பும் ஒலியை அந்த சமயங்களில் எழுப்பி விட்டுச் செல்வதாகவும் சொல்கிறார்கள். இது போன்ற அபாயத்தை உணரும் அபூர்வ சக்திகளை காட்டு விலங்குகள் அதிகம் பெற்றிருப்பதாகவும் வீட்டில் வளர்க்கப்படும் விலங்குகள் காலப்போக்கில் அந்த சக்திகளை இழக்க ஆரம்பித்துவிடுவதாகவும் விலங்கின ஆராய்ச்சியாளர்கள் சொல்கிறார்கள்.
ஒரு தாவரமோ விலங்கோ கூட மனிதனின் நோக்கத்தையும், எண்ணத்தையும் அறிவிக்காமலேயே அறிந்து கொள்கின்றன என்றால் மனிதன் இன்னொரு மனிதனின் எண்ணங்களையும், நோக்கங்களையும் சொல்லாமலேயே தெரிந்து கொள்வதில் ஆச்சரியம் என்ன இருக்கின்றது. இன்னும் சொல்லப் போனால் இயற்கையோடு இயற்கையாக வாழ்ந்து கொண்டிருந்த ஆதிமனிதன் இன்றைய மனிதனைக் காட்டிலும் இது போன்ற அபூர்வ சக்திகளை அதிகம் பெற்றிருந்தான் பயன்படுத்தினான் என்றே சொல்லலாம்.
சிட்னி பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த தொல்பொருள் ஆராய்ச்சியாளரான டாக்டர் ஏ.பி.எல்கின் (Dr. A.P. Elkin) என்பவர் ஆஸ்திரேலிய நாட்டின் பழங்குடி மனிதர்களான புதர்மனிதர்கள் எனப்படுபவர்கள் குறித்து நிறைய ஆராய்ச்சிகள் செய்திருக்கிறார். அந்த புதர்மனிதர்கள் காணாமல் போன பொருட்களையும், வழிதவறிப் போன ஆடுமாடுகளையும், திருடர்களையும் அனாயாசமாகக் கண்டு பிடிப்பதில் வல்லவர்களாக இருப்பதை ஆய்வில் கண்டுபிடித்திருக்கிறார்.
அவர் எழுதிய Aboriginal Men of High Degree என்ற புத்தகத்தில் அந்தப் புதர்மனிதர்களை ஆராய்ச்சி செய்ய ட்ரெக்கிங் சென்ற போது அவர் வருகையையும், வரும் நோக்கத்தையும் அவர்கள் முன் கூட்டியே அறிந்து வைத்திருந்தனர் என்று கூறுகின்றார். பல்வேறு பகுதிகளில் வசித்து வந்த அவர்கள் மற்ற பகுதிகளில் வசிக்கும் அவர்களது வேண்டப்பட்டவர்களின் மரணத்தையோ, உறவினர்கள் வீட்டில் குழந்தை பிறப்பதையோ உடனடியாக அறிந்தார்கள் என்றும் கூறுகிறார். அவரிடம் அந்த புதர்மனிதர்கள் "எண்ணங்கள் பார்க்க முடியாதவையாக இருந்தாலும் அவற்றைக் காற்று வெளியில் அனுப்புவதும் பெறுவதும் எளிது," என்று
தெரிவித்தார்களாம்.
அவருடைய புத்தகத்தால் கவரப்பட்டு லிண்டன் ரோஸ் Lyndon Rose என்ற மனவியல் நிபுணர் அந்த புதர்மனிதர்களை வைத்து மேலும் பல பரிசோதனைகள் செய்தார். மூடிய பெட்டிகளில் என்ன இருக்கிறது என்பதைக் கண்டுபிடிக்கும் ஆய்வுகளில் கிட்டத்தட்ட ஐம்பது சதவீத விடைகளை அவர்கள் சரியாகச் சொன்னார்கள். சரியாகச் சொல்லாத பொருட்கள் கூட பெரும்பாலும் இதுவரை அந்தப் பழங்குடியினர் கண்டிராத பொருட்களாக இருந்தன.
ஒரு காலத்தில் பக்கம் பக்கமாக எண்களைக் கையாலேயே கூட்டி கணக்கிடும் பழக்கம் இருந்தது. சில வயதான கணக்குப் பிள்ளைகள் இப்போதும் ஒரு முறை கூட்டும் போதே சிறு பிழை கூட இல்லாமல் கூட்டி கணக்கிடுவதை நம்மில் பலரும் பார்த்திருக்கலாம். ஆனால் கால்குலேட்டர் உபயோகப்படுத்தப்படும் இக்காலத்தில் அந்தக் கணக்கிடும் திறனை இழந்து விட்டிருக்கிறோம். மிக எளிய இரண்டு எண்களைக் கூட்டக் கூட நமக்கு கால்குலேட்டரே தேவைப்படுகிறது. அதே
போலத் தான் எந்தத் திறமையும், சக்தியும், நாம் உபயோகிக்காமல் விட்டு விட்டால் காலப்போக்கில் அந்தத் திறனை முழுமையாக இழந்து விடுகிறோம். அப்படித்தான் எத்தனையோ இயல்பான ஆழ்மன சக்திகளை மனித சமுதாயம் இழந்து விட்டிருக்கிறதோ? சிந்தியுங்கள்.
புலன்கள் வழியே மட்டும் பலவற்றையும் அறியத் துவங்கிய மனிதர்கள் அனைவரும் ஒரே ஒரு கட்டத்தில் புலன்கள் துணையில்லாமலேயே எல்லாவற்றையும் அறிகிறார்கள். அது எப்போது தெரியுமா?

தியானம்... சில நடைமுறைச் சிக்கல்களும் காரணமும்!


 என்.கணேசன்
பல வகை தியானங்களை விரிவாகப் பார்த்தோம். தியானத்தைப் பற்றி படித்தோ, ஒரு குருவிடம் பயிற்சி பெற்றோ பயிற்சி முறையைத் தெரிந்து கொள்ள முடியுமே தவிர தியான அனுபவத்தை உணர அது என்றும் போதுமானதாகாது. பயிற்சி முறைகளை அறிந்துகொள்வது வழிகாட்டிப் பலகையையோ, வரைபடத்தையோ பார்ப்பது போல. அது வழிகாட்டுமே தவிர வழிநெடுகக் கூடத் துணைக்கு வராது. அந்த இலக்குக்குச் செல்ல வேண்டுமானால் அது காட்டிய பாதையில் பயணிக்க வேண்டும். அதற்கான விருப்பத்தையும், மன உறுதியையும் மற்றவர் தர முடியாது. இதை மனதில் இருத்திக் கொள்வது மிக முக்கியம்.
எல்லா வகை தியானங்களும் எல்லோருக்கும் ஏற்றதல்ல. அவரவர் தன்மைக்கு ஏற்ப சில வகை தியானங்கள் சிலருக்கு மிக எளிதாகவும், சில வகை தியானங்கள் மிக கஷ்டமானதாகவும் இருக்கலாம். அவை தியானம் செய்யும் ஆரம்ப நாட்களிலேயே
தெரிந்து விடும். உங்களுக்கேற்ற ஒரு தியானத்தை ஏற்றுக் கொண்டு தொடர்ச்சியாக அதைச் செய்வது மிக முக்கியம். முதலில் ஒரு தியானம் நம் மனதில் வேரூன்ற ஆரம்பிக்க குறைந்த பட்சம் 21 நாட்கள் அவசியம் என்று அனுபவஸ்தர்கள் சொல்கிறார்கள். எனவே, 21 நாட்களாவது தேர்ந்தெடுத்த தியானத்தை ஒரு நாள் கூட தவறாமல் செய்வது முக்கியம். அதன் பின் ஒரிரு நாள் விட்டுப் போனாலும் பரவாயில்லை. (அந்த ஓரிரு நாட்கள் பல நாட்களாக மட்டும் அனுமதிக்காதீர்கள்).
உற்சாகமாக தியானம் செய்ய ஆரம்பித்து அதைத் தொடர்ந்து செய்ய முடியாமல் கைவிட்டு விடும் மனிதர்கள் ஏராளம். கைவிரலிடுக்கில் விழும் மணல் குறைய ஆரம்பித்து பின் தீர்ந்து விடுவது போல் ஆரம்ப உற்சாகம் சொற்ப காலத்தில்
காணாமல் போகிறது. பலரும் ஏதாவது ஒரு காரணம் சொல்லி தியானத்தைக் கைவிட்டு விடுகிறார்கள். சில சமயங்களில் கைவிடா விட்டாலும் தியானம் எந்திரத்தனமான ஒரு வேலை போல ஆகிறது. அதற்கான காரணங்களைப் பார்ப்போம்.
முதலாவதாக, ஒரு மகத்தான அனுபவத்திற்கு தயாராகி நாம் தியானம் செய்ய ஆரம்பிக்கிறோம். பலரும் அதைப் பற்றிப் படித்தும் கேட்டும் நிறைய எதிர்பார்ப்புகளுடன் ஆரம்பிக்கிற தியான அனுபவம் நாம் எதிர்பார்க்கிற விதத்திலும், எதிர்பார்க்கிற வேகத்திலும் நமக்குக் கிடைப்பதில்லை. அதனால் அலுப்பு தட்ட ஆரம்பிக்கிறது.
சிலர் வேறு குருவைத் தேடிப் போவதுண்டு. வேறு சில பயிற்சி முகாம்களை நாடிப் போவதுண்டு. அங்கும் ஆரம்பத்தில் ஒரு
உற்சாகம், ஒரு எதிர்பார்ப்பு பின் ஏமாற்றம், அலுப்பு என்று சரித்திரம் தொடர்கிறது. யதார்த்தத்திற்கு ஒத்து வராத நம் எதிர்பார்ப்புகளே தியானம் தொடர முடியாமைக்கு முதல் காரணம் என்று சொல்லலாம்.
இரண்டாவது, தியானத்துக்குப் பொருத்தமான சூழ்நிலைகள் பயிற்சி இடங்களில் கிடைக்கின்றன. அங்கு தியானத்தின் மூலம் நல்ல அமைதி கிடைப்பது போல பயில்பவர்கள் உணர்கிறார்கள். ஆனால் தேனிலவு முடிந்து இயல்பு வாழ்க்கையைத்
தொடங்கும் போது சில கசப்புகளையும், சிக்கல்களையும் உணர ஆரம்பிக்கிற தம்பதியர் போல தினசரி வாழ்வுக்குத் திரும்பும் போது தியானப் பயிற்சியாளர்களும் தியானத்துக்கு அனுகூலம் இல்லாத சூழ்நிலையை உணர ஆரம்பிக்கிறார்கள்.
எனவே தான் சிலர் "நான் அங்கு சென்று பத்து நாட்கள் தியானம் பயின்ற போது புதிய மனிதனாக உணர்ந்தேன், புத்துணர்ச்சியுடன் திரும்பினேன், ஆனால் நாளாக நாளாக பழையபடியே ஆகி விட்டேன்," என்று சொல்லும்
நிலை ஏற்படுகிறது.
மூன்றாவது, சடங்குகளுக்கு அளவுக்கதிக முக்கியத்துவம் தந்து சத்தான விஷயங்களை புறக்கணிப்பது. உதாரணத்துக்கு சொல்ல வேண்டுமானால் தியானம் காலக் கணக்கிலேயே முழுவதும் அளவிடப்படுவதும், மதிப்பிடப்படுவதும். நான் தினமும் அரை மணி நேரம் தியானம் செய்கிறேன் என்று சொல்லி பெயருக்கு ஆண்டாண்டு காலம் தினமும் அரைமணி நேரம் தியானத்துக்காக அமர்ந்தாலும் பயன் இருக்காது. தொடர்ந்து தியானத்தில் ஈடுபடுவது என்பது வேறு, தொடர்ந்து தியானம் என்ற பெயரில் எந்திரத்தனமாய் அமர்ந்திருப்பது என்பது வேறு. தியானம் வெறும் சடங்காகும் போது அர்த்தமில்லாததாகப் போகிறது.
ஆரம்ப காலங்களில் அரைமணி நேரம் தியானப் பயிற்சி செய்வோமானால், அதில் ஒருசில வினாடிகள் மனம் தியானத்தில் லயிக்குமானால் அதுவே பெரிய வெற்றி.
உண்மையில் தியானம் வெற்றிகரமாக கைகூடினால் மனதில் வார்த்தைகளால் வர்ணிக்க முடியாத ஒருவித அமைதி கண்டிப்பாக உணரப்படும். அது தொடருமேயானால் உங்கள் முகத்தை மாற்றும். உங்கள் பேச்சை மாற்றும். நீங்கள் வாழ்க்கையைப் பார்க்கும் விதத்தை மாற்றும். நீங்கள் செயலாற்றும் முறையை மாற்றும். நீங்கள் அறிகிறீர்களோ இல்லையோ உங்களிடம் பழகுபவர்கள் அதை உங்களிடம் உணர ஆரம்பிப்பார்கள்.
தியானத்தில் நீங்கள் வேரூன்றிய பின் தியானத்தின் போது நீங்கள் அனுபவித்த அமைதி உங்கள் தினசரி வாழ்க்கையிலும் தொடரும். காலப்போக்கில் நீங்கள் எங்கும், எப்போதும் உங்கள் விருப்பப்படி தியான நிலைக்குள் புக முடியும் என்ற நிலை ஏற்படும். ஓஷோ சொல்வது போல சந்தையில் கூட நீங்கள் தியானத்தில் மூழ்க முடியும்.
ஆனால் இதெல்லாம் நிகழ்வது ஒரு நேர்கோடு போன்ற சீரான, தொடர்ச்சியான முன்னேற்றத்தில் அல்ல என்பதை நினைவு வைத்துக் கொள்ள வேண்டும். சில நாட்கள் நல்ல முன்னேற்றம் இருந்து திடீரென்று ஓரிரு நாட்கள் ஆரம்பத்தில் இருந்ததை விட மோசமான சறுக்கலை ஒருவர் சந்திக்க நேரிடலாம். மன அமைதி காணாமல் போய் தியானத்திற்கு எதிமாறான உணர்ச்சிக் கொந்தளிப்பை உணரலாம்.
தியான நிலைக்கே மனம் போகாமல் போகலாம். அதைக் கண்டு ஒருவர் பின்வாங்கி விடக்கூடாது. உள் மனதில் உறங்கிக் கிடந்த ஏதோ ஒரு குப்பையை மனம் மேல் தளத்துக்கு எறிந்திருக்கின்றது என்று அர்த்தம். அதைக் கவனியுங்கள். அதற்கான காரணம் உங்களுக்குள்ளே இருந்திருக்கின்றது என்பதை அங்கீகரியுங்கள். விருப்பு வெறுப்பில்லாமல் ஆராயுங்கள். பின் அது குப்பை என்பதை உணர்ந்து, தெளியுங்கள். இதை ஒழுங்காகச் செய்தீர்களானால் இனி அந்தக் குப்பை திரும்பி வந்து உங்களைத் தொந்திரவு செய்யாது. மறுபடி முன்னேற்றம் தொடரும். திடீரென்று இன்னொரு நாள் இன்னொரு குப்பை மேலே வரலாம். இதுவும் சறுக்கல் போல் தோன்றலாம். முதல் குப்பையைக் கையாண்டது போலவே இதையும் நீங்கள் கையாண்டு விலக்கி விடுங்கள். உள்ளே ஆழத்தில் உள்ள குப்பைகள் முழுவதுமாக நீக்கப்படும் வரை இந்த அனுபவங்கள் நிச்சயமாய் தொடரும்.
ஆனால் தியானத்துக்கான பயணத்தில் இது போன்ற அனுபவங்கள் சகஜம் என்பதைப் புரிந்து கொண்டு தியானத்தைத் தொடருங்கள். விடாமுயற்சியோடு தொடர்ந்தால் பின் உங்களுக்குக் கிடைக்கக் கூடிய பலன்கள் அளவிட முடியாதவை.

ஓஷோவும் ஜென் தியானமும்!


- என்.கணேசன்
தியான முறைகளைக் குறித்து ஓஷோ ரஜனீஷ் அளவுக்கு யாராவது பேசியும், எழுதியும் இருக்கிறார்களா என்பது சந்தேகமே. ஆரம்ப காலங்களில் வட இந்தியாவில் தத்துவப் பேராசிரியராகப் பணியாற்றிய அவர், கிழக்கத்திய மற்றும் மேற்கத்திய தத்துவங்களை மிக ஆழமாகப் படித்து பல வருடங்கள் அவற்றைக் கற்பித்தும் வந்தவர்.
அவருடைய விஞ்ஞான பைரவா தந்த்ரா புத்தகத்தில் 112 வகை தியானங்களை விவரித்திருக்கிறார். பண்டைய காலத்தில் பின்பற்றப்படுத்தப்பட்ட பல தியானங்களை புதிய மனவியல் கண்டுபிடிப்புகளுக்கு ஏற்ப மாற்றி தன்னுடைய தியான மையங்களில் அறிமுகப்படுத்தியவர் அவர். அந்த தியான முறைகளுக்கு அமெரிக்கா போன்ற மேலை நாடுகளில் நல்ல வரவேற்பும் இருந்தது.
"தியான முறைகளை முறைப்படி கற்று அதைச் சில நாட்கள் செய்து பாருங்கள். உங்கள் தன்மைக்கு ஏற்ற தியானங்களை மட்டும் முயன்று பாருங்கள். சில நாட்களில் உங்களிடம் எந்த நல்ல மாற்றத்தையும் ஏற்படுத்தா விட்டால் அது உங்களுக்கு ஏற்றதல்ல. அதை விட்டு விட்டு அடுத்த தியானத்தை ஆரம்பியுங்கள். மாறாக சில நாட்களில் உங்களுக்குள் நல்ல மாறுதலை நீங்கள் உணர்ந்தீர்களானால், அதை மிகவும் ஆர்வத்துடனும், அக்கறையுடனும் தொடருங்கள். அது பல அற்புதங்களை உங்களுக்குள் ஏற்படுத்தும்," என்று சொல்கிறார் ஓஷோ.
ஓஷோ ஏராளமான தியானங்களை விளக்கி இருந்தாலும் ஜென் பௌத்தத்தை அடிப்படையாகக் கொண்டிருக்கும் தியானம் ஒன்று அவர் உபதேசித்த தியானங்களுள் பிரதானமானது. அந்த தியானத்திற்கு அடிப்படையான சில விஷயங்கள் என சிலவற்றை ஓஷோ சொல்கிறார்.
முதலில் ஜென் தியானம் செய்யும் இடத்தை மிகவும் முக்கியமாகக் கருதுகிறார். அது இயற்கையழகு மிகுந்த ஆரவாரமற்ற அமைதியான இடமாக இருப்பது நல்லது என்கிறார். (புனே போன்ற பெருநகரங்களில் இருக்கும் ஓஷோவின் தியான
மையங்கள் இயற்கையான அழகான சூழ்நிலைகளுக்குப் பெயர் போனவை.) அப்படி இல்லாவிட்டால் தினமும் வீட்டிலேயே ஒரு அறையில் தொடர்ந்து தியானம் செய்வது நல்லது என்கிறார். தொடர்ந்து தியானம் செய்யும் அந்த இடம் தியான அலைகள்
நிறைந்திருக்குமாதலால் நாட்கள் செல்லச் செல்ல தியான நிலை வேகமாகக் கைகூடும் என்கிறார் அவர்.
அடுத்ததாக உட்காரும் விதம் சௌகரியமாக இருப்பதும் மிக முக்கியம். உடல் அசௌகரியப்பட்டால் மனம் அதையே எண்ணியபடி இருக்கும், தியானம் கைகூடாது. உடல் பற்றிய நினைவே வராத அளவு நல்லது என்கிறார்.
ரிலாக்சாக இருப்பது அடுத்த முக்கியமான விஷயம். மனதோடு போராடுவது, மனதை அடக்க முயல்வது போன்றவை எதிர்மாறான விளைவுகளையே ஏற்படுத்தும் என்பதால் அதைக் கைவிடுவது நலம் என்கிறார்.
ஜென் பௌத்தம் ஒருவனை உள்நோக்கிப் பயணம் செய்யச் சொல்கிறது. உள்ளே நடக்கும் அனைத்திற்கும் ஒரு பார்வையாளனாக இருக்க வலியுறுத்துகிறது. எண்ணங்களை எந்த விதமானமான தணிக்கைகளும், தீர்ப்புகளும் இன்றி கவனிப்பது முக்கியம்.
இனி இந்த எளிய தியான முறைக்குச் செல்லலாம்.
1) அமைதியான இடத்தில் சௌகரியமாக அமர்ந்து கொள்ளுங்கள்.
2) இயல்பாக மூச்சு விட்டு மூச்சு சீராகும் வரை மூச்சில் கவனம் செலுத்துங்கள்.
3) இனி உங்கள் எண்ணங்களை விருப்பு வெறுப்பு இல்லாமல் கண்காணியுங்கள். இந்த எண்ணம் நல்லது, இந்த எண்ணம் கெட்டது என்ற பாகுபாடுகள் வேண்டாம். வெறுமனே கவனியுங்கள். உங்கள் எண்ணங்களுக்கு நீங்கள் பார்வையாளனாக
இருங்கள்.
4) கூர்மையாக கவனிக்கப்பட, கவனிக்கப்பட மனதின் எண்ணங்களின் எண்ணிக்கை, வேகம் குறைய ஆரம்பிக்கும். ஒரு பார்வையாளனின் தொடர்ந்த கண்காணிப்பில் எவர் செயல்களும் சற்று குறையவே செய்யும். மனமும் அதற்கு விதிவிலக்கல்ல.
5) ஒரு எண்ணம் மனதில் எழுகிறது. அதைக் கவனிக்கிறீர்கள். இன்னொரு எண்ணம் எழுகிறது. அதையும் கவனிக்கிறீர்கள். எண்ணங்கள் குறையக் குறைய இன்னொரு அழகான அனுபவமும் நிகழும். அது என்ன தெரியுமா? ஒரு எண்ணம் முடிந்து
இன்னொரு எண்ணம் எழுவதற்கு இடையே உள்ள இடைவெளி. அதையும் கவனியுங்கள். அந்த இடைவெளியில் தான் மனம் மௌனமாகிறது. அது தான் மனமில்லா நிலை. அது மிக அழகான அனுபவம்.
6) எண்ணம் - இடைவெளி - எண்ணம் - இடைவெளி என ஒவ்வொன்றையும் எந்த விமரிசனமும் இன்றி கவனியுங்கள். ஆரம்பத்தில் சில மைக்ரோ வினாடிகள் தான் அந்த இடைவெளி இருக்கும். உங்கள் தியானம் ஆழமாக ஆழமாக அந்த இடைவெளிகளின் கால அளவும் அதிகரிக்கும். அந்த மனமில்லா நிலை தான் தியானத்தின் உச்சக்கட்டம்.
7) ஆனால் இடைவெளிகளையே அதிகம் நீங்கள் எதிர்பார்த்தால் தோற்றுப் போவீர்கள். ஏனென்றால் இடைவெளியின் மீது உங்களுக்கு விருப்பம் ஏற்பட்டு விட்டது என்றால் விருப்பு வெறுப்பற்ற பார்வையாளனாக இருக்க உங்களுக்கு
முடியாது. அது முடியா விட்டால் தியானமும் நிகழாது.
8) எண்ணம் எழுவதைக் கவனிப்பதும் ஒன்று தான். இடைவெளி வருவதைக் கவனிப்பதும் ஒன்று தான் என்கிற சமமான மனோபாவமே இங்கு முக்கியம். சூரிய ஒளியை ரசிக்கிறீர்கள். அடுத்ததாக மேக மூட்டம் வருகிறது. அதையும்
ரசிக்கிறீர்கள். இதில் நீங்கள் எதையும் தேர்ந்தெடுப்பதில்லை. நிகழ்வதைக் கவனிக்கும் சம்பந்தமில்லாத பார்வையாளனாக இருக்கிறீர்கள். இது தான் சரியான மனநிலை.
9) தியானம் ஆழப்பட்ட பின் பேரமைதியை நீங்கள் உணர ஆரம்பிப்பீர்கள். விருப்பு வெறுப்பில்லாத அந்த பார்வையாளனின் மனோபாவம் உங்களிடம் உறுதிப்பட ஆரம்பிக்கும். அது தியான சமயங்களில் பூரணமடைந்தால் மற்ற நேரங்களிலும்
உங்களிடம் தங்க ஆரம்பிக்கும். தினசரி வாழ்க்கையே தியானம் ஆக ஆரம்பிக்கும். ஆரவாரங்களுக்கு நடுவேயும் நீங்கள் தியான நிலையில் இருக்க முடியும். ஜென் பௌத்தத்தின் குறிக்கோளே அது தான்.
மிக எளிதாகத் தோன்றும் இந்த தியானத்தைப் பயிற்சியாக செயல்படுத்துகிற போது அந்த அளவு எளிதானதாக இருப்பதில்லை என்பது அனுபவம். ஆனால் விடா முயற்சியோடு தொடர்பவர்கள் கண்டிப்பாக இதில் வெற்றி அடைய முடியும்.
தேவையான அளவு தியான முறைகளைச் சொல்லி விட்டதால் அவற்றை இத்துடன் நிறுத்திக் கொள்வோம்.

ஹாரா தியானம்


 என்.கணேசன்
(முன்குறிப்பு: இயன்றவரையில் எளிமையாக இந்த தியான செய்முறை விளக்கப்பட்டிருந்தாலும், தகுந்த பயிற்சியாளர்களிடம் இருந்து இந்த தியானத்தைக் கற்றுக்கொள்ளுங்கள்.)
ஹாரா என்பது மையம் என்ற பொருளைத் தரும் ஜப்பானியச் சொல். இது தொப்புளுக்குக் கீழ் இரண்டு விரல் அகலம் கழித்து இருக்கும் பகுதியைக் குறிக்கும். இது மணிப்புரா சக்ரா சக்தி மையத்தைக் குறிக்கும். இது உடலின் வலிமைக்கு முக்கிய மையமாக கருதப்படுகிறது. ஒருவன் இந்த சக்தி மையத்தில் கவனத்தைக் குவித்து தியான நிலையில் இருக்கும் போது எல்லையற்ற சக்தியுடையவனாக இருக்கிறான் என்கிறார்கள். அய்கிடோ (Aikodo) என்ற ஒரு வகை ஜப்பானிய மல்யுத்ததில் இந்த ஹாரா பகுதி மிக முக்கியத்துவம் வகிக்கிறது.
அய்கிடோவை உலகத்துக்கு அளித்த Morihei Ueshiba ஹாராவில் தன்னை ஐக்கியமாக்கி இருக்கும் கலையில் இணையற்ற நிபுணராக விளங்கினார். அப்படி ஒரு முறை அவர் இருக்கையில் சக்தி வாய்ந்த ஐந்தாறு மனிதர்கள் என்ன முயன்றும் அவரைத் தூக்கவோ, அவரை நகர்த்தவோ பிரம்மப் பிரயத்தனம் செய்தும் முடியாமல் தோற்றுப் போனார்கள்.
இன்னொரு நிகழ்ச்சியில் ஒரு சேர ஆறு பயிற்சி வீரர்கள் அவரைத் தாக்க வந்த போது எந்த வித அலட்டலும் இல்லாமல்
அந்த ஆறு பேரையும் ஒவ்வொருவராக அவர் தூக்கி எறிந்ததாகச் சொல்லப்படுகிறது. இது கேட்பதற்கு தமிழ் சினிமா கதாநாயகன் போடும் சண்டைக் காட்சி போல தோன்றினாலும் பல பேர் முன்னிலையில் நடத்திக்காட்டப்பட்ட சம்பவங்கள்.
பண்டைய மருத்துவ சிகிச்சை முறைகளிலும் ஹாரா பகுதி மிகுந்த முக்கியத்துவம் பெற்றிருந்தது. உடலின் எல்லா நோய்களையும் கண்டறிய வயிற்றுப் பகுதியே அதிகம் ஆராய்ச்சிக்கு உட்படுத்தப்பட்டது. உடலுறுப்புகளின் ஒருங்கிணைப்பு
முறையாக இல்லாவிட்டாலும் அதை ஹாரா பகுதி மூலம் அக்காலத்தில் கண்டறிந்தார்கள். அதை சரி செய்யவும் ஹாரா பகுதியை பலப்படுத்தவும் மூச்சுப் பயிற்சியும், தியானமும் பயன்படுத்தப்பட்டன. இனி ஹாரா தியானம் செய்யும் முறையைக் காண்போம்.
1) தரையில் சம்மணமிட்டோ, அல்லது நாற்காலியிலோ சௌகரியமாகவோ நிமிர்ந்து அமர்ந்து கொள்ளுங்கள்.
2) படத்தில் காட்டியுள்ளது போல் உங்கள் வலது கைவிரல்கள் மீது இடது கைவிரல்களை வைத்து இரு பெருவிரல்களும் லேசாகத் தொட்டுக் கொண்டிருக்கும்படியாக வைத்துக் கொள்ளுங்கள். இப்போது உங்கள் கைகள் ஒரு நீள்வட்டத்தை
உருவாக்கி இருக்கும். மிகவும் பவித்திரமான ஒரு பொருளை அந்தக் கைகளில் வைத்திருப்பது போல் கவனத்துடன் இந்த முத்திரையை வைத்திருங்கள். இந்த முத்திரை மனதை அமைதியாக வைத்திருக்க மிகவும் உதவுவதாகக் கருதப்படுகிறது.
உங்கள் கைகள் உங்கள் அடிவயிற்றை லேசாக ஒட்டியபடி இருக்கட்டும்.
3) உங்கள் கவனம் உங்கள் மூச்சில் இருக்கட்டும். மூச்சு சீராகும் வரை முழுக் கவனமும் மூச்சிலேயே வைத்திருங்கள்.
4) அமைதியை உள்மூச்சில் பெறுவதாகவும், டென்ஷன், கவலை போன்றவற்றை வெளிமூச்சில் வெளியே அனுப்பி விடுவதாகவும் எண்ணிக் கொள்ளுங்கள். சில மூச்சுகளில் மூச்சு சீராகி மனமும் அமைதி அடைந்தவுடன் உங்கள் கவனத்தை ஹாரா மீது திருப்புங்கள்.
5) ஹாரா பகுதியில் ஒரு பொன்னிற பந்து இருப்பதாகக் கற்பனை செய்து கொள்ளுங்கள். அந்தப் பந்தை சக்திகளின் இருப்பிடமாக எண்ணிக் கொள்ளுங்கள். உங்கள் உள்மூச்சில் அந்தப் பொன்னிறப்பந்து விரிவடைவதாகவும், வெளிமூச்சில் பழைய நிலைக்கு சக்தி பெற்று திரும்புவதாகவும் நினைத்துக் கொள்ளுங்கள்.
6) இப்படி நீங்கள் செய்யச் செய்ய உங்கள் வயிற்றுப் பகுதியில் உள்ள இறுக்கம் எல்லாம் குறைந்து ஒரு விதமாக லேசாவதை நீங்கள் உணர ஆரம்பிப்பீர்கள்.
7) இந்தப் பயிற்சியால் ஹாரா அல்லது மணிப்புரா சக்ரா கழிவுகள் நீங்கி சுத்தமடைவதாகவும், பெரும் பலம் பெறுவதாகவும் உணருங்கள்.
8) ஆரம்பத்தில் உருவகப்படுத்தி செய்த இந்த தியானம் பயிற்சியின் காலப்போக்கில் உண்மையாகவே ஹாராவின் சக்தியை பலப்படுத்தி அசைக்க முடியாத மன அமைதியையும், மன உறுதியையும் ஏற்ப்படுத்த ஆரம்பிக்கும்.
இந்த தியானம் மன அமைதியை மட்டுமல்லாமல் உடல் வலிமைக்கும் மிகவும் உதவுகிறது. நாம் முன்பு கண்டபடி Aikodo வில் மட்டுமல்லாமல் உடலின் பொதுவான பலத்துக்கும், இந்த ஹாரா தியானம் பெருமளவு உதவுகிறது.
ஹாராவில் மனதைக் குவித்து ஐக்கியமாகி இருக்கும் சமயங்களில் எந்த வித தாக்குதலிலும் தளர்ந்து விடாமலும், நிலை குலைந்து விடாமல் இருத்தல் மிக சுலபமாகிறது.
மன அமைதி, உடல் வலிமை இரண்டையும் தரவல்ல ஹாரா தியானத்தை தகுந்த பயிற்சியாளர்கள் ஆலோசனையுடன் நீங்களும் செய்து பார்த்து பலனடையலாமே!

திபெத்திய தியானம்


- என்.கணேசன்
இந்திய யோகிகளைப் போலவே திபெத்திய லாமாக்களும் தியான முறைகளில் நல்ல தேர்ச்சி பெற்றிருந்தார்கள். அவர்களைப் பொறுத்தவரை தியானம் என்பது மனிதன் தன் உண்மையான தன்மையைக் கண்டுணர்வது தான். அப்படிக் கண்டுணர்ந்த பின் மகத்தான அற்புதங்களை மனிதன் நிகழ்த்திக் காட்ட முடியும் என்றாலும் அதெல்லாம் உண்மையில் அவர்களுக்கு இரண்டாம் பட்சமாகவே இருந்தது.
புத்த மதத்தின் வஜ்ராயனா பிரிவைப் பின்பற்றி வந்த அவர்கள் மனிதன் தன் உண்மையான தன்மையை அறிய அமைதியையும், தெளிந்த அறிவையும் பெற்றிருத்தல் அவசியம் என்று கருதினார்கள். எண்ணங்கள் பெரும்பாலும் அந்த இரண்டையும் இருட்டடிப்பு செய்து விடுவதால் தியானம் மூலம் எண்ணங்களை நீக்கி அமைதியையும், அறிவுத் தெளிவையும் பெற்று உண்மையை அறிய வலியுறுத்தினார்கள். அப்படி மனிதன் தன் உண்மைத் தன்மையை அறிந்து கொண்டால் பின் அவன் எல்லையற்ற ஆனந்தத்தையும் நன்மையையும் தன் இயல்பென உணர்ந்து மெய்ஞானம் பெறுவான் என்று நம்பினார்கள்.
தியானத்தில் நல்ல தேர்ச்சி பெற்ற திபெத்திய லாமாக்கள் தோற்றத்தில் இளமையாக இருப்பதையும், சுபாவத்தில் மாறாத அமைதியுடன் இருப்பதையும், பல சக்திகளைப் பெற்றிருந்ததையும் அங்கு சென்று அவர்களைக் கண்ட வெளிநாட்டினர் பலரும் கண்டு அதிசயித்திருக்கிறார்கள். அதில் ஆச்சரியப்பட ஒன்றுமில்லை. திபெத்திய தியானம் மட்டுமல்ல, எந்த தியானத்திலும் தேர்ச்சி பெற்று அதை ஒழுங்காகத் தொடர்ந்து செய்து வருபவர்கள் யாராக இருந்தாலும் அப்படி ஆவது இயல்பே. இனி திபெத்திய தியான முறையைப் பார்ப்போம்.
தியானம் செய்யப் பொதுவாக அதிகாலை நேரம் சிறந்ததாக திபெத்திய லாமாக்கள் கருதுகிறார்கள். அல்லது எழுச்சியூட்டும் மனநிலையுள்ள சமயங்களும், ஆர்வமுள்ள நேரங்களும் தியானத்துக்கு உகந்தது என்கிறார்கள். கவலையோ, வேறு
பிரச்னைகளோ உள்ள சமயங்களில் தியானம் கைகூடாது என்பதால் அதை சரி செய்துவிட்டு அல்லது அது குறித்து ஒரு தீர்மானத்துக்கு வந்து விட்டு தியானத்தில் அமரச் சொல்கிறார்கள்.
1) தரையில் சம்மணமிட்டோ, அல்லது நாற்காலியிலோ சௌகரியமாக நிமிர்ந்து அமர்ந்து கொள்ளுங்கள். கைகளைத் திறந்த நிலையில் இடது கையின் மேலே வலது கை இருக்குமாறு அடிவயிற்றருகே (தொப்புளுக்கு இரண்டு அங்குலம் கீழே) வைத்துக்
கொள்ளுங்கள். இரு கைகளின் கட்டைவிரல்கள் நுனிகளும் ஒன்றை ஒன்று தொட்டு ஒரு முக்கோணத்தை உண்டாக்கும்படி முத்திரையை உருவாக்குங்கள்.
2) கழுத்தை லேசாகக் கீழே சாய்க்கவும். உங்கள் நுனி நாக்கு வாயினுள் மேல் பற்களின் வேர் பாகத்தைத் தொட்டபடி இருக்கட்டும். கண்களை தாழ்த்தி உங்களுக்கு முன்னால் உள்ள தரையைப் பார்த்தபடி பார்வையை நிறுத்துங்கள். (கிட்டத்தட்ட பாதி கண்கள் மூடியது போல் இருக்கும்). இயல்பாக மூச்சு விடுங்கள். உங்கள் கவனம் மூச்சில் இருக்கட்டும்.
3) ஓரளவு மனம் அமைதியடைந்தவுடன் உங்கள் மனதைக் குவிக்க ஏதாவது ஒரு பொருளைத் தேர்ந்தெடுத்து மனத்திரையில் பாருங்கள். அது ஒரு புனிதப் பொருளாகவோ, உங்களுக்கு உயர்ந்ததாகத் தோன்றும் பொருளாகவோ இருப்பது நல்லது.
திபெத்தியர்கள் பெரும்பாலும் புத்தர் சிலையைத் தேர்ந்தெடுக்கிறார்கள். அது சிலுவையாகவோ, அழகான ஒரு பூவாகவோ, உங்கள் குருவின் உருவமாகவோ, உங்கள் தெய்வச்சிலையாகவோ, ஒரு அழகான விளக்கின் தீப ஒளியாகவோ கூட இருக்கலாம்.
4) இனி உங்கள் முழுக் கவனத்தையும் மூச்சிலிருந்து நீங்கள் தேர்ந்தெடுத்த பொருளிற்கு மாற்றுங்கள். அந்தப் பொருளை மனக்கண்ணில் இடைவிடாது பார்ப்பதும், மிகத் தெளிவாகப் பார்ப்பதும் தான் உங்கள் நோக்கம்.
5) மனத்திரையில் அப்படித் தெளிவாகப் பார்ப்பது கண்களைப் பாதி திறந்த நிலையில் உள்ள போது கஷ்டமாகத் தெரிந்தால் கண்களை மூடிக்கொள்ளலாம். ஆனால் மனக்கண்ணில் தெளிவாகவும், இடைவிடாதும் காண்பது முடியாமல் போய் உறங்கி
விடவும் வாய்ப்புண்டு. அதைத் தவிர்க்க வேண்டும்.
6) கண்களை மூடிய பிறகு நீங்கள் தேர்ந்தெடுத்த பொருளையே முழுமையாகப் பார்க்க வேண்டும். அதற்குப் பதிலாக சிவப்போ, கருப்போ நிறங்களை நீங்கள் கண்டால் கண்களை மூடியும் கவனம் புறக்கண்ணிலேயே இன்னமும் இருக்கிறது என்று
அர்த்தம். நீங்கள் உங்கள் கவனத்தை மேலும் கூர்மையாக்கி, நூறு சதவீத கவனத்துடன் நீங்கள் தேர்ந்தெடுத்த பொருள் மீது கொண்டு வாருங்கள்.
7) மனம் வேறு எண்ணங்களில் சஞ்சரிக்க ஆரம்பித்தால் அதை உணர்ந்தவுடன் மீண்டும் அதை நீங்கள் தியானத்திற்காக தேர்ந்தெடுத்த பொருள் மீதே கொண்டு வாருங்கள். அதைக் கூடுமான அளவு முழுக் கவனத்துடன் பாருங்கள். அதன்
சிறப்பு அம்சங்களை உன்னிப்பாகக் கவனியுங்கள். உதாரணத்துக்கு நீங்கள் தேர்ந்தெடுத்தது புத்தர் சிலை என்றால் அந்தப் புத்தர் முகத்தில் தவழும் அந்த பேரமைதியைக் கவனியுங்கள். அவரது புன்னகையைக் கவனியுங்கள். அவர் அமர்ந்துள்ள நிலையைக் கவனியுங்கள். அவர் விரல்களின் முத்திரையைக் கவனியுங்கள். இப்படி அந்த சிலையைப் புதுப்புது கண்ணோட்டத்துடன் பாருங்கள். பார்ப்பதை சுவாரசியமாக்குங்கள். ஆனந்தமாக்குங்கள். ஒரு நிலையில் புத்தரே உங்கள் முழுக்கவனத்தையும் ஆட்கொள்வார். உங்களையே கூட நீங்கள் மறந்து புத்தரே எல்லாமாகும் போது தியானம் முழுமையாகிறது. அது சில வினாடிகளே நீடிக்கலாம். மறுபடி மனம் தியான நிலையை இழக்கலாம். ஆனால் அந்த வினாடிகள் தியானம் என்ன என்பதை உங்களுக்கு உணர்த்தி இருக்கும். ஒரு மிகப்பெரிய அனுபவத்தின் முதல் கணத்தை நீங்கள் அனுபவித்திருப்பீர்கள்.
தியானத்தில் மேற்கொண்டு பயணிக்க பயணிக்க அந்த சில வினாடிகள், பல வினாடிகளாகும். நிமிடங்களாகும். உங்கள் கவனம் கூர்மையடையும். தெள்ளத் தெளிவடையும். மனம் அமைதியடையும். சக்தி அடையும். மிக உயர்ந்த சாதனையாளர்கள் அந்த தியான நிலையை தினசரி வாழ்க்கைக்கே கொண்டு வர முடியும். சாதாரண தினசரி செயல்களைக் கூட தியானம் போல் செய்ய முடியும்.
ஒரு ஜென் ஞானி சொல்வார். "நான் சாப்பிடும் போது சாப்பிடுகிறேன். நான் உறங்கும் போது உறங்கும் போது உறங்குகிறேன்". மேற்போக்காகப் பார்க்கையில் இதில் என்ன அதிசயம் இருக்கிறது என்று தோன்றலாம். ஆனால் யோசித்துப் பார்த்தால் இது எவ்வளவு சிரமமான விஷயம் என்பது புரியும். சாப்பிடும் போது பல சிந்தனைகளுடன் எந்திரத்தனமாய் சாப்பிடுகிறோம். உறங்கும் போதோ பல கோடி சிந்தனைகள். இப்படி இருக்கையில் அதை அதை செய்யும் போது அதிலேயே நூறு சதவீதம் இருக்க முடியுமானால் அதை விடப் பெரிய வெற்றி உண்டோ?