மனச்சோர்வு நோய் பற்றிய விளக்கம்
மனச்சோர்வு நோயுள்ளவர்கள் , அவர் சார்ந்த உறவினர்கள் மற்றும் நண்பர்களுக்காக இந்த தாள் தயாரிக்கப்பட்டு உள்ளது.
இதை படித்தவுடன் மனச்சோர்வு நோய் பற்றி தெளிவு பெற்று அதுவும் ஒரு வகையான நோய் என்று நீங்கள் அறிவீர்கள் என்று நம்புகிறோம்.
நம்மில் பலருக்கும் அவ்வப்பொழுது மனச்சோர்வு ஏற்படுவது இயற்கையே. இது சில மணி நேரமோ அல்லது சில தினங்களோ இருந்து விட்டு நம்மை அறியாமலே நீங்கி விடும்.
ஆனால் மனச்சோர்வு நோய் உள்ளவர்களுக்கு இத்தகைய உணர்வு பல வாரங்கள் மற்றும் மாதங்கள் நீடிக்கும்.
இதனால் அவர்களின் தினசரி வாழ்க்கை, குடும்ப வாழ்க்கை மற்றும் அலுவலக வேலை எல்லாமே பாதிப்படையும்.
மனச்சோர்வு நோய்க்கான அறிகுறிகள் :
* 1. எப்பொழுதும் சோகமாக இருத்தல் ( மதியம மற்றும் சாயந்திர வேளைகளில் இது சற்றே மாறலாம் )
*
o 2. வாழ்க்கை மேல் பிடிப்பு இல்லாமை .எதிலும் நாட்டம் மற்றும் மகிழ்ச்சி இல்லாமை.
o 3. சிறு விசயங்களில் கூட முடிவு எடுக்க முடியாத நிலை.
o 4. முன்பு எளிதாக செய்த வேலைகளை கூட செய்ய முடியாத நிலை.
o 5. எப்பொழுதும் உடல் சோர்வாக இருத்தல்
o 6. மனம் அமைதி இல்லாமல் சஞ்சலத்துடன் இருத்தல்
o 7. பசியின்மை. அதனால் உடல் எடை குறைதல். ( மிக சிலருக்கு அதிகமான பசி மற்றும் உடல் எடை கூடுதல் இருக்கலாம் )
o 8. தூக்கமின்மை. (தூக்கம் வருவதிற்கு அதிக நேரம் பிடிப்பது, முழு தூக்கம் கிடைக்காமல் அதிகாலை வேளைகளில் விழித்தல், முழு திருப்தி தராத தூக்கம் )
o 9. தாம்பத்திய உறவில் நாட்டமின்மை.
o 10. தன்னம்பிக்கை இல்லாமை,
o 11. தாழ்வு மனப்பான்மை, எதிர்காலத்தை பற்றிய வெறுமையான உணர்வு,
o 12. எளிதில் எரிச்சல் அடைதல்,
o 13. நண்பர்கள் மற்றும் உறவினர்களை சந்திக்கும் ஆர்வம் குறைந்து தனிமையை நாடுதல்.
o 14. வாழ்வதில் நாட்டமில்லாமல் தற்கொலை எண்ணம் மிகுதல், அதற்குரிய முயற்சிகளை செய்தல்.
o 15. அடிக்கடி தலைவலி மற்றும் உடம்பு முழுவதும் வலி, குடைச்சல் –இவை கூட மனச்சோர்வு நோய்க்கான அறிகுறிகளாக இருக்கலாம்.
உங்களுக்கு மனச்சோர்வு நோய் உள்ளது என்பதை அறியவே பல வாரங்களோ அல்லது மாதங்களோ ஆகலாம் .
நிறைய நேரங்களில் நீங்கள் அறிவதற்கு முன்பே , உங்கள் நெருங்கிய உறவினர்கள் மற்றும் நண்பர்கள், (உங்கள் நடத்தையில் உள்ள மாற்றங்களை அறிந்து கொண்டு ) இதனை உங்களிடம் தெரிவிக்கும் நிலை வரலாம்.
மனச்சோர்வு நோய் எதனால் ஏற்படுகிறது?
பெரும்பான்மையான நேரங்களில் நம்மை மனதளவில் பாதிக்கும் நிகழ்ச்சிகள் மற்றும் மன உளைச்சல் உருவாக்கும் விஷயங்கள் தான் மனச்சோர்வு நோய் உருவாவதற்கு காரணமாகிறது.
சில வகையான உடல் உபாதைகள் கூட மனச்சோர்வு நோயை உண்டாக்கும்.
சில நேரங்களில் எந்த விதமான மன உளைச்சலோ அல்லது உடல் உபாதைகளோ இல்லாத நேரத்திலும் மன சோர்வு நோய் உருவாகலாம்.
மனச்சோர்வுநோய் ஏற்படுவதற்கான காரணங்கள்:
குடும்ப சூழ்நிலைகளினால் ஏற்படும் பாதிப்பு. ( குடும்ப உறவில் சச்சரவு, மணவாழ்க்கையில் பிரச்னை, பணபிரச்சனை அலுவலகம் மற்றும் நண்பர்களுடன் பிரச்னை இவையாவும் இதில் அடங்கலாம் )
சிலவகையான உடல்நலகேடுகள் (தை ராய்ட் நோய் பாதிப்பு , சில வகையான வைரஸ் நோய்கள் தாக்குதலக்கு பின், சில வகையான புற்று நோய் பாதிப்புக்கு பின்னால், மாரடைப்புக்கு பிறகு, மூளை பாதிப்புகளுக்கு பின்னால்), மனச்சோர்வு நோய் ஏற்படலாம் .
மேலே குறிப்பிட்டவை சில உதாரணங்களே .
மரபு வழியாகவும் மனச்சோர்வு நோய் வரலாம் . இதனால் சில குடும்பங்களில் அதிக பேருக்கு மனச்சோர்வு நோய் இருப்பதை காணலாம்.
குடிபழக்கம் அல்லது போதை பழக்கம் உள்ளவர்களுக்கு மனச்சோர்வு நோய் அதிகமாக வரலாம்.
மனச்சோர்வு நோய் உள்ளவர்கள் அதனை வெளியில் யாரிடமும் சொல்ல முடியாத நிலையில் மது பழக்கத்துக்கும் போதை பொருள் உபயோகத்திற்கும் அடிமை ஆவதற்கு நிறைய வாய்ப்புக்கள் உள்ளன.
ஆண்களை விட பெண்களை இந்த நோய் அதிகமாக பாதிக்கும்.
உங்களுக்கு மனச்சோர்வு நோய் உள்ளதா?
நீங்கள் செய்ய வேண்டியது இதோ:
உங்கள் நோய்க்கு உரிய அறிகுறிகளை உங்கள் நெருங்கிய உறவினர்களோ அல்லது நண்பர்களிடமோ மனம் திறந்து கூறுங்கள்.
இதன் மூலம் அவர்களுக்கு உங்கள் செயல் மற்றும் நடவடிக்கைகளில் உள்ள மாறுதல்கள் மனச்சோர்வு நோயினால் ஏற்பட்டது என்று புரியும்.
நீங்கள் தினசரி செய்ய வேண்டிய வேலைகளை (மனம்
மற்றும் உடல் சோர்வினால் ) பிறகு செய்து கொள்ளலாம் என்று ஒதுக்காமல் முடிந்த வரை அப்பொழுதே செய்யப்பாருங்கள். ( அதிக நேரம் எடுத்தாலும் ).
பசியுணர்ச்சி இல்லாவிட்டாலும் அந்தந்த வேளைகளில் நல்ல சத்தான உணவு வகைகளை உட்கொள்ளுங்கள்.
நாள்தோறும் சரியான நேரத்தில் படுக்கைக்கு சென்று, சரியான நேரத்தில் எழுந்து விடுங்கள்.
தூக்கம் வராவிட்டாலும் படுக்கையில் படுத்துக்கொண்டே புத்தகம் படித்துகொண்டோ, தொலைகாட்சி பார்த்துகொண்டோ இருங்கள்.
தூக்கம் வரவில்லை என்பதற்காக படுக்கையை விட்டு எழுந்து செல்லாதீர்கள்)
காலையில் விழித்தவுடன் உடனே எழுந்து விடுங்கள்.
உடல் மற்றும் மன அசதியினால், தூக்கத்தில் திருப்தி இல்லாத நிலை இருந்தாலும் கூட மேலும் படுக்கையில் படுக்காமல் உடனே எழுந்து விடுங்கள்.
இப்படி செய்தால் சில மணி நேரங்களில் நீங்கள் ஒருவாரான மனமலர்ச்சி அடைவீர்கள்.
அப்படி செய்யாமல் படுக்கையில், உறங்கினால், தூக்கமும் வராமல் மேலும் உடல் மற்றும் மனச்சோர்வை அடைவீர்கள்.
மனச்சோர்வு நோயினால், உருவாகும் தாம்பத்திய உறவின் மீதான நாட்டமின்மை, அந்நோய் குணமானவுடன் சரியாகி விடும். அதனால் இதை பற்றி மிகவும் கவலை கொள்ள வேண்டாம்.
தாங்களாகவே மனச்சோர்வுக்கு மருந்தாக மது அருந்த வேண்டாம்.
அது மனச்சோர்வை மேலும் அதிகப்படுத்தும் .
உங்கள் மனச்சோர்வுக்கு காரணம் ஆக உள்ள குடும்ப பிரச்னைகள், பணபிரச்னைகளை தீர்க்க முயற்சி செய்யுங்கள்.
ஒரு நாளில் அரை மணியோ அல்லது ஒரு மணியோ உடல் பயிற்சி செய்யுங்கள். இது நடை பயிற்சியோ அல்லது உங்களுக்கு பிடித்த விளையாட்டாகவோ இருக்கலாம்.
மேலும் செய்ய வேண்டியது:
*
உங்கள் மருத்துவரிடம் சென்று, உங்கள் நோய் அறிகுறிகளை கூறினால், அவர் உங்களுக்கு மனச்சோர்வு நோய் உள்ளதா, அப்படி இருந்தால் எத்தகைய தீவிரத்தில் உள்ளது என்பதை கண்டறிந்து உடனே மருத்துவம் செய்வார்.
*
தற்காலத்தில் இந்த நோயை குணமாக்க சிறந்த மருந்துகள் உள்ளன.
*
அவை உங்கள் நோயை போக்கி உங்களை பழைய மனிதர் ஆக்கும்.
உங்கள் மருத்துவர் சில சமயங்களில் உங்களை மன நல மருத்துவரிடம் கலந்து ஆலோசிக்க பரிந்து உரைப்பார்.
இந்த நோயை குணமாக்க மனப்பயிற்சியும் உதவும்.
இத்தகைய மன பயிற்சியை அதற்குரிய பயிற்சி பெற்ற செவிலியர்கலோ அல்லது மன நல வல்லுனர்களோ வழங்குவர்.
*
*
மனச்சோர்வு நோயை, நீங்கள் செய்த ஏதோ தவறினால் வந்தது என்று அணுகாமல் , ஒரு வகையான நோய் என்றும் , அது குணமாக்க வல்லது என்றும் புரிந்து கொண்டால் நீங்கள் விரைவிலேயே குணமடைவீர்கள்.
மனச்சோர்வு நோய் பற்றிய அறிமுகமே இது.
இது உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும் என்று நம்புகிறோம்