Wednesday, September 21, 2011

எட்கார் டீன் மிட்சலின் அனுபவம்


- என்.கணேசன்
ஆழ்மனதின் சக்திகளை விண்வெளியில் ஆராய்ந்த மனிதர் வேறு யாருமல்ல... நிலவில் காலடி எடுத்து வைத்த முதல் மனிதர்களில் ஒருவரான எட்கார் டீன் மிட்சல் தான். 22-06-1972 அன்று நியூயார்க் டைம்ஸ் பத்திரிக்கைக்கு அளித்த பேட்டியில் அவர் கூறினார்...
"அப்போலோ 14 விண்வெளிக்கலத்தில் நிலவுக்குப் போய் வருகையில் நான் உலகின் முதல் விண்வெளி ஆழ்மன ஆராய்ச்சியைச் செய்தேன். நட்சத்திரம், சிலுவை, வட்டம், நெளிவு வரி, சதுரம் ஆகிய ஐந்து சின்னங்களை 25 வரிசைகளில் தொடர்பில்லாமல் மாறி மாறி வைத்தேன். அதை அமெரிக்காவில் உள்ள நான்கு மனிதர்கள் யூகிக்க முயன்றார்கள். அந்த ஆராய்ச்சி வெற்றிகரமாக அமைந்தது. குருட்டாம் போக்கில் யூகித்து சொல்வதானால் 3000 தடவை செய்யும் யூகங்கங்களில் ஒரு முறை மட்டுமே சாத்தியமாகும் வெற்றியாக அது இருந்தது."
இளமையில் இருந்தே விஞ்ஞானத்திலும், மெய்ஞானம் மற்றும் ஆழ்மன சக்திகளிலும் மிகுந்த ஆர்வம் கொண்டவராக இருந்தவர் எட்கார் மிட்செல்.
பலரது ஆழ்மன ஆராய்ச்சிகளை ஆர்வத்துடன் கவனித்து வந்த அவருக்கு சந்திரனுக்குச் செல்ல வாய்ப்பு கிடைத்த போது அவரைப் போலவே ஆர்வம் கொண்ட நண்பர்கள் சிலர் இது போன்ற ஆராய்ச்சியை விண்வெளியில் ஏன் செய்து பார்க்கக் கூடாது என்று கேட்டனர். இது போன்ற சந்தர்ப்பம் கிடைப்பது அரிது என்ற அவர்களைப் போலவே எண்ணிய எட்கார் மிட்செல் ஒத்துக் கொண்டார்.
சந்திரனுக்குக் கிளம்புவதற்கு மூன்று வாரங்களுக்கு முன் நான்கு பேர் கொண்ட குழு அமைந்தது. அந்தக் குழுவில் இருவர் பௌதிக விஞ்ஞான ஆராய்ச்சியாளர்களான டாக்டர் பாய்ல் மற்றும் டாக்டர் மேக்சி. மற்ற இருவர் ஆழ்மன சக்திகள் கொண்டவர்கள். அவர்களில் ஒருவர் சிகாகோவில் தன் சக்திகளால் அக்காலத்தில் பிரபலமான ஓலோஃப் ஜான்சன்.
சந்திரனுக்குச் செல்லத் தேவையான ஆயத்தங்களில் முழுமையாக ஈடுபட்டிருந்த எட்கார் மிட்செலுக்கு நேரமின்மை காரணமாக அந்த ஆராய்ச்சிகள் எப்படி இருக்க வேண்டும் என்று அந்த நால்வருமே கலந்து தீர்மானித்தனர். எட்கார் மிட்சல் ஓரிரு முறை அவர்களிடம் சென்று அந்த ஆராய்ச்சி முறையில் மாதிரி பயிற்சிகளில் ஈடுபட்டார்.
அப்போலோ 14-ல் இருவர் உறங்குகின்ற நேரத்தில் ஒருவர் விண்கலத்தைக் கண்காணிப்பது என்று தீர்மானிக்கப்பட்டிருந்தது. எட்கார் மிட்செல் தான் உறங்குவதற்கு முன் சில நிமிடங்கள் ஆழமன ஆராய்ச்சிக்கு எடுத்துக் கொண்டார். ஒவ்வொரு வரிசையிலும் உள்ள சின்னங்களை மனதில் நினைத்து அதை பூமியில் உள்ள நண்பர்களுக்கு அனுப்ப ஒவ்வொரு சின்னத்துக்கும் 15 வினாடிகள் எடுத்துக் கொண்டார்.
இந்தத் தனிப்பட்ட ஆராய்ச்சியை வெளியுலகிற்குத் தெரியப்படுத்தும் எண்ணம் ஆரம்பத்தில் எட்கார் மிட்சலுக்கு இருக்கவில்லை. ஆனால் விண்கலம் பூமிக்கு வந்து விண்வெளியில் இருந்து அனுப்பிய தகவல்களும், பூமியில் பெற்ற தகவல்களும் சரிபார்க்கப்படும் முன்பே அவர்களது குழுவின் ஓலோஃப் ஜான்சன் பத்திரிகைகளுக்கு இந்த ஆராய்ச்சி பற்றி சொல்லி விட்டார். பின் வேறு வழியில்லாமல் எட்கார் மிட்சலும் அது பற்றி தெரிவிக்க வேண்டியதாயிற்று. பின் அந்த இரு தகவல்களையும் சரிபார்க்கையில் எட்கார் மிட்சல் நியூயார்க் டைம்ஸுக்குத் தெரிவித்தபடி அது வெற்றிகரமான அளவுக்குப் பொருந்தியே இருந்தது.
நாசா (NASA)வின் பல விஞ்ஞானிகளும், பொறியாளர்களும் தனித்தனியாக இந்த ஆழ்மன ஆராய்ச்சி பற்றி ஆர்வத்துடன் கேட்டுக் கொண்டார்கள் என்றாலும் வெளிப்படையாக அதைப் பற்றிப் பேசத் தயங்கினார்கள் என்று எட்கார் மிட்செல் நாசாவில் இருந்து ஓய்வு பெற்ற பின் ஒரு பேட்டியில் தெரிவித்தார்.
எது எப்படியோ அந்த விண்வெளிப் பயணம் எட்கார் மிட்சலுக்கு ஒரு மகத்தான அனுபவமாக இருந்தது. விண்வெளியில் அந்த இயற்கையின் பிரம்மாண்டத்தை கண்கூடாகத் தரிசிக்கையில் மனிதனின் வேற்றுமைகளும், குறுகிய எண்ணங்களும் அர்த்தமில்லாமலிருப்பதை அவரால் உணர முடிந்தது. அது போல ஆழ்மன ஆராய்ச்சிகளின் வெற்றிக்குப் பூமியில் பல மைல் தூரங்கள் ஒரு தடையல்ல என்பதைப் பல ஆராய்ச்சிகள் வெளிப்படுத்தி இருந்தாலும், பூமியைத் தாண்டியும் கூட அந்த அகண்ட இடைவெளி ஒரு பொருட்டல்ல என்பதை அவரால் அந்தப் பயண ஆராய்ச்சி மூலம் உணர முடிந்தது.
அவர் 1973ல் The Institute of Noetic Sciences (IONS) என்ற அமைப்பை ஏற்படுத்தினர். மனிதனின் ஆழ்மனம் பற்றியும், அதன் உணர்நிலைகள் பற்றியும் ஆராய்ச்சி செய்வதே அந்த அமைப்பின் பிரதான நோக்கமாக இருந்தது. இன்றும் கூட அந்த அமைப்பு கலிபோர்னியாவில் பல ஆராய்ச்சிகளில் ஈடுபட்டு வருகிரது என்பது குறிப்பிடத்தக்கது.
ஆழ்மன சக்தியைத் தன் தனிப்பட்ட வாழ்வில் எட்கார்மிட்செல் உணரும் சந்தர்ப்பமும் ஏற்பட்டது. அவர் சிறுநீரகத்தில் புற்றுநோய் ஏற்பட்டு விட அதை தொலைதூரத்தில் இருந்துவான்கூவரைச் சேர்ந்த ஆடம் ட்ரீம்ஹீலர் என்ற புனைப்பெயரில் அறியப்படும் ஒரு ஆழ்மனசக்தி பெற்ற இளைஞன் குணமாக்கினான். வான்கூவரில் இருந்தே அந்த இளைஞன் டிசம்பர் 2003ல் இருந்து ஜூன் 2004 வரை அந்த நோயைக் குணப்படுத்த தன் ஆழ்மனசக்தியைப் பிரயோகித்தான் என்று எட்கார் மிட்செல் தெரிவித்தார்.
ஆழ்மனசக்திகள் பற்றிக் குறிப்பிடுகையில் அது குறித்து பழங்கால இந்திய, திபெத்திய சம்ஸ்கிருதப் படைப்புகளில் தெளிவாகக் குறிப்பிடப் பட்டுள்ளன என்று எட்கார் மிட்செல் கூறுகிறார். அந்த நூல்களில் சொல்லப்படுகிற நிர்விகல்பசமாதி என்ற தியானநிலையில் மனிதனின் ஆழ்மன சக்திகள் மிக உயர்ந்த அளவுக்கு விழிப்படைகின்றன என்று ஆராய்ச்சிகளின் மூலம் அறிந்ததாக அவர் கூறுகிறார்.
எதையும் வெளிநாட்டுக்காரர்களும், விஞ்ஞானமும் கூறினால் ஒழிய கற்பனை, கட்டுக்கதை என்று முடிவெடுக்கும் மனநிலை நம் நாட்டில் நிறையவே இருந்து வருகிறது. நம் முன்னோர் அடைந்திருந்த உயர் அறிவார்ந்த நிலையை ஒத்துக் கொள்ளவோ, திறந்த மனத்துடன் ஆராயவோ நாம் முற்படுவதில்லை. எட்கார் மிட்சல் போன்றவர்களே ஒத்துக் கொண்டு பாராட்டுகிறார்கள் என்பதை அறிந்த பின்னாவது நாம் அந்த மனநிலையை மாற்றிக் கொள்வது தானே அறிவு?

No comments:

Post a Comment