Wednesday, September 21, 2011

ஆழ்மன எண்ணங்களே ஒருவரின் நிஜங்கள்!


- என்.கணேசன்
ழக்கங்கள் உருவாகி பலப்படும் இடம் ஆழ்மனம் தான் என்பதையும் ஆழ்மனதில் பதியும் எண்ணங்கள் எப்படி அதிக சக்தி பெறுகின்றன என்பதையும் பார்த்தோம். அது மட்டுமல்ல ஒரு மனிதனின் வெற்றி - தோல்வியையும், அவன் பலங்கள், பலவீனங்களையும் தீர்மானிப்பது அவன் ஆழ்மன நிலையே தான். ஏன் ஒருவர் இன்று எப்படி இந்த உலகில் வாழ்கிறார் என்பதைத் தீர்மானிப்பதும் ஆழ்மனமே.
இந்தத் தலைப்பைப் பற்றி எழுதுவதால் தான் எல்லாமே ஆழ்மனம் என்று சொல்வதாக வாசகர்கள் நினைக்க வேண்டாம். இது நூறு சதவீதம் உண்மை. சுமார் 250 வருடங்களுக்கு முன்னால் மெஸ்மர் (ஆழ்மனசக்தி 18 ஆம் அத்தியாயத்தில் இவர் பற்றி விவரமாய் படித்தோம்) ஹிப்னாடிசம் மூலம் மனிதனின் தீராத நோய்களைக் கூட தீர்க்க முடியும் என்று கண்டு பிடித்தார். ஹிப்னாடிசம் என்பது ஆழ்மனதை வசப்படுத்துவது தான். ஆழ்மனதில் எதை மனிதன் நம்புகிறானோ அதுவே
அவனுக்கு உண்மையாகிறது என்பதைப் பின்னால் நடைபெற்ற பல விஞ்ஞான ஆராய்ச்சிகள் உறுதிப்படுத்தின.
1955 ஆம் ஆண்டு இங்கிலாந்து அரசாங்கமும், 1958 ஆம் ஆண்டு அமெரிக்க அரசாங்கமும் ஹிப்னாடிசத்தை மருத்துவத்திற்குப் பயன்படுத்த அங்கீகாரம் கொடுத்த பின்னர் உலகெங்கும் பல நாடுகளிலும் அதிகாரபூர்வமாகவே மருத்துவ சிகிச்சைகளுக்கும், ஆராய்ச்சிகளுக்கும் ஹிப்னாடிசம் அதிகமாகவே பயன்படுத்தப்பட்டது.
ஹிப்னாடிசம் செய்து ஏர்கண்டிசன் அறையில் இருக்கும் ஒருவரிடம் நீங்கள் சஹாரா பாலைவனத்தில் இருக்கிறீர்கள், உங்களுக்கு வெயில் தாங்க முடியவில்லை என்று சொன்னால் அவருக்கு உடனடியாக வியர்வை கொட்ட ஆரம்பித்து விடும். சாதாரண தரையில் நின்று கொண்டிருக்கும் ஒருவரிடம் நீங்கள் கடலில் படகில் சென்று கொண்டிருக்கிறீர்கள், இப்போது உங்கள் படகு அலைகளில் சிக்கி தத்தளிக்கிறது என்று சொன்னால் அவர் நிஜமாகவே அலையில் சிக்கிய படகில்
இருந்தால் எப்படி தள்ளாடுவாரோ அப்படியே ஆட ஆரம்பித்து விடுவார். இது போன்ற ஆராய்ச்சிகளில் நிரூபிக்கப்பட்ட சம்பவங்கள் ஏராளம்.
அவை அனைத்தையும் எழுதுவதானால் அதற்கே பல தொகுப்பு நூல்கள் எழுத வேண்டி இருக்கும். எனவே உதாரணத்துக்கு நம் தலைப்புக்குத் தேவையான பரிசோதனை ஒன்றை மட்டும் பார்த்து விட்டு மேலே செல்வோம். அமெரிக்காவின் ஸ்டான்ஃபோர்டு பல்கலைகழகத்தில் சென்ற நூற்றாண்டில் ஹிப்னாடிசம் குறித்து எர்னெஸ்ட் ஹில்கார்டு (Ernest Hilgard) 1970களில் செய்த சோதனை ஒன்றில் நன்றாகக் காது கேட்கும் சக்தி உள்ள ஒரு குருடனை ஹிப்னாடிசத்திற்கு உள்ளாக்கி 'உன்
காதுகள் கேட்கும் சக்தியை இழந்து விட்டன' என்று அவன் ஆழ்மனதை நம்ப வைத்தார். பின் அவனிடம் கேட்ட எந்த கேள்விகளுக்கும் பதில் இல்லை. எத்தனை பெரிய சத்தத்தை உண்டாக்கினாலும் அவனிடம் எந்த பாதிப்பும் இல்லை. காதுக்கு அருகே ஏற்படுத்தப்பட்ட சத்தங்கள் கூட அவனை எதுவும் செய்யவில்லை. டமாரச் செவிடு என்பார்களே அது போலவே ஹிப்னாடிசத்தில் இருந்து வெளிவரும் வரை அவன் இருந்தான்.
அவர் செய்த இன்னொரு ஆராய்ச்சி ஐஸ் தண்ணீரில் கைகளை வைப்பதைப் பற்றியது. நல்ல தெளிவு நிலையில் இருக்கும் ஒருவரால் சில வினாடிகளுக்கு மேல் அதில் கைகளை வைத்து இருக்க முடியவில்லை. வலி மிகுதியால் உடனடியாக அவர்கள் கைகளை எடுத்துக் கொண்டார்கள். ஆனால் ஹிப்னாடிசத்தில் சிலரை ஈடுபடுத்தி அவர்களிடம் அது சாதாரண தண்ணீர் என்று அவர்களை கைகளை வைக்கச் சொன்ன போது அவர்களால் பல நிமிடங்கள் எந்த பாதிப்பும் இல்லாமல் கைகளை வைத்திருக்க முடிந்தது.
இதிலிருந்து மிகப்பெரிய உண்மை ஒன்றை நாம் புரிந்து கொள்ளலாம். ஒவ்வொரு மனிதருக்கும் ஆழ்மனம் நம்புவது தான் நிஜம். அதன்படியே அவர்கள் உணர்கிறார்கள். அதன்படியே அவர்கள் பாதிக்கப்படுகிறார்கள். அது பொய்யான தகவலாகவே இருந்தாலும் உண்மை என்று ஆழ்மனம் எடுத்துக் கொண்டால் அதுவே அவர்களுக்கு உண்மையாகிறது. அதன்படியே அவர்கள் அனுபவம் அமைகிறது.
துரதிர்ஷ்டவசமாக இது ஆராய்ச்சிகூடத்தில் ஒரு ஹிப்னாடிஸ்ட் மூலமாகத் தான் செய்யப்படுகிறது என்ற நிலைமை இல்லை. தினசரி வாழ்க்கையில் இது சர்வசகஜமாக நடக்கிறது. ஒரு வேடிக்கைக் கதையை நீங்கள் படித்திருக்கலாம். நன்றாக ஆரோக்கியமாக உள்ள ஒருவன் காலையில் உற்சாகமாக வீட்டை விட்டுக் கிளம்புகிறான். முன்பே பேசி வைத்துக் கொண்டிருந்த அவன் நண்பர்கள் அவன் போகிற பாதையில் ஒவ்வொருவராகக் கிடைக்கிறார்கள். முதலாமவன் "என்ன ஆயிற்று. ஏன் என்னவோ போலிருக்கிறாய்?" என்று கேட்கிறான். நம் ஆள் "இல்லையே
நன்றாகத் தானே இருக்கிறேன்," என்கிறான். சிறிது தூரம் கழித்து இன்னொரு நண்பன் அவனிடம் "என்ன உடம்பு சரியில்லையா?" என்று கேட்கிறான். இப்படியே ஒவ்வொருவரும் அவன் உடல்நிலை பற்றி மோசமாகவே கேட்க நம் ஆள் நிஜமாகவே நோய்வாய்ப்பட்டு படுத்து விடுகிறான். இது கதை ஆனாலும் நிஜமாக நம் ஒவ்வொருவர் வாழ்க்கையிலும் நடக்கக் கூடியதே.
நாம் மற்றவர்கள் கருத்து மூலமாகவும், நம் தவறான புரிந்து கொள்ளல் மூலமாகவும் நம் ஆழ்மனதிற்குத் தவறான அபிப்பிராயங்களை உண்மை என அனுப்பினால் அதுவே நம் வாழ்வில் உண்மையாகி விடும். "நான் அதிர்ஷ்டம் இல்லாதவன். எனக்கு நல்லது எதுவும் அமையாது" என்று ஆழ்மனதில் பதித்து வைத்திருக்கும் மனிதர்கள் துரதிர்ஷ்டசாலிகளாகவே கடைசி வரை இருந்து விடுகிறார்கள். "நான் பலவீனமானவன்", "என்னால் இது முடியாது", "எனக்கு ஆரோக்கியம் சரியில்லை" என்ற ஆழ்மனப்பதிவுகள் பலவீனர்களையும், இயலாதவர்களையும், நோயாளிகளையுமே கண்டிப்பாக உருவாக்கும். இதற்கு உதாரணங்களைப் பார்க்க ஆராய்ச்சிக் கட்டுரைகள் எல்லாம் படிக்க வேண்டியதில்லை. நம்மைச் சுற்றிலும் பார்த்தால் போதும், நூற்றுக் கணக்கான உதாரணங்களை நாமாகவே அறிந்து கொள்ளலாம். அதே போல் வெற்றியாளர்களைக் கூர்ந்து பார்த்தால் அவர்கள் ஆழ்மனப்பதிவுகள் தோல்வியாளர்கள் ஆழ்மனப்பதிவுகளுக்கு நேர் எதிராக இருக்கும்.
நாம் பல சமயங்களில் நம்மை அறியாமலேயே சுயமாக நம்மை நாமே ஹிப்னாடிசம் செய்து கொண்டு கருத்துகளைப் பதிவு செய்து கொண்டு விடுகிறோம்.. அது போல சில சமயங்களில் நாம் மிகவும் நம்பும் அல்லது மதிக்கும் மனிதர்களை நம்மை ஹிப்னாடிசம் செய்து கருத்துகளை நம் மனதில் பதிக்க அனுமதித்து விடுகிறோம். அந்தக் கருத்துகள் உயர்ந்ததாகவும், பலம் வாய்ந்ததாகவும் இருக்கும் போது நாம் சாதனையாளர்கள் ஆகிறோம். மாறாக அவை தாழ்ந்ததாகவும், பலமிழந்தும் இருக்கிற போது தோல்வியாளர்களாகவும் மாறி விடுகிறோம்.
என் உறவுக்காரப் பெண்மணி ஒருவர் அதிகமாக சிரிக்க மாட்டார். அப்படி யாராவது மிக நகைச்சுவையாக பேசியதைக் கேட்டு சிரிக்க நேர்ந்தால் கூட பயத்துடன் சொல்வார். "எவ்வளவு சிரிக்கிறோமோ, அந்த அளவு அழவும் நேரிடும்". அது போலவே தான் அவருக்கு எல்லாம் அமைவதை நான் கண்கூடாகப் பார்த்திருக்கிறேன். அவருடைய நம்பிக்கைக்கேற்றபடியே ஆழ்மனம் நிகழ்வுகளை அவர் வாழ்க்கையில் ஏற்படுத்தி வந்தது. அப்படி ஒரு பைத்தியக்காரத் தனமான பலமான அபிப்பிராயம் ஒரு வாழ்க்கையின் மக்ழ்ச்சியையே குலைத்த விதத்தை நான்
நேரடியாகப் பார்த்திருக்கிறேன்.
நாம் முன்பே பார்த்தது போல ஆழ்மனம் எதையும் மேல்மனம் தந்தபடியே எடுத்துக் கொள்கிறது. தினந்தோறும் நூற்றுக் கணக்கான தகவல்களை மேல் மனம் தந்தபடி இருக்க அவற்றை ஆழ்மனம் மனதில் பதித்துக் கொண்டும், ஒழுங்கு படுத்திக் கொண்டும், புதுப்பித்துக் கொண்டும் இருக்கிறது. ஓரிரு எண்ணங்கள் தவறாகவும், பலவீனமாகவும் உள்ளே செல்வதில் பெரிய பாதிப்பு இருக்காது. தொடர்ந்து அதே போல் எண்ணங்கள் ஆழ்மனதில் பதிய ஆரம்பித்தால் தான் பிரச்னை.
எனவே மேல்மனம் எடுத்து உள்ளே அனுப்பும் தகவல்களில் மிக கவனமாக இருங்கள். மேல்மனம் அனுப்பும் தகவல்கள் தொடர்ந்து பயம், பலவீனம், கவலை, தாழ்வு மனப்பான்மை கொண்ட எண்ணங்களாக இருந்தால் அவை பலப்பட்டு அப்படியே பதிவாகி அதை மெய்ப்பிக்கும் நிகழ்வுகளாக உங்கள் வாழ்வில் கண்டிப்பாக வரும். அதற்கு எதிர்மாறாக தைரியம், வலிமை, தன்னம்பிக்கை, மகிழ்ச்சி, உற்சாகம் போன்ற தகவல்களாக மேல்மனம் உள்ளே தொடர்ந்து அனுப்பினால் அதுவும் அப்படியே உங்கள் நிஜ வாழ்வில் பிரதிபலிக்கும் என்பது உறுதி.
இப்போது ஒரு கேள்வி எல்லோர் மனதிலும் எழலாம். ஹிப்னாடிசம் மூலமாக யாரையும் எப்படியும் மாற்ற முடியுமா? அதற்கு ஒரு நிகழ்வைச் சொல்லலாம். ஒரு ஆராய்ச்சியாளர் ஒரு பெண்ணை ஹிப்னாடிசம் செய்து பல வியக்க வைக்கும் அற்புதங்களைச் செய்து காட்டினார். கடைசியில் அந்தப் பெண்ணை ஆடைகளைக் களையச் சொன்ன போது மட்டும் அந்தப் பெண் அப்படிச் செய்யாமல் பேசாமல் நின்றாள். "ஏன்?" என்று கேட்ட போது "அது தவறு" என்ற பதில் வந்தது.
நம் ஆழ்மனதில் முன்பே ஆழமாகப் பதிந்துள்ள நமது ஒழுக்கத்திற்கோ, நம்பிக்கைகளுக்கோ, மதிப்பீடுகளுக்கோ எதிராக யாரும் நம்மை ஹிப்னாடிசம் மூலமாக செயல்படுத்தி விட முடியாது. இதை எத்தனையோ சோதனைகள் நிரூபித்துள்ளன.
இதையெல்லாம் வைத்து யோசித்துப் பார்த்தால் நம் இன்றைய நிலைக்கு மிகப் பெரிய பொறுப்பு வகிப்பது நம் ஆழ்மனமே. இப்போதைய வாழ்க்கை நிலை போதாது என்று தோன்றினால் நாம் ஆழ்மனப் பதிவுகளை மேம்படுத்தி புதுப்பித்துக் கொள்வதே வழி.
ஆழ்மன சக்தி பெறத் தடையாக இருக்கும் குணங்களில் மிக முக்கியமானது அவநம்பிக்கை என்று முன்பு சொன்னதன் காரணம் இப்போது மேலும் நன்றாக விளங்கி இருக்கும் என்று நம்புகிறேன். இந்த சக்திகள் எல்லாம் நமக்கு வராது என்று ஆழ்மனதில் அழுத்தமான எண்ணம் இருந்தால் அந்த சக்திகள் கண்டிப்பாக கைகூட வாய்ப்பே இல்லை. அது போல் ஆழ்மன சக்திகள் வகைகளில் எதெல்லாம் சாத்தியம் என்று நீங்கள் உறுதியாக நம்புகிறீர்களோ அதையெல்லாம் கண்டிப்பாக நீங்கள் வெளிப்படுத்த முடியும்.
பைபிளில் இந்த உண்மையை விளக்கும் ஒரு சம்பவம் அழகாக சொல்லப்பட்டு இருக்கிறது. "இயேசு கிறிஸ்துவிடம் குருடர்கள் வந்தார்கள். அவர்களிடம் இயேசு கேட்டார். "என்னால் உங்களைக் குணப்படுத்த முடியும் என்று நீங்கள் நம்புகிறீர்களா?" அவர்கள் கூறினார்கள். "ஆமாம் பிரபு" இயேசு அவர்களுடைய கண்களைத் தொட்டு கூறினார். "உங்கள் நம்பிக்கையின் படியே
உங்களுக்கு ஆகக் கடவதாக!". அவர்கள் கண்கள் திறந்தன (பார்வை பெற்றார்கள்)". (மாத்யூ 9:28:30) இங்கு இயேசு பிரான் அவர்களுடைய ஆழ்மன நம்பிக்கையைத் தான் குறிப்பிடுகிறார். அந்த நம்பிக்கையின் படியே அவர்கள் பார்வை பெற்றனர் என்பதைக் கவனிக்கவும்.
ஆழ்மன சக்திகளுக்கு எதிரான பண்புகளோ, நம்பிக்கைகளோ உங்கள் ஆழ்மனதில் இருக்கின்றனவா என்று நீங்கள் கணக்கெடுக்க வேண்டிய நேரம் இது. அப்படி இருந்தால் அதற்கு எதிர்மாறான பண்புகளையும், நம்பிக்கைகளையும் சிறிது சிறிதாக வளர்த்துக் கொள்ளுங்கள். அதற்குத் தேவையான நூல்களைப் படியுங்கள். தேர்ச்சி பெற்ற அறிஞர்களின் அனுபவங்களைப் படியுங்கள். அவர்களது பேச்சுகளைக் கேளுங்கள். வெற்றியாளர்களுடன் தொடர்பு வையுங்கள். சிறிது சிறிதாக உங்கள் ஆழ்மனம் பழைய பதிவுகளை மாற்றி புதிய தகவல்களைப் பதித்துக் கொள்ளும்.
இனி ஆழ்மனதைப் பயன்படுத்தி பிரமிக்க வைக்கும் வேலைகள் வாங்குவது எப்படி என்று பார்ப்போம்.

No comments:

Post a Comment