Tuesday, August 16, 2011

மனச்சிதைவு நோய் ஒர் அறிமுகம்



மனச்சிதைவு நோய், எல்லா நோய்களையும் போல் முறையாக சரியான சிகிச்சை மேற்கொண்டால் குணமாகும் நோய்தான்.மனச்சிதைவு நோயின் பாதிப்பு எந்த தரப்பினருக்கும் ஏற்படலாம். மூளையில் ஏற்படும் இரசாயன மாற்றத்தினால் சிந்திக்கும் தன்மை பழுது ஏற்பட்டு கட்டுப்பாடற்று செயல்படுவது மனச்சிதைவு நோய் ஆகும். நோயால் பாதிக்கப்பட்டவர்கள் அனைவரிடமும் ஓரே மாதிரி பாதிப்புகள் காணப்படுவதில்லை. இவர்கள் இயல்பான வாழ்க்கை முறையிலிருந்து மாறுபட்டு, நடைமுறை பழக்கவழக்கங்கள், பேச்சு, செயல்கள் ஆகியவற்றில் வித்தியாசமாகவும், சில நேரங்களில் விபரீதமாகவும் செயல்படுவர்.

மனச்சிதைவு நோய் ஆண், பெண், இன, மத, மொழி, சமுதாய கலாச்சார் பேதமின்றி அனைத்துத் தரப்பினரையும் பாதிக்கும். பெரும்பாலும் 15 வயது முதல் 45 வயது வரை உள்ளோரை இது பாதிக்கும். உலகத்தில், 100ல் ஒருவருக்கு இது பாதிக்கப்படுகிறது. இவர்களில், பாதிப்புகள், அறிகுறிகளில், வேறுபாடு இருக்கும். சிலர் நோயின் தன்மையை உண்ராமல் இருப்பர். காலப்போக்கில் சரியாகிவிடும் என மருத்துவரை ஆலோசிக்காமல் இருந்தால், நோய் முற்றி தீவிர பாதிப்புகளை ஏற்படுத்தும். ஆரம்ப கால கட்டத்திலே மனநல மருத்துவரிடம் அழைத்து செல்வது நோயை கட்டுப்படுத்த உதவும். காலம் தாழ்த்தினால் நோய் முற்றி தீவிர பாதிப்புகளை விளைவிக்கும்.

மனச்சிதைவு நோயின் அறிகுறிகள்

மனச்சிதைவு நோய் உள்ளவர்கள் அடிக்கடி காரணம் இல்லாமல் கோபம், எரிச்சல் கொள்வர். கவனக்குறைவு அவர்களிடம் இருக்கும். தன் உணர்ச்சிகளை வெளிபடுத்த முடியாமல், தன் இயலாமையால் பட படப்புடனும், பயத்துடனும் இருப்பர். எதிலும் ஆர்வமின்றி, நம்பிக்கை இல்லாமலும் இருப்பர். எப்போதும் தனிமையையே விரும்புவர். ஏதோ யோசித்துக் கொண்டிருப்பர். சிலரிடம் வேலையில் அதிக வேகம் காணப்படும். சாதாரண வேலைகள் கூட தன்னால்தான் நடைபெறுகிறது என்றும், மற்றவர்களின் வேலைகளையும் தானே எடுத்து செய்வர். அமைதியாக இல்லாமல், ஏதாவது வாதம் செய்து கொண்டிருப்பர்.

இவர்கள் அர்த்தமற்ற தவறான நம்பிக்கை கொண்டவராகவும், சந்தேக எண்ணங்கள் உள்ளவராகவும் இருப்பர். தன் தாய் கூட உணவில் விஷம் கலந்து கொடுப்பதாகவும், மனைவியையும் சந்தேகிப்பார்கள். பொருள் இல்லாமல், பேசியதையே திரும்ப திரும்ப பேசிக் கொண்டிருப்பர். சரிவரத்தூக்கம் இல்லாமலும், எதிலும் விருப்பம் இல்லாமலும் இருப்பர். இவர்கள் பேசும் முறையில் சில தடுமாற்றங்கள் தென்படும். அவர்கள் பேசுவதை மற்றவர்கள் சரிவர புரிந்து கொள்ள முடியாது. அன்றாடம் செய்ய வேண்டிய வேலைகளை செய்யாமலும், நேரத்திற்க்கு சாப்பிடாமலும் இருப்பர். மேலும் சிலர், தானே கடவுள் என்றும், கடவுளின் அவதாரம் என்றும் உணர்வர். இந்த உலக இயக்கத்திற்க்கு தானே காரணம் என்றும், தன்னாலேயே எல்லாம் நடைபெறுகிறது என்ற எண்ணம் உடையவராகவும் இருப்பர்.
நன்றி:Muthukumar Arumugam

No comments:

Post a Comment