Tuesday, August 16, 2011

சந்தேகம் சார்ந்த மனச்சிதைவு நோய்



இவ்வகை நோயினால் பெரும்பாலும் நடுத்தர வயதினரே பாதிக்கப்படுகின்றனர். சுமார் 30 வயதுக்கு மேல்தான் இது அதிகமாக தோன்றுகிறது. இந்நோய்க்கு ஆட்பட்டவர்களிடம் தவறான நம்பிக்கைகள் மேலோங்கி நிற்கும். அவை மிகவும் பொருத்தமற்றும், உண்மை நிலைக்கு புறம்பாகவும் இருக்கும். எவ்வளவுதான் தர்க்க ரீதியாக விளக்கம் கொடுத்தாலும் கூட இந்தத் தவறான நம்பிக்கைகளை நோயாளியின் மனதிலிருந்து அகற்றுதல் மிகக் கடினம். அந்த அளவிக்கு அவை ஆழமாக வேரூன்றி இருக்கும். இது தவிர போலிக்கண்ணோட்டமும், பொருத்தமற்றா தொடர்பற்ற பேச்சும், உணர்ச்சி மாறுபாடுகளும், எதிர்மறையான செயல்களும் இவர்களிடம் காணப்படும்.

நோய் தோன்றுவதற்கு முன் இவர்கள் கொண்டிருந்த குண இயல்புகளை ஆராய்ந்தால், இவர்களின் சமூக உறவுகள் மிகவும் குறை உடையனவாகவே இருந்திருப்பது தெரிய வரும். சாதாரணமாகவே அன்பு இல்லாதவர்களாகவும், மற்றவர்களிடம் நம்பிக்கையில்லாமல் வெறுப்பு கொண்டு ஒதுங்கியும் வாழ்ந்திருப்பர். எதிலும் உண்மையான, முழுமையான, ஈடுபாடு கொள்ளாமல், தாமரை இலைத் தண்ணீர் போல் பட்டும் படாமலும் இருப்பர். எதற்கெடுத்தாலும் எதிர்த்து பேசுவதும், வாக்குவாதம் செய்யும் குணமும், அகம்பாவம், எதிர்ப்பு மனப்பான்மை, அலட்சியம், மற்றவர் மனம் புண்படும்படி பேசுதல் மற்றும் நடத்தல் அகிய இயல்புகள் இவர்களிடம் அதிகமாக காணப்படும். சிலர் பகைமை உணர்வை மனதில் வைத்துக் கொண்டு வெளியே நண்பர்கள் போல் நடிப்பதும் உண்டு.

இந்நோயினால் பாதிக்கப்பட்டவர்கள் பெரும்பாலும் திருமணமானவர்களாகவே இருப்பர். ஏதாவது ஒரு வேலையிலும் இருப்பர். எனவே, இவர்களுடைய நடத்தை, குமரப்பருவ மற்றும் விறைப்புச்சார்ந்த நோயாளிகளைக் காட்டிலும் அதிகமாகவே வளர்ச்சி பெற்றிருக்கும். எனவே இவர்களுடைய நடவடிக்கைகள், பழக்க வழக்கங்கள் உணர்ச்சிப் பரிவர்த்தனைகள் முதலியவற்றில் அதிகமான அளவு பின்னடைவு இருக்காது.

No comments:

Post a Comment