Wednesday, September 21, 2011

மாணவர்கள் தற்கொலை ஏன்? - 1


 அருணா சுரேஷ்
மாணவர்களுக்கு என்ன பிரச்னை?
வாழ்க்கையில் அவர்களை அச்சுறுத்துவது எது?
ஏன் ஓடி ஒளிந்து கொள்ள விரும்புகிறார்கள்?
அடிப்படையில் எங்கே தவறு?
இது ஆரம்பித்தது எப்போது? ஏன்?
இப்படி சில கேள்விகளுக்கு விடை காண முற்பட்டால்... இதற்குக் காரணம் ஆசிரியர்களோ, பள்ளியோ, படிப்புச் சுமையோ அல்ல; தற்போது குழந்தைகளை வளர்க்கும் முறையில் திடீரென ஏற்பட்ட தலைகீழ் மாற்றம்தான் என்பது தெளிவாகிறது.
குழந்தைகள் எது கேட்டாலும் மறுநிமிடம் வாங்கிக் கொடுக்கும் இயல்பு இப்போதைய பெற்றோரிடம் இருக்கிறது. இது குழந்தைகளுக்கு அடைய முடியாத எதுவும் இருக்கக் கூடாது என்று எண்ண வைத்திருக்கிறது. என்ன தவறு செய்தாலும் கண்டிக்கும் வழக்கமோ, தண்டிக்கும் பழக்கமோ கிடையாது. இதனால், குழந்தைகளுக்கு பிறர் கண்டித்தால் தாங்கிக் கொள்ளும் மனநிலை இல்லாமல் போய்விடுகிறது.
முன்பெல்லாம், "என் பிள்ளை, உங்கள் பிள்ளை மாதிரி. எப்படியாவது இவனை நல்வழிப்படுத்துங்கள்" என்று ஆசிரியர்களிடம் சொல்லிப் போவார்கள்.
இப்போதெல்லாம் ஆசிரியர் கொஞ்சம் அதட்டிப் பேசினாலும், "என் பையன் டிப்ரெஷன்லே இருக்கான். அவனை ஏன் சார் திட்டினீங்க," என்று மறுநாளே வந்து நிற்கும் பெற்றோர்கள்தான் அதிகம்.
'எல்லாம் கொடுத்து விடுகிறேன். எது வேண்டுமானாலும் செய்து கொள். மார்க் மட்டும் வாங்கு,' என்று அந்தக் குழந்தையின் திறமைக்கு மீறி எதிர்பார்க்கும் பெற்றோர்களின் மனநிலை தான் குழந்தைகளை இப்படி வாழ்க்கை வெளியை விட்டுத் துரத்துகிறது.
பெற்றோர்களின் நேரம் சுய வாழ்க்கைக்கே பங்கு போட்டுவிடப்படுவதால், குழந்தைகள் தங்களின் மனத்தாங்கல்களை வெளியே காட்டிக் கொள்ளாமல் அடைத்து வைத்துத் தாங்க முடியாமல் முடிவைத் தேடிப் போகின்றார்கள்.
இன்னும் சில பெற்றோர்கள் எப்போதும், "அவனைப் போல படி, இவனைப் போல ஸ்விம்மிங்க் பண்ணு, அவனைப் போல கிரிக்கெட் விளையாடு..." எந்நேரமும் 'போல' பஜனை செய்கின்றனர்.
அத்துடன், "மார்க் குறைஞ்சுடாதேடா, வெளிலே அம்மா தலைகாட்ட முடியாது" என் மன அழுத்தத்துக்கு வித்திடுகின்றனர்.
"நாலு பேர்கிட்டே மார்க்கைச் சொல்ல முடியுதா?!" என வார்த்தைகளால் கொட்டிவிடும் சில பெற்றோர்கள்.
இதுபோன்ற வீட்டின் எதிர்பார்ப்புகள் வாட்டியெட்டுக்கும் வேளையில்ம், "ஃபெயிலானால் தொலைஞ்சே," என்பன போல் பள்ளியில் ஆசிரியர்களின் மிரட்டல் வேறு.
படிக்கும் குழந்தைகள், குறைவாகப் படிக்கும் குழந்தைகளை ஓரம் கட்டுவதும், அவர்களைத் தங்கள் குழுவுடன் இணைக்க மறுப்பதுவும் இன்னொரு வகையான மன அழுத்தம்.
இப்படி எல்லா பக்கங்களில் இருந்தும் வரும் மன அழுத்தங்களுக்கும் ஒரே நாளில் விடுதலையாகத் தான் தற்கொலையைத் தேடிக் கொள்கிறார்கள்.
இதற்கு நிரந்தரத் தீர்வு தான் என்ன?

No comments:

Post a Comment