அருணா சுரேஷ், பள்ளி முதல்வர்
பாடத்திட்டம் தரும் மன அழுத்தமா?
ஆசிரியர்கள் தரும் மன அழுத்தமா?
பெற்றோர்கள் தரும் மன அழுத்தமா?
உடன் பயிலும் நண்பர்கள் கொடுக்கும் மன அழுத்தமா?
இந்தக் கேள்வி வரிசையின் பட்டியலில் முதலிடம் பெற்றோருக்குத்தான்.
பெற்றோர்களுக்கு தங்களுடைய குழந்தைதான் முதலிடம் வரவேண்டும் என்ற எண்ணம் நல்லதுதான். ஆனால், எல்லாப் பெற்றோரும் அப்படியே விரும்பினால் இரண்டாவது இடம் யாருமே வாங்கக் கூடாதா?
முதலில் தன் குழந்தையிடம் முதல் மார்க் வாங்கக் கூடிய திறமையிருக்கிறதா என்று பார்ப்பதில்லை. அப்படி அது இல்லாத குழந்தையிடம் அளவுக்கதிகமான எதிர்பார்ப்பதால் எதிர்பார்த்த அளவு குழந்தையால் நடத்திக் காட்ட இயலாமல் போகும் போது மனச் சோர்வடைகிறது குழந்தை. இதனால், பெற்றோர்களுக்கு அவமானத்தைத் தேடி கொடுத்து விட்டோமே என்று வருந்தித் தற்கொலை எண்ணத்துக்கு வித்திடப்படுகிறார்கள்.
இந்த மாணவர்களுக்கு பெற்றோர்களின் கனவுகளைக் கலைத்து விட்டோம் என்ற குற்ற உணர்ச்சியும் இருக்கும். இந்தக் குற்ற உணர்ச்சியே தற்கொலை செய்துக் கொள்ளத் தூண்டுகிறது. ஏற்கெனவே சொல்லியது போல குழந்தைகளை இயல்பாக விரும்பிப் படிக்கும் ஆவலை வரவழைப்பதுவும் கூட ஒரு கலைதான்.
இண்டாவதாக பாடத் திட்டம்.
எந்த விதமான சுய சிந்தனையையும் தூண்டாமல் உருப் போட்டுத் திரும்ப எழுத ஊக்குவிக்கும் ஒரு திட்டம். செயல் முறைகளுக்கோ, தொழில் கல்விக்கோ இடமில்லாத ஒரு திட்டம். ஒரு மாணவனிடம் நடிப்பு, பாட்டு, நடனம், வரைதல், விளையாட்டு என்று எத்தனை கலைகளில் திறமையிருந்தும், அவனால் படித்து ஒப்பிக்க முடியவில்லையென்றால் அவனை திறமைக் குறைவான குழந்தையாகவே மதிப்பிடப்படுகிறான்.
படித்தல் என்னும் கலையை விரும்பி ஏற்றுக் கொள்ளும் அளவில் பாடங்கள் இல்லை. பாடங்கள் குழந்தைகளிடையே ஒருவிதமான பயத்தை ஏற்படுத்துவதாகவே இருக்கிறது. அது தவிரவும் பின்னாளில் வாழ்க்கைக்கு உதவும் வகையிலும் பாடங்களோ பாடத் திட்டங்களோ இல்லை என்பதுதான் வேதனையான விஷயம்.
மூன்றாவதாக ஆசிரியர்கள் தரும் மன அழுத்தம்.
ஒரு மாணவன் ஒரு பரீட்சையில் குறைவாக மதிப்பெண்கள் வாங்கினாலும் போதும்... "ம்... நீயெல்லாம் படித்து..." என நீட்டி முழக்குவது; படிக்காத மாணவர்களை படிககும் மாணவர்களுடன் ஒப்பிடுவது; மாணவர்களைக் கண்டிப்பாக டியூஷன் படிக்க வரச் சொல்லிக் கட்டாயப்படுத்துவது...
ஆசிரியர்களின் மேல் ஒரு குற்றச்சாட்டு எப்போதும் உண்டு. நன்றாக படிக்கும் மாணவர்களுக்கே அதிக முக்கியத்துவம் கொடுத்து அவர்களையே மேலும் கவனித்து மேலும் அதிக மதிப்பெண் வாங்க உற்சாகப்படுத்துகிறார்கள். வேறொன்றுமில்லை. அந்த மாணவனின் உழைப்பில் பள்ளியும் ஆசிரியரும் பெயர் வாங்கிக் கொள்வார்கள். சராசரி மாணவர்கள் ஒதுக்கப்பட்டு அவர்களின் அறிவு வளர்ச்சிக்கு இடமில்லாமல் போய்விடுகிறது.
மாணவர்கள் தவறாக எழுதிய விடையை வாசித்துக் காட்டி பெரும் மன அழுத்தத்துக்கு ஆளாக்குகிறார்கள். ஒரு சின்ன உதாரணம்...
குழந்தைகள் எழுதித் தரச் சொல்லும் ஸ்லேம் புத்தகத்தில் ஒருமுறை ஒரு மாணவி எழுதியிருந்தது...
'கேள்வி: The most embarrassing situation in your life...
பதில்: When my Maths teacher asks me to come near the board and solve a problem'
இப்படிக் குழந்தைகளின் வாழ்க்கையில் மிகப் பெரிய பாதிப்பை ஏற்படுத்துவது ஆசிரியர் என்பது தெரியாமலேயே ஆசிரியர்கள் இருக்கிறார்கள் என்பதுதான் வருத்தமளிக்கிறது.
அடுத்ததாக, உடன் பயிலும் மாணவர்களினால் ஏற்படும் மன அழுத்தம்.
படிக்காத மாணவர்களைக் கட்டம் கட்டித் தனியாகப் பிரித்து வைப்பது, குறைவான மதிப்பெண்கள் வாங்கும் மாணவனை அதைப் பற்றியே பேசிக் கிண்டலடிப்பது, டியூஷனுக்கு வராத மாணவர்களைப் பிரித்து வைப்பது, அது தவிர படிப்பு சம்பந்தமில்லாத விஷயங்களிலும் கூட.
உதாரணத்துக்கு... மாணவர்களின் தந்தையின் தொழிலைக் கிண்டல் செய்வது, ஜாதியைக் கிண்டல் செய்வது இப்படி பலவகையான மன அழுத்தங்கள்.
No comments:
Post a Comment