அருணா சுரேஷ், பள்ளி முதல்வர்
மாணவர்களே... முதலில் உங்கள் மனத்தைப் பூட்டி வைப்பதை நிறுத்துங்கள். எண்ணங்களை வீட்டில் பகிர்ந்து கொள்ளப் பழகுங்கள்.உங்கள் நட்பு வட்டம் மற்றவர்கள் முன்பும் பெற்றோர்கள் முன்பும் பெருமையுடன் அறிமுகப்படுத்தும் தகுதியுடையதாக இருக்கும்படிப் பார்த்துக் கொள்ளுங்கள்.
அதேநேரத்தில், நட்பு வட்டம் சொல்வதெல்லாம் சரியென நினைப்பதை நிறுத்துங்கள். உங்கள் பார்வையை விரிவாக்குங்கள். எந்த விஷயமானாலும் உடனடியாக ரியாக்ட் செய்வதை நிறுத்துங்கள். உங்களை நீங்களே கேட்டுப் பாருங்கள். சில விஷயங்கள் நீங்கள் செய்வது தப்பென்று தெரிந்தே செய்யத் துணிகிறீர்கள். எந்த விஷயத்தைப் பெற்றோரிடமும் உடன் பிறந்தோரிடமும் தயக்கமில்லாமல் பகிர்ந்து கொள்ள முடிகிறதோ அவை தப்பில்லையெனத் தெரிந்து கொள்ளுங்கள்.
வீட்டிலுள்ளவர்களிடம் நெருக்கத்தை வளர்த்துக் கொள்ளுங்கள். பள்ளியில், கல்லூரியில் நடக்கும் நிகழ்வுகளை வீட்டில் சொல்லப் பழகுங்கள். யாரும் எல்லோரிடமும் 24 மணி நேரமும் அன்புடனேயே இருப்பதில்லை. அவ்வப்போது வருத்தத்தையும் கோபத்தையும் காட்டுவதுண்டு. அதற்காக அதையே நினைத்து வருத்தப்பட்டுக் கொண்டிருக்காமல், இயல்பாக ஏற்றுக் கொள்ளும் மனப் பக்குவத்தை வளர்த்துக் கொள்ள வேண்டும்.
உங்கள் மீது அக்கறை இருப்பதனால்தான் அவ்வப்போது பெற்றோர்களும் ஆசிரியர்களும் கண்டிப்பதோடு கோபித்துக் கொள்ளவும் செய்கிறார்கள். ஆனால், அபாயகரமான முடிவுகளை எடுப்பது எவ்வளவு முட்டாள்தனமென்று புரிந்து கொள்ளுங்கள்.
யாரும் உங்களின் எதிரியல்ல; உங்கள் மேல் நம்பிக்கை வையுங்கள். உங்களை நேசியுங்கள். உங்களின் வாழ்வின் மீது பற்றுக் கொள்ளுங்கள். உங்கள் வாழ்வின் மீது உங்களுக்கில்லாத பற்று வேறு யாருக்கு இருக்க முடியும்?
உங்கள் மீது நம்பிக்கை வைத்தால் எத்தனை முறை வீழ்ந்தாலும் தன் காலில் எழுந்து நிற்கும் சக்தியும் தெம்பும் தானாகவே வந்து சேரும்.
புரிதல் அவசியம். சூழ்நிலைகளை, ஆசிரியர்களை, பெற்றோர்களை, நண்பர்களை, உறவுகளைப் புரிந்து கொள்ளப் பழகுங்கள். வகுப்பறைக்குள் ஆசிரியர்களிடம் மரியாதையில்லாமல் நடந்து கொள்வது, எடுத்தெறிந்து பேசுவது, கொஞ்சம் கடிந்து கொண்டால் கூட ப்ரெஸ்ஸைக் கூப்பிட்டுட வேண்டியதுதான்னு சொல்கிற ஜம்பம், நாளைககு நீ பள்ளியிலேயே இருக்கமாட்டே என்று மிரட்டுவதைக் கேட்பதற்கு ஆசிரியர்களுக்கு எப்படியிருக்கும் என ஒரு நிமிடம் சிந்தித்துப் பாருங்கள். யாரையும் எடுத்தெறிந்து பேசும் முன் உங்களை அந்த இடத்தில் பொருத்திப் பாருங்கள்.
படிப்பு தவிர ஒரு ஆர்வத்தையும் பின்பற்றிச் செல்லுங்கள். படிப்பினால் ஏற்படும் மன அழுத்தத்தைக் குறைக்க இது பெருமளவில் உதவும். எந்நேரமும் அந்த ஆர்வத்தைக் கைவிடாதவர்களாக வாழ்க்கை முழுவதும் உங்களுடன் எடுத்துச் செல்லுங்கள். வாழ்க்கையில் வெற்றியும் சந்தோஷமும் வேறு வேறு தளங்கள். எப்போதும் சந்தோஷமாயிருக்கக் கற்றுக் கொள்ளுங்கள். அதுவே வாழ்வின் வெற்றிதான்.
எந்த முடிவெடுக்கும் முன்னும் உங்களின் வளர்ச்சியின் பின்னே இருக்கும் நபர்களை நினைவுபடுத்திக் கொள்ளுங்கள். அந்த முகங்களின் பின்னே தெரியும், உழைப்பும், களைப்பும், வலியும், உற்சாகமும், ஆர்வமும் உங்களுக்கு எப்போதும் நினைவில் இருக்கவேண்டும். இப்படிப்பட்ட பிணைப்புக்களின் மூலம்தான் உங்களை நீங்கள் தோல்விகளிலிருந்து மீண்டும் மீண்டும் உயிர்ப்பித்துக் கொள்ள முடியும்.
No comments:
Post a Comment