Wednesday, September 21, 2011

மாணவர்கள் தற்கொலை ஏன்? - 2


அருணா சுரேஷ்
மாணவர்கள் தற்கொலைக்குத் தீர்வு என்ன என்று யோசிப்பதற்கு முன்னால், அந்த பாதக எண்ணத்தைத் தூண்டும் காரணிகளைப் பார்ப்போம்.
போட்டி... எங்கும் போட்டி - எதிலும் போட்டி. Survival of the fittest எனும் வாக்கியம்தான் மிக மிக முக்கியமான காரணமாக நினைக்கிறேன். Fittest ஆக இல்லாதவன் வாழ்க்கையில் ஜெயிக்கவே முடியாதா?
ஓடிக் கொண்டேயிருப்பவன் வெற்றி நூலை அறுத்தெறியும் நேரத்தில், அந்த வெற்றிக்கான இலக்கு இன்னும் கொஞ்சம் நகர்ந்து போய்விட்டால் என்ன மனநிலை ஏற்படும் என்பதை அனுபவித்தவர்கள் மட்டுமே உணர முடியும்.
இந்த FITTEST வட்டத்துக்குள் பொருந்த முடியாமல் போவது கூட தற்கொலைக்கான காரணங்களுள் ஒன்றாகும்.
மேலும், குழந்தைகள் மீது பெற்றோர்களால் திணிக்கப்பட்ட, வெற்றி மட்டுமே ஏற்றுக் கொள்ள வேண்டும் என்கிற மனப்பான்மையும் கூட தற்கொலைக்கான காரணங்களுள் ஒன்று.
பரீட்சையில் தேர்ச்சி அடைகிற பையனாக இருந்தால் ஃபர்ஸ்ட் ராங்க் எடுக்கவில்லை என்கிற அழுத்தம், நாட்டியம் ஆடுகிறவள் என்றால், முதல் பரிசு வாங்கவில்லையே என்று வருத்தம், பாடுகிற குழந்தையை 'டி.வி.லே பாடப் போ' எனும் ஆர்ப்பாட்டம்...
இப்படியான ஓட்டத்தை நர்சரியிலேயே ஆரம்பித்து விடுகிறார்கள் இந்தப் பெற்றோர்கள்.
30 மார்க் வாங்குபவனை பாஸாகி விடு என்பது, 50 மார்க் வாங்குபவனை 60 வாங்கு என்பது, 60 எடுத்து மூச்சு விடும்போது 70 வாங்க விரட்டுவது, 70 கடந்தவுடன் 80 வாங்கு...
நீ நினைத்த படிப்பு என்று ஆசை காட்டுவது, 80 அடைந்தவுடன் 90 வாங்கு - வகுப்பில் முதல் மாணவனாகு என்றும் வகுப்பில் முதல் மாணவனை பள்ளியில் முதல் வர வெறியேற்றுவது, பள்ளியில் முதல் வந்தால் மாநிலத்தில் முதல் வாங்க அழுத்தம் கொடுப்பது என எல்லையில்லாமல் விரிந்து கொண்டே போகும் எதிர்பார்ப்பு எனும் அலையில் ஒரு நொடியில் வாழ்வையே உதறும் நிலைக்குத் தள்ளப்படுகிறார்கள் சில மாணவர்கள்.
98 வாங்கிய மாணவனைப் பாராட்டி ஊக்குவிக்காமல், 'மீதி ரெண்டு மார்க் எங்கே போச்சு?' என்று ஆரம்பிப்பது, எந்த விதத்தில் நியாயம்?
"தலை தலையாய் அடிச்சுக்கிட்டேன், இந்தக் கணக்கை திருப்பித் திருப்பிப் போட்டுப் பாருன்னு, கேட்டியா!? இப்போ பாரு ரெண்டு மார்க் போச்சு!"
'சபாஷ்' எதிர்பார்த்த குழந்தையிடம் உடனேயே அந்தக் கணக்கை மறுபடி படச் சொல்லி உத்தரவு.
அந்தக் குழந்தை என்ன எதிர்பார்க்கிறது?
நாம் எப்படி நடந்து கொள்கிறோம்?
பாடம் யாருக்குத் தேவை?
குழந்தைகளுக்கா? பெற்றோருக்கா?
பள்ளி மாணவர்கள் இப்படி மதிப்பெண்களுக்குப் பின்னால் உயிரைத் தொலைப்பதுவும், போட்டிகளுக்குப் பயந்து உயிரை விடுவதும் ஒருபக்கம் தொடர்ந்து கொண்டிருக்க, கல்லூரி மாணவர்கள் உயிரை விடுவது அசுர வேகத்தில் ஒரு பக்கம் நிகழ்ந்து கொண்டிருக்கிறது.
பொதுவில் பொறியியல் கல்லூரிகளில் தற்கொலை நிகழ்வுகள் அதிகமாக இருக்கிறது. காரணம்... ராகிங் ஒரு பக்கம் என்று சொல்லப்பட்டாலும், ஆழ்ந்து கவனித்தால் மேலும் சில பல காரணங்கள் வெளிப்படும். அதையும் தொடர்ந்து கவனிப்போம்.
தற்கொலை செய்ய இந்த மாணவர்கள் எழுதி வைத்த காரணங்கள் அல்லது பிறர் மூலம் அறியக் கிடைத்த காரணங்களில் குறிப்பிடத்தக்கவை:
* செல்ஃபோன் வாங்க பணம் தராததால்
* செல்ஃபோன் இல்லாததால்
* பரீட்சையில் தோல்வி
* மாணவர்கள் கேலி செய்வதால்
* மற்றவர்கள் போல வாழ்வை எதிர்கொள்ள முடியவில்லை
* மற்றவர்கள் இருப்பது போல என்னால் பணம் செலவழிக்க முடியவில்லை
* காதலில் தோல்வி
* குறைந்த மதிப்பெண் காரணமாக பெற்றோர்கள் திட்டியதால்
* நன்றாக படிக்கும் மாணவன் ஒரு சில முறை குறைந்த மதிப்பெண் வாங்கும்போது ஆசிரியர் திட்டியதால்.
* தவறு செய்ததால், 'பெற்றோர்களைக் கூட்டிக் கொண்டு' என்று ஆசிரியர் சொல்லியதால்.
* தேர்வு நன்றாக எழுதவில்லையோ என்ற பயத்தால் (அதே மாணவன் 90 மார்க் வாங்கியிருந்தான் என்பதுதான் வருத்தத்துக்குரியது)
இவற்றை கூர்ந்து நோக்கும் போது மாணவர்களின் வாழ்க்கை அத்தனை எளிதல்லவோ என்றிருக்கிறது. ஆனால், எளிதாக இருந்தவற்றைச் சிக்கலாக்கிக் கொண்டது நாம்தானோ?

No comments:

Post a Comment