அருணா சுரேஷ், பள்ளி முதல்வர்
மாணவர்கள் தற்கொலைக்கு எவையெல்லாம் காரணம், யாரெல்லாம் பொறுப்பு என்பதைப் பற்றி விரிவாகப் பார்த்தோம். யார் மீது அதிகத் தவறு என்றோ, யார் பொறுப்பில்லாமல் இருந்தார்கள் என்றோ, எத்தனை சதவிகிதப் பொறுப்புகளைத் தட்டிக் கழித்தீர்கள் என்றோ, இப்படி நடந்து கொண்டிருந்தால் குழந்தைகளின் தற்கொலையைத் தடுத்திருக்கலாம் என்று எடுத்துச் சொல்லவோ அல்லது குற்றம்சாட்டவோ போவதில்லை. நடந்தவை, நடந்தவையாகவே இருக்கட்டும்.இனிமேல் என்ன செய்யலாம். வெகுதூரம் போய்விட்ட குழந்தைகளிடம் மீண்டும் அவர்களை உங்களிடம் எது அழைத்து வரும் என்பதைப் பற்றி யோசிக்கலாம். நாம் என்ன செய்யவில்லை என்பதைப் பார்க்கலாம். இதைச் செய்வதற்கு நிறைய மெனக்கெடல்கள் தேவையில்லை. பணம் செலவழிக்க வேண்டியதில்லை. கொஞ்சமே கொஞ்சம் மனமும்,நேரப் பங்கிடல் மட்டும் போதும்.
உங்கள் குழந்தையின் அருகில் உட்கார்ந்து இருவருக்கும் பிடித்த டி.வி. நிகழ்ச்சியைக் கடைசியாக எப்போது பார்த்தீர்கள் என்று நினைவிருக்கிறதா?
உங்கள் குழந்தையின் கை விரல்களைப் பிடித்து உணர்நதிருந்திருக்கிறீர்களா?
கையோடு கை சேர்த்துப் பிடித்து உணர்ந்திருக்கிறீர்களா?
குழந்தையின் அருகில் உட்கார்ந்து எத்தனை நாளிருக்கும்னு நினைவிருக்கிறதா?
கை விரல் பிடித்து, கை சேர்த்து அருகில் உட்கார்ந்து அதன் உலகத்துக்குள் சென்று பார்த்திருக்கிறீர்களா?
மகனுக்கு / மகளுக்கு என்ன நிறம் பிடிக்கும் என்று தெரியுமா?
அவர்களுக்குப் பிடித்த பாட்டு தெரியுமா?
அவனுடைய நட்பு வட்டம் பற்றித் தெரியுமா? அவர்களின் பெயர் தெரியுமா?
அவனின் பிடித்த சப்ஜெக்ட் என்ன வென்று தெரியுமா?
அவன் படிக்கும் வகுப்பில் அவன் எந்த செக்க்ஷன் என்று தெரியுமா?
இந்த கேள்விகளுக்கெல்லாம் விடையைச் சொல்லுங்கள். இதற்கான விடைகளில் எது சரியானது என்பது உங்களுக்கே தெரியும்.
எத்தனை அப்பாக்கள் பள்ளியில் வந்து, நான்காவது படிக்கும் தங்கள் மகனை, 'மூன்றாவது வகுப்பில் படிக்கிறான் கூட்டி வாருங்கள்,' எனச் சொல்லியிருக்கிறார்கள் தெரியுமா?
மகன் அல்லது மகளோடு பேசி அவங்க பிரச்னையை, சந்தோஷத்தைப் பேசிப் பகிருங்கள். பாதிப் பிரச்னை தீர்ந்த மாதிரிதான்.
உங்கள் குழந்தை 11 ஆம் வகுப்பு படிக்கும் போது கூட உங்களுக்குக் குழந்தைதான். ஆனால் அவனுக்கென்று ஓர் உலகம் இருப்பதைப் புரிந்து கொள்ளுங்கள்.
டீன் ஏஜ் வயதென்பது பல பிரச்னைகளைத் தலைக்குள் ஏற்றிக் கொண்டு, அதுவே உலகம் என அதன் பின் ஓடும் பருவம். நட்பாகட்டும், காதலாகட்டும், படிப்பாகட்டும் எல்லாமே ஓர் உருவமெடுக்கும் வயது. தோல்வி என்னும் வார்த்தையைக் கூடத் தாங்கிக் கொள்ள முடியாத காலம்.
அவன்/அவளின் உடம்பில் மட்டுமல்ல; மனதிலும் மாற்றம் ஏற்படும் வயது. நட்பு என்னும் வட்டம் பூதாகாரமாக உருவெடுக்கும் வயது. இந்த வயதில் நண்பர்கள் நல்லவர்களாக அமைவது ஒரு வரம். கெட்ட பழக்கங்களுக்கு வழி தடுமாறிப் போகும் வயது இது. இப்போதுதான் உங்களின் நெருக்கம் மிகவும் அவசியம். உங்களின் கண்காணிப்பும் அவசியம். அவன் / அவள் போக்கில் விட்டுவிட்டால் பின்பு வழிக் கொண்டு வருவது கடினம்.
அதற்காக எதிலும் சந்தேகப்படுவதும், எப்போதும் கூடவேயிருந்து பாதுகாப்பதுவும் தவறு. அவர்களை அவர்களே உணரமுடியாமல் அறிந்து புரிந்து கொள்ள வேண்டும். முகமாற்றத்திலேயே பிரச்னையை உணர்ந்து பிரச்னையைச் சரிசெய்யத்
தெரிந்திருக்க வேண்டும்.
பிரச்னையைச் சரி செய்ய வேண்டுமே தவிர, அவற்றைப் பெரிதாக்கக் கூடாது. அது போக எப்போதும் அறிவுரை யாருக்குமே பிடிக்காத ஒன்று. அதைக் கொஞ்சம் அளவோடு அவ்வப்போது உதிர்க்க வேண்டும். வீட்டுப் பொறுப்புகளைப் பகிர்ந்தளியுங்கள். குடும்பத்தில் அவனும்/அவளும் ஒரு முக்கிய உறுப்பினர் என்னும் உணர்வை ஊட்டுங்கள்.
நட்பு என்பது ஓர் உணர்வு. அந்த உணர்வுக்குப் பகிர்தல் இருந்தாலே போதும். குழந்தைகளிடம் வீட்டுக் கவலைகளைப் பகிருங்கள். வீட்டுப் பிரச்னைகளைப் பற்றியும் பேசுங்கள். இப்படிப்பட்ட பேச்சுக்களின் போது உங்களின் விருப்பு வெறுப்புக்களைப் பற்றிக் கலந்து பேசுங்கள். இந்த உணர்வே தங்களுக்கு ஒரு பிரச்னை என்றால் உடனே உங்களைத் தேடி வர வைக்கும்.
No comments:
Post a Comment