Wednesday, September 21, 2011

தியானம்... சில முக்கிய குறிப்புகள்


 என்.கணேசன் nganezen@gmail.com

தியானங்களில் பல வகைகள் உண்டு. அவற்றில் பெரும்பாலானவை இந்தியாவின் யோகாவிலிருந்து உருவானவை. கௌதம புத்தர் தன் ஞானத் தேடலின் ஆரம்பத்தில் பல யோகிகளிடம் தியான முறைகளைக் கற்றிருந்தார். ஞானமடைந்த பின்னர் அவர்
போதித்த தியான முறைகள் யோகாவையே அடிப்படையாகக் கொண்டிருந்தன. அவரது காலத்துக்குப் பின் அவருடைய சீடர்கள் அந்த தியான முறைகளில் பல ஆராய்ச்சிகள் செய்து, பல அனுபவங்கள் பெற்று மேலும் பல தியான முறைகளை உருவாக்கினார்கள்.
புத்த மதம் பரவிய பல நாடுகளில் தியான முறைகள் பல்வேறு வடிவம் எடுத்தன. ஜென் தியானம், திபெத்திய தியானம், தந்திரா தியானம், விபாசனா தியானம், போன்ற பல்வேறு தியானமுறைகளை புத்த மதம் உருவாக்கி வளர்த்தது.
ஜான் மெயின் (John Main), அந்தோனி டி மெல்லோ (Anthony de Mello) போன்ற மேலை நாட்டு அறிஞர்கள் இந்த தியான முறைகளை கிறிஸ்துவ மதத்திற்கு ஏற்றபடி மாற்றி அமைத்து பிரபலப்படுத்தினார்கள். வியட்நாம் நாட்டுப் புத்தபிக்கு திச் நாட் ஹான் (Thich Nhat Hanh) வியட்நாமியப் போரால் பாதிக்கப்பட்ட காலத்தில் ஆரம்பித்த சில தியான முறைகள் அமைதியிழந்த மக்களுக்கு அமைதியை ஏற்படுத்தித் தருவதில் வல்லமை உடையவையாக இருந்தன. ஓஷோ, மகரிஷி மகேஷ் யோகி, தீபக் சோப்ரா போன்றோர் பல தியான முறைகளை எளிமைப்படுத்தியும், பிரபலப்படுத்தியும் உலகெங்கும் பலதரப்பு மக்களைச் சென்றடையும் படி செய்துள்ளனர். இப்படி காலத்திற்கேற்ப, நம்பிக்கைகளுக்கேற்ப, தன்மைகளுக்கு ஏற்ப பல தியான முறைகள் பிரபலமாக உள்ளன.
ஆனால் எல்லா தியான முறைகளும் எல்லாருடைய தன்மைகளுக்கும் ஏற்ப இருப்பதில்லை. சிலருக்கு மிக நன்றாக தேர்ச்சி பெற முடிந்த தியான முறைகள் சிலருக்கு சிறிதும் ஒத்து வராததாக இருக்கும். ஒவ்வொரு தியான முறையையும் பிரசாரம் செய்பவர்கள் தங்களுடைய தியான முறை தான் மிகச் சிறந்தது என்று கூறுவார்கள். ஆனால் தியான முறைகளில் ஒன்று சிறந்தது, மற்றொன்று தாழ்ந்தது என்பது அறிவுபூர்வமான கருத்தல்ல.
எல்லா தியான முறைகளும் நம்மை அமைதிப்படுத்துவதாகவும், நம்மை அறிவதற்காகவும் தான் உருவாக்கப்பட்டுள்ளன. ஒரு தியான முறையே எல்லோருக்கும் மிகச் சிறந்ததாக இருக்குமானால் இன்னொன்றுக்கு அவசியமே இல்லை அல்லவா? அப்படிப் பல தியான முறைகள் இருப்பதே பல வகை மனிதர்களுக்கு ஏற்ப உதவுவதற்குத் தான். உங்கள் தன்மைக்கு ஏற்ப இருக்கும் ஒன்றை எடுத்துக் கொள்ளுங்கள். மற்றவற்றை விட்டு விடுங்கள். இந்த முறை தான் சரி, மற்ற முறைகள் சரியல்ல என்று கணிக்காதீர்கள். போக வேண்டிய இடத்திற்கு நம்மை கொண்டு போய் சேர்த்தால் எல்லா பாதைகளும் சிறந்தவையே.
பொதுவாக தியானங்கள் மதசார்பற்றவை. சில தியானங்களில் மந்திரங்கள், பிரார்த்தனைகள் உபயோகப்படுத்தப்படுகின்றன. அந்த மந்திரங்களும், பிரார்த்தனைகளும் மத நூல்களில் இருந்து எடுக்கப்பட்டவையாக இருக்கும் பட்சத்தில் மட்டுமே அவை மதங்கள் சம்பந்தப்பட்டவையாகின்றன. இல்லா விட்டால் அடிப்படையில் தியானங்கள் மத சார்பற்றவையே.
தியானங்களின் வகைகள் பலவாக இருந்தாலும் சில அடிப்படை விஷயங்கள் எல்லா தியானங்களுக்கும் பொருந்துவனவாக இருக்கின்றன. அவற்றை நாம் தெரிந்து கொள்வது மிக முக்கியம்.
முதலாவதாக இடம். ஆரம்பத்தில் தியானம் ஒரே இடத்தில் செய்வது நல்லது. அந்த இடத்தை நீங்கள் தூங்குவதற்கோ, அரட்டை அடிப்பதற்கோ, மற்ற வேலைகளைச் செய்வதற்கோ உபயோகப்படுத்தக் கூடாது. அந்த இடத்தை மிகத் தூய்மையாகவும், புனிதமாகவும் வைத்துக் கொள்ளுங்கள். தொடர்ந்து ஒரே இடத்தில் தியானம் செய்யும் போது அந்த இடத்தில் தியான அலைகள் உருவாக ஆரம்பிக்கின்றன. நாளாக நாளாக அந்த அலைகள் வலிமைப்பட ஆரம்பிக்கின்றன. முதலில் தியானம் கைகூட நிறைய நேரம் ஆனாலும் காலப்போக்கில் அந்த இடத்தில் தியானத்துக்காகச் சென்று அமர்ந்த சிறிது நேரத்திலேயே அங்கு உருவாகி இருக்கும் அலைகளின் தன்மையால் தியான நிலைக்குச் சுலபமாகப் போய் விடலாம். அந்த இடத்தில் வேறு வேலைகளைச் செய்தோமானால் தியான அலைகளுக்கு முரண்பாடான அலைகள் உருவாகி தியான அலைகளைப் போக்கடித்து விட வாய்ப்பு உள்ளது.
அந்தக் காலத்தில் பூஜையறை என்று ஒரு தனியறையை உருவாக்கி இருந்த காரணமும் அதற்குத் தான். இறைவன் எல்லா இடத்திலும் இருக்கிறானே பின் ஏன் தனியறை என்று சிலர் நினைக்கக் கூடும். காரணம் அந்த அறை இறைவனுக்காக இல்லை, நமக்காகத் தான். இறை எண்ணங்கள் அல்லாத, அதற்கு நேர்மாறான எண்ணங்களும் நமக்குள்ளே நிறையவே இருப்பதால் இறை எண்ணங்களையே பிரதானப்படுத்தும் ஓரிடமாவது நம் வீட்டில் இருக்க வேண்டும் என்று நம் முன்னோர் எண்ணினார்கள். கோயில்கள், வழிபாட்டுத் தலங்கள் ஆகியவை உருவாக்கப்பட்ட காரணமும் அது தான். ஆனால் இன்று அவற்றை எவ்வளவு புனிதமாக வைத்திருக்கிறோம் என்பது கேள்விக்குறியே!
யோகிகள், மகான்கள் இருக்கும் இடங்களுக்குச் சென்றவர்கள் ஒரு பேரமைதியை உணரக்கூடும். காரணம் அந்த இடங்களில் அவர்களது எண்ண அலைகள் நிறைந்திருப்பது தான். உதாரணத்துக்கு திருவண்ணாமலையில் ரமணாஸ்ரமத்தில் ரமண மகரிஷி தினமும் தியானம் செய்தபடி மக்களுக்கு தரிசனம் தந்து கொண்டிருந்த இடத்தைச் சொல்லலாம். இன்றும் அந்த அறையில் சென்று தியானம் செய்பவர்கள் அங்குள்ள சக்தி வாய்ந்த தியான அலைகளை உணரலாம்.
தனியறை என்று எங்கள் வீட்டில் கிடையாது என்று சொல்பவர்கள் ஒரு அறையின் மூலையைக் கூடத் தாங்கள் தியானம் செய்யும் இடமாகப் பயன்படுத்தலாம். அந்த இடத்தை புனிதமாக வைத்துக் கொண்டால் போதுமானது. பூஜையறை ஆனாலும் சரி, வேறு ஒரு அறையானாலும் சரி, அறையின் மூலையானாலும் சரி கோபம், வெறுப்பு, தீய எண்ண அலைகள் எதையும் அங்கு ஏற்படுத்தி அந்த இடத்தின் புனிதத்தன்மை, தியானத்தன்மை குறைந்து விடாமல் கவனமாக இருத்தல் முக்கியம்.
இரண்டாவதாக காலம். தியானத்திற்கு ஏற்ற காலங்களாக சந்தியா காலங்களை அக்காலத்தில் குறித்திருந்தார்கள். இரவும், பகலும் சந்திக்கும் அதிகாலை நேரமும், பகலும் இரவும் சந்திக்கும் மாலை நேரமும் தியானத்துக்கு உகந்தது என்று நினைத்தார்கள். ஆனால் இன்று நாளை ஆரம்பிக்கிற அதிகாலை நேரமும், நாளை முடிக்கிற இரவு நேரமும் சிறந்தது என்ற கருத்து பலப்பட்டு வருகிறது.
ஒரு நாளை தியானத்தில் ஆரம்பித்து, தியானத்தில் முடிப்பது நல்லது என்பது அப்படி கருதுபவர்களின் வாதமாக இருக்கிறது. ஆனால் இதில் திட்டவட்டமான விதிகள் இல்லை. குறைந்த பட்சம் 20 நிமிடங்களில் இருந்து 30 நிமிடங்களாவது தியானம் நீடித்தல் அவசியம். தினமும் இந்த 20 முதல் 30 நிமிடங்களை காலையும், மாலை அல்லது இரவும் செய்வது நல்லது. அதை ஒரு குறிப்பிட்ட நேரத்திலேயே தினமும் செய்வது சிறந்தது. மனிதன் பழக்கங்களால் ஆளப்படுபவன் என்பதால் அதை குறிப்பிட்ட நேரத்திலேயே தினமும் தொடர்ந்து செய்வது பழக்கமாகவே மாறி விடும். ஒரே ஒரு பொழுது தான் செய்ய முடியும் என்று
சொல்பவர்கள் அந்த ஒரு பொழுதிலாவது குறிப்பிட்ட நேரத்தில் தியானம் செய்ய வேண்டும்.
மூன்றாவதாக குறுக்கீடுகள். தியான நேரங்களில் குறுக்கீடுகளை குறையுங்கள். அந்த நேரங்களில் செல்போனை ஆஃப் செய்து வையுங்கள். வீட்டில் உள்ளவர்களிடம் அந்த நேரத்தில் எந்தக் குறுக்கீடும் செய்யாமல் இருக்கச் சொல்லுங்கள். முடிந்த வரை மற்ற கவன ஈர்ப்பு சமாச்சாரங்களைத் தவிர்க்கவும். மனமே வேண்டிய அளவு குறுக்கீடுகள் செய்யும் என்பதால் அதற்கு கூட்டணிக்கு மற்றவற்றையும் அழைத்துக் கொள்ளாதீர்கள்.

No comments:

Post a Comment