Wednesday, September 21, 2011

சிலவகைத் தம்பதிகளும், அவர் தம் தாம்பத்யமும்



- மன்னார் அமுதன்
வ்வொரு நாளும் நம் கண் முன் மகிழ்ச்சியாக வலம் வரும் தம்பதிகள் ஏராளம். எல்லோரும் உண்மையிலேயே சந்தோசமாகத் தான் உள்ளார்களா என்று பார்த்தால்; நிச்சயமாக இல்லை. பள்ளமும், மேடும்; ஊடலும், கூடலும் நிறைந்ததே வாழ்க்கையென்றாலும் பெரும்பாலான தம்பதிகளின் வாழ்வில் ஊடலும், உள்ளத்தில் பள்ளமுமே உள்ளது. இந்தப் பள்ளத்தில் பாசத்தை நிறப்பாமல் ஏன் வேசத்தை நிறப்பித் திரிகிறார்கள்?...
அயலில் உள்ள அக்கா வீட்டிற்கு போக நேர்ந்தது. அதன் விளைவே இப்பதிவு.
பிசைந்து வைக்கப் பட்டிருந்த மாவிற்கு அருகில் அமர்ந்திருந்த அக்காவிடம் கேட்டேன்.
நான்: ஏன் அக்கா மாவைப் பிசைந்து வைத்து விட்டு கவலையாக இருக்குறீங்க. ரொட்டியைப் சுட வேண்டியது தானே.
அக்கா: பசிக்குது தம்பி. என் கணவர் கடைக்குப் போயிட்டார். அதான் அவர் வர்ற வரைக்கும் பாத்திட்டிருக்கேன்.
நான்: அதுவும் சரி தானக்கா. வந்தப்பிறகு ரொட்டி சுட்டா, சூடா சாப்பிடுவேர் தான். புருசன் சாப்பிட்ட பிறகு சாப்பிடனும் என்பதெல்லாம் அந்தக்காலம் அக்கா. நீங்க சுட்டு சாப்பிடுங்களேன். ஏன் பசியோட இருக்கிறீங்க?
அக்கா: அவர் மாவைப் பிசைந்து கொண்டிருகையில தான் கடைப்பொடியன் வந்து கூப்பிட்டான். அவர் வந்து தான் ரொட்டி சுடோனும்.
அதென்னண்டா தம்பி, நான் வெளிநாட்டுப் பொடியன தானே முடிக்கிறதா இருந்துது. அங்க இப்பிடி எல்லாம் சமைக்க மாட்டாங்க எண்டு சொன்னாங்க. அதான் நான் சமைக்கப் பழகல.
நான் கண்ட சிலவகைத் தம்பதிகளும், அவர் தம் தாம்பத்யமும். தாம்பத்யம் மூலமே அன்னியோன்யம் வளர்கிறது. அதுவே அவர்களைப் பிரிக்க முடியா பந்த பாசத்திற்குள் கட்டி வைக்கிறது என்பது என் கருத்து.
வகை 1.
தம்பதிகளில் கணவன் குடிகாரனாகவும், நாள் தவறாமல் நன்கு குடித்து விட்டு மனைவியை வதை செய்பவனாகவும் இருக்கிறான். இல்லையென்றால் சந்தேகம் கொண்டு வார்த்தைக் கணைகளால் காயப் படுத்துகிறான். அவன் மனைவியோ அனைத்தையும் தாங்கிக் கொண்டு தன் கணவனைத் எப்பாடு பட்டாவது திருத்தி விட வேண்டுமென பிரயாசைப்படுகிறாள்.
இவ்வாறு நல்லெண்ணம் கொண்ட மனைவியையும், தீய எண்ணம் கொண்ட கணவனையும் நாம் அன்றாட வாழ்வில் காண்கிறோம்.
வகை2:
கணவன் மிகவும் நல்லராக இருப்பார். மனைவியோ அவரின் குணாதிசயங்களுக்கு சிறிதும் பொருத்தமில்லாத குணங்களைக் கொண்டு இருப்பார். தன்னுடையை புத்திக்கு எட்டாத சிறு சிறு விசயங்களுக்காக அவள் அவனோடு எந்நேரமும் சண்டையிடுபவளாக, ஒவ்வொரு விசயத்திலும் தன்னை முன்னிருத்த முயன்று முயன்று, முடியாத நிலையில் கணவனைச் சாடுபவளாக இருக்கிறாள்
வகை3:
கணவன் தன் வேலையைத் தான் பார்ப்பார். மனைவி தன் வேலையை தானே பார்த்துக் கொள்வார். இருவரும் எப்போதும் ஒருவராகாமல், இருவராகவே வாழ்ந்து வருவார்கள். இன்ப துன்பங்களைப் பகிர்ந்து கொள்ளாமல், ஒருவருடைய விடயத்தில் மற்றொருவர் பங்கெடுக்காமல், தோள் கொடுக்காமல் நான்கு சுவருக்குள் ஊருக்காய் வாழ்வார்கள். இவர்களுக்குள் ஊடலும் இல்லை. கூடலும் இல்லை. சரியாகச் சொன்னால் இவர்கள் தம்பதிகளே இல்லை.
வகை4:
வெகுசில தம்பதிகள் மட்டுமே ஊடல் மற்றும் கூடலுடன் மகிழ்ச்சியான வாழ்க்கையை வாழ்கிறார்கள். இருப்பினும் இவர்களில் ஒருவர் விரைவிலேயே மரணித்து விடுகிறார்கள். அல்லது இவர்களுடைய மரணம், நமக்கு வெகு விரைவிலேயே ஏற்படுவது போல் தோன்றுகிறது.
நல்லவனுக்கு கெட்ட மனைவியும், கெட்டவனுக்கு நல்ல மனைவியும், மனைவியின் ஆசைகளை நிறைவேற்ற கடுமையாக உழைப்பவனுக்கு விபச்சாரியும், உத்தம பத்தினிக்கு மது, மாதுவுடன் புழங்கும் கணவனும் அமைவது ஏன்?
இதனை இயற்கை, இயற்கையின் சமச்சீர் விதி என்று புறந்தள்ள முடியவில்லை. இல்லறப் புரிந்துணர்வுகள் பற்றி தொண்டை கிளியக் கத்தினாலும் ஏன் காலம் காலமாக இவை மாறாமல் உள்ளன.
மனப் பொருத்தம் பார்க்காமல், பணப் பொருத்தம் பார்ப்பதாலா? அல்லது திருமணங்கள் சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படுவதாலா? நீங்களும் சொல்லுங்கள்....

No comments:

Post a Comment