Wednesday, September 21, 2011

ஆட்டுவித்த நினா!



- என்.கணேசன்
நினா குலாகினா என்ற ரஷியப் பெண்மணிக்குப் பல அற்புத சக்திகள் இருந்த போதிலும் அவற்றை அவர் அடையாளம் கண்டு கொள்ள சாதகமான சூழ்நிலைகள், அவரது இளமைக் காலத்தில் இருக்கவில்லை. நாசிகள் லெனின்கிராடு நகரை இரண்டாம் உலகப் போர் சமயத்தில் ஆக்கிரமிக்க முற்பட்ட போது, லெனின்கிராடு நகரவாசியான நினா குலாகினா தன் பதினான்காம் வயதிலேயே ராணுவத்தில் சேர வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டது.
அந்தப் போரில் வீரசாகசம் புரிந்து, காயமடைந்து, பின் குணமாகி, திருமணமாகி இயல்பு வாழ்க்கை திரும்பிய பிறகு தான் தன்னிடமிருந்த சக்திகளை அவரால் அடையாளம் காண முடிந்தது.
ஒரு நாள் ஏதோ கோபத்துடன் அவர் வீட்டினுள் நுழைந்த போது, அலமாரியில் வைத்திருந்த ஒரு ஜக் தானாக நகர்ந்து விளிம்புக்கு வந்து கீழே விழுந்து நொறுங்கியது. அவரால் அப்போது உடனடியாக அதற்குக் காரணம் சொல்ல முடியாவிட்டாலும் தொடர்ந்த நாட்களில் விளக்குகள் அணைவது, பொருள்கள் அவர் இருப்பால் அசைதல் போன்ற சம்பவங்கள் நடக்க
ஆரம்பித்தன. பின்னர் தன்னிடம் ஏதோ சக்தி உள்ளது என்று தோன்ற ஆரம்பித்தது. அவராகவே சில முயற்சிகள் எடுத்துப் பார்த்த போது தன்னால் பொருள்களைத் தொடாமலேயே அசைத்து, கட்டுப்படுத்த முடிகிறது என்பது அவருக்கு விளங்க ஆரம்பித்தது.
அவர் 1964-ல் நரம்புத் தளர்ச்சியால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். குணமடைய ஆரம்பித்த போது அந்த மருத்துவமனையில் பொழுதுபோக்குக்காக நிறைய தைக்க ஆரம்பித்தார். அவர் பையில் பல நூல்கண்டுகள் இருக்கும். பையைத் திறந்து பார்க்காமலேயே தனக்கு வேண்டிய நிற நூல்கண்டை எடுக்கும் விதத்தைப் பார்த்து டாக்டர்கள் அசந்து போனார்கள். இந்த விஷயம் உள்ளூரில் வேகமாகப் பரவியது. உள்ளூர் அறிஞர்கள் மறு வருடம் அவரைத் தொடர்பு கொண்டு, அவரை ஆராய்ச்சி செய்ய அனுமதி கேட்ட போது, நினா குலாகினா உடனே தயக்கமில்லாமல் ஒப்புக் கொண்டார். அப்போது செய்த
ஆராய்ச்சிகளில் நினா குலாகினா தன் விரல் நுனியின் தொடு உணர்ச்சி மூலமாக நூல்கண்டின் நிறத்தை எளிதாக அறிந்து கொள்கிறார் என்பது நிரூபணமாகியது.
அதோடு அவருக்கு காயங்களைக் குணப்படுத்தும் அபார சக்தியும் இருந்தது. காயங்களுக்கு சற்று மேலே சிறிது நேரம் கையை வைத்திருந்தே குணப்படுத்திக் காட்டினார். அவர் ஒரு மேசையின் முன் அமர்ந்து மேசை மேல் இருக்கும் தீப்பெட்டி
அல்லது டம்ளர், பேனா போன்ற பொருள்களை வெறித்துப் பார்த்தே, தொடாமலேயே நகர்த்திக் காட்டும் சக்தியைப் பெற்றிருந்தார். ஆனால் அந்த சக்தி எல்லா சமயங்களிலும் உடனடியாக அவருக்குக் கிடைப்பதில்லை. மனதில் மற்ற எண்ணங்களை விலக்கி, ஒருமுகப்படுத்திய பின்னரே அந்த சக்தி அவருக்கு சாத்தியமாயிற்று. அந்தசமயத்தில் தண்டுவடத்தில் அதிக வலியும் பார்வையில் மங்கலும் தனக்கு ஏற்படுவதாக அவர் ஆராய்ச்சியாளர்களிடம் தெரிவித்தார்.
அவரை ஆராய்வதில் முதலில் அதிக ஆர்வம் காட்டியவர் எட்வர்டு நவ்மோவ். அவர் செய்த ஆரம்ப பரிசோதனை ஒன்றில் நினா குலாகினாமேசை மேல் பரப்பி வைத்திருந்த தீப்பெட்டி குச்சிகளைத் தொடாமல் சற்று தூரத்தில் தன் கைகளை வைத்து அவற்றையெல்லாம் மேசை நுனிக்கு வரவைத்து ஒன்றன் பின் ஒன்றாக விழ வைத்துக் காட்டினார்.
ஸ்டாலினிடம் தன் சக்திகளை நிரூபித்து லெனின்கிராடில் ஆராய்ச்சிக் கூடம் ஏற்படுத்திய வாசிலிவும் நினா குலாகினாவை வைத்து நிறைய ஆராய்ச்சிகள் செய்தார்.
அறுபதுக்கும் மேல் பரிசோதனைகளை நிழற்படமாகவே எடுத்து வைத்திருந்தார் வாசிலிவ். ஆனால், ஸ்டாலினின் ரகசியக் கட்டுப்பாடு காரணமாக வெளிவராமல் இருந்த அந்த படங்களைப் பின்னர் திரையிட்டுப் பார்த்த போது பல திரைப்படங்களில் தரம் தெளிவாக இருக்கவில்லை.
நினா குலாகினாவின் அபூர்வ சக்திகள் பற்றிய செய்திகளும், படங்களும் மேற்கத்திய நாடுகளையும் சென்றடைந்தது. 1968ல் ஆழ்மன ஆராய்ச்சியாளர்களின் முதல் மாஸ்கோ கருத்தரங்கில் நினா குலாகினாவின் பரிசோதனை பற்றிய தெளிவான சில நிழற்படங்கள் காட்டப்பட்டதை மேற்கத்திய நாடுகளின் விஞ்ஞானிகளும் கண்டார்கள்.
அவர்களுடைய ஆவல் தூண்டப்படவே அவர்கள் குறுகிய காலத்துக்கு ரஷியா வந்து நினா குலாகினாவை பரிசோதனை செய்ய 1968 முதல் 1970 வரை அனுமதிக்கப்பட்டார்கள். அவர்களும் இந்த ஆராய்ச்சிகளில் காந்தம், கண்ணுக்குத் தெரியாத நூல் போன்றவற்றை நினா குலாகினா மறைத்து வைத்து உபயோகப்படுத்துகிறாரா என்பதைக் கண்டறிய பல ஆரம்ப
முன்னெச்சரிக்கை ஏற்பாடுகளைச் செய்து விட்டுத் தான் ஆராய்ச்சிகளை ஆரம்பித்தார்கள். வில்லியம் மெக்கேரி என்ற ஆராய்ச்சியாளர் முன் மேசை மேல் இருந்த பல சிறிய பொருள்களை இடம்பெயரச் செய்த அவர் ஒரு மோதிரத்தை அந்தரத்தில்
சுழற்றிக் காட்டினார். இன்னொரு அமெரிக்க ஆராய்ச்சியாளரான விர்ஜீனியா பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த கெய்தர் ப்ராட் எடையிலும், அளவிலும், தன்மையிலும் வித்தியாசப்பட்ட பல விதமான பொருள்களை தன் விருப்பப்படி நினா குலாகினா அசைத்துக் காட்டியதைக் கண்டு வியந்தார். விஞ்ஞானம் அன்று வரை அறிந்த எந்த சக்தியாலும் அது நடக்கவில்லை என்பது அவருடைய கருத்தாக இருந்தது.
செக்கோஸ்லோவேகியாவைச் சேர்ந்த விஞ்ஞானி டாக்டர் ஸ்டெனெக் ரெஜ்டாக் தன் சோதனைகளில் அடிக்கடி நினா குலாகினாவை இடம் மாறி உட்காரச் சொன்னார். இடம் மாறினாலும் அவர் செய்து காட்டிய அற்புதங்கள் குறையவில்லை. தன் சிகரெட் ஒன்றையும் மேசை வைக்க குலாகினா தன் பார்வையாலேயே உடனடியாக நகர்த்திக் காட்டினார். அந்த ஆராய்ச்சி முடிந்த பிறகு சிகரெட்டை ஆராய்ந்த போது உள்ளே துகள்கள் எதுவும் இருக்கவில்லை என்றார் ரெஜ்டாக். ஆராய்ச்சிகளின் இடையே அவ்வப்போது மருத்துவர்களைக் கொண்டு நினா குலாகினாவின் உடலையும் ரெஜ்டாக் பரிசோதிக்கச் செய்தார்.
1970 மார்ச் 10 ஆம் தேதி லெனின்கிராடு ஆராய்ச்சிக் கூடத்தில் ஒரு வித்தியாசமான இன்னொரு அற்புதத்தை நினா குலாகினா நிகழ்த்திக் காட்டினார். ஒரு தவளையின் இதயத்துடிப்பைத் தன் மனோசக்தியால் அதிகரித்துக் காட்டினார். பின் அதை குறைத்துக் காட்டினார். பின் இதயத்துடிப்பை நிறுத்திக் காட்டினார். பின் மறுபடி இயக்கிக் காட்டினார். இதைக் குறித்து வேறொரு சமயம் கிண்டல் செய்த ஒரு மனோதத்துவ நிபுணரின் இதயத் துடிப்பையும் அதிகரித்துக் காட்டி பயமுறுத்திய நினா குலாகினா அது போன்ற அபாயமான செயல்களை பின்னர் தொடரவில்லை.
நினா குலாகினா ஆராய்ச்சிகளில் முழு ஒத்துழைப்பு கொடுத்ததாக அவரைப் பரிசோதித்த அனைத்து ஆராய்ச்சியாளர்களும் ஒருமித்துக் கூறுகிறார்கள். ஆராய்ச்சி செய்யும் இடங்கள் அடிக்கடி மாற்றப்பட்டன. சில ஆராய்ச்சிகள் திறந்த வெளிகளில் கூட நடந்தன. அவர் சக்திகளை ஆரம்பத்தில் சந்தேகக் கண்ணோடு பார்த்த மேற்கத்திய நாடுகளின் விஞ்ஞானிகள் எத்தனையோ சோதனைகளில் அவரை ஈடுபடுத்தினார்கள். சில ஆராய்ச்சிகளில் அவரைச் சுற்றி பல டெலிவிஷன்களை வைத்து வெளியில் வேறு பலராலும் கூட கண்காணிக்கப்பட்டார். பின்னரே அவருடைய சக்திகளை அவர்கள் ஒத்துக் கொண்டனர்.
ஆனால் இது போன்ற சக்தி வெளிப்பாடுகளை நினா குலாகினா தொடர்ந்து செய்து காட்டியது அவர் உடல்நிலையைப் பெரிதாகப் பாதித்தது. தன் நிகழ்ச்சி ஒன்றிற்குப் பிறகு டாக்டர் ரெஜ்டாக் செய்த பரிசோதனையில் நினா குலாகினா நான்கு பவுண்டுகள் எடை குறைந்ததாகத் தெரிவித்தார். முகம் வெளுத்துப் போய் தன்னால் சிறிது கூட நடக்க முடியாத அளவு அவர் சக்தி இல்லாமல் போயிருந்தார் என்றும் அவர் தெரிவித்தார். நிகழ்ச்சிகளுக்குப் பின் கடும் உடல்வலியும், மயக்க நிலையும் கூட ஏற்படுவதாக நினா குலாகினா தெரிவித்தார்.
ஒரு கட்டத்தில் டாக்டர்கள் அவரை இந்த அற்புத சக்திகளை செய்து காட்டுவதை நிறுத்திக் கொள்ளும்படி எச்சரித்தார்கள். அது அவர் உயிருக்கே அபாயம் தரலாம் என்று தெரிவித்தார்கள். நினா குலாகினா நிறுத்திக் கொள்ளா விட்டாலும் மிகவும் குறைத்துக் கொண்டார். 1990ல் அவர் இறந்த போது ரஷியா அவரை லெனின்கிராடு வீராங்கனை என்று போர்கால வீரதீரச் செயல்களுக்காகப் பாராட்டியது.
எத்தனையோ ஆராய்ச்சியாளர்கள் பரிசோதனை செய்து உறுதிப்படுத்திக் கொண்ட நினா குலாகினாவின் இந்த அபூர்வ சக்திகளுக்கு விஞ்ஞானம் பதில் சொல்ல முடியவில்லை. பதில் ஆழ்மனதின் அற்புதத் தன்மையிலேயே இருக்கிறது என்பதற்கு வேறென்ன தெளிவு வேண்டும்?

No comments:

Post a Comment