நீங்கள் டீன் ஏஜ் வயதினரா..? இரவில் தூங்குவதற்கு நள்ளிரவுக்கு மேல் ஆகிவிடுகிறதா..? ஆம், எனில் உங்களுக்குக் கடுமையான மன அழுத்தமும், அதன் காரணமாக சிலருக்கு தற்கொலை எண்ணமும் ஏற்படுவதற்கான அபாயம் உண்டு என்று எச்சரிக்கிறது, ஒரு புதிய உளவியல் - மருத்துவ ஆய்வு.
இளம் வயதினரின் தூக்கத்துக்கும், மன அழுத்தத்துக்கும் இடையிலான தொடர்பு குறித்து நடத்தப்பட்ட ஆய்வு மற்றும் அதன் முடிவுகள் அடங்கிய விவரங்களை, ஸ்லீப் (SLEEP) மருத்துவ இதழ் வெளியிட்டுள்ளது.
இரவில் சீக்கிரமாக உறங்கச் செல்கின்ற வளரிளம் பருவ வயதினருக்கு மன அழுத்தமும், அதன் தாக்கத்தால் எழுகின்ற தற்கொலை எண்ணமும் வருவது வெகுவாக குறைந்து காணப்படுகிறது என்று அந்த ஆய்வின் முடிவுகள் தெரிவிக்கின்றன.
நியூயார்க்கிலுள்ள கொலம்பியா பல்கலைக்கழகத்தின் உளவியல் துறை மருத்துவப் பேராசிரியர் ஜேம்ஸ் இ காங்விஸ்க் தலைமையிலான ஆய்வுக் குழு, மொத்தம் 15,659 வளரிளம் பருவ மாணவ - மாணவியரிடம் ஆய்வு மேற்கொண்டது.
இரவில் சீக்கிரமாகவே தூங்குவதால், போதுமான அளவில் தூங்க முடிகிறது. இதனால், மன அழுத்தத்துக்கு முக்கிய காரணியாக இருக்கும் தூக்கமின்மை பிரச்னை நீங்குவதோடு, மன அழுத்த பாதிப்பில் இருந்து வெகுவாக பாதுகாத்துக் கொள்ளவும் வழிவகுக்கப்படுகிறது என ஆய்வு முடிவுகள் பரிந்துரைக்கின்றன.
வளரிளம் பருவத்தினரில் ஐந்து மணி அல்லது அதற்கு குறைவான மணி நேரங்கள் தூங்குபவர்களுக்கு கடுமையான மன அழுத்த பாதிப்பு ஏற்படுவதற்கு 71 சதவீத வாய்ப்புண்டு; அதில் தற்கொலை எண்ணத்துக்கு 48 சதவீத அளவில் ஆபத்துண்டு என்றும் விவரிக்கும் அந்த ஆய்வு, இந்த பாதக நிலையில் இருந்து காத்துக்கொள்வதற்கு தினமும் எட்டு மணி நேர தூக்கம் அவசியம் என்று அறிவுறுத்துகிறது.
போதுமான தூக்கமின்மையால் மன அழுத்த பாதிப்பு அதிகரிக்கும் அபாயம் உண்டு என்ற முந்தைய ஆய்வுகளை உறுதி செய்யும் இந்தப் புதிய உளவியல் மருத்துவ ஆய்வு, இரவில் சீக்கிரமாகவே படுக்கைக்குச் சென்று உறங்கும் பட்சத்தில், மன அழுத்த பாதிப்பில் இருந்து வெகுவாக விடுபடலாம் என்பதை கண்டறிந்துள்ளது.
No comments:
Post a Comment