- என்.கணேசன்
நம் மனநிலைகள் மூளையில் சிலவித மின் அலைகளை ஏற்படுத்துகின்றன. அந்த அலைகள் எலெக்ட்ரோசெபாலோக்ராஃப் (electrocephalograph - EEG) என்ற கருவியால் அளக்க முடிந்தவை. அவை ஒரு வினாடிக்கு எந்த அளவு ஏற்படுகின்றன என்பதை சிபிஎஸ் (Cycles per second -CPS) என்பதை வைத்து அளக்கின்றனர். அவை நான்கு வகைப்படும்.
பீடா அலைகள் (Beta Waves) - பதினான்குக்கும் மேற்பட்ட சிபிஎஸ் அலைகள் பீட்டா அலைகள். நாம் பெரும்பாலும் இருப்பது இந்த அலைவரிசையிலேயே.
ஆல்ஃபா அலைகள் (Alpha Waves) - எட்டிலிருந்து பதிமூன்று சிபிஎஸ் வரை உள்ள அலைகள் ஆல்ஃபா அலைகள். இது தூக்கம் தழுவுவதற்கு முன்னும், அரைத்தூக்கத்திலும் ஏற்படும் அலைகள். தியானத்தின் ஆரம்பத்திலும் இந்த அலைகள் ஏற்படும்.
தீட்டா அலைகள் (Theta Waves) - நான்கிலிருந்து ஏழு சிபிஎஸ் வரை உள்ள அலைகள் தீட்டா அலைகள். இவை குழந்தைகளிடம் அதிகம் காணப்படுகின்றன. அதே சமயம் ஆழ்ந்த தியானத்தின் போதும் வெளிப்படுகின்றன.
டெல்டா அலைகள் (Delta Waves) - நான்குக்கும் குறைவான சிபிஎஸ் உள்ள அலைகள் டெல்டா அலைகள். பிறந்து சில மாதங்கள் வரை குழந்தைகளிடம் காணப்படுகின்றன. யோகிகள், சித்தர்களிடமும் இந்த டெல்டா அலைகள் காணப்படுகின்றன.
இந்த நான்கு அலைகளில் பீட்டா அலைகளில் நாம் எந்த அதீத சக்தியும் பெற முடிவதில்லை. ஆனால் மற்ற அலை வரிசைக்குள் நம்மை ஈடுபடுத்திக் கொள்ள முடியும் போது எல்லா அதீதமான சக்திகளும் நமக்கு சாத்தியமாகின்றன.
அது எப்படி என்பதையும் நாம் புரிந்து கொள்வது நல்லது.
அணுவைப் பிளந்து பார்த்த பின் விஞ்ஞான உலகில் ஏற்பட்ட மாற்றம் பிரம்மாண்டமானது. உள்ளே இடைவிடாத கதிர் இயக்கத்தைக் கண்ட விஞ்ஞானிகள் திகைத்துப் போயினர். அது வரை திடப்பொருள், திரவப் பொருள், வாயுப் பொருள்
என்பது பார்வைக்கு மட்டுமல்ல உண்மையிலேயே அப்படித்தான் என்று நம்பி வந்த விஞ்ஞானிகள் கடைசியில் எல்லாம் சக்தி மயம் என்ற முடிவுக்கு வர நேர்ந்தது.
காணும் பொருள்கள் எல்லாம் சக்தியின் துடிப்புகளாக, சக்தியின் விதவிதமான மாறுதல்களாக இருக்கக் கண்டனர். விஞ்ஞானத்தில் க்வாண்டம் இயற்பியல் (Quantum Physics) என்ற புதிய அத்தியாயம் ஆரம்பித்தது.
பொருட்களும், மனிதர்களும், விலங்குகளும், மற்ற உயிருள்ளவையும், உயிரற்றவையும் மிக மிக நுண்ணிய மைக்ராஸ்கோப்பினால் பார்க்கப்படும் போது சக்தியின் வெளிப்பாடுகளாக, கதிரியக்கங்களாகத் தெரிவதாக இன்றைய விஞ்ஞானம் சொல்கிறது. எனவே நாம் எல்லோரும், எல்லாமும் ஆழத்தில், அடிமட்டத்தில் ஒரு மகாசக்தியின் மிக நுண்ணிய பகுதியாக இருக்கிறோம். அந்த சக்தி மட்டத்தில் ஒன்றுபடுகிறோம். அந்த மட்டதுக்கு நம் உணர்வு
நிலையைக் கொண்டு போனோமானால் நாம் அறிய முடியாததில்லை. நம்மால் சாதிக்க முடியாததில்லை.
இதை வைத்தே "தத்துவமஸி" (நீயே அது), அஹம் ப்ரம்மாஸ்மி (நான் ப்ரம்மம்), என்ற வேத வாக்கியங்கள் எழுந்திருக்க வேண்டும். Know Thyself (உன்னையே நீ அறிவாய்) என்று பல மதங்களில் பிரதான அறிவுரையாகக் கூறுவதும் உன்னை நீ முழுவதுமாக அறிய முடியும் போது எல்லாவற்றையும் முழுமையாக அறிய முடியும் என்ற அடிப்படையில் தான் இருக்க வேண்டும்.
எத்தனையோ விஷயங்கள் ஆழ்மன அளவிலேயே தீர்மானிக்கப்படுகின்றன என்றும் விபரமறிந்தவர்கள் கூறுகிறார்கள். இது மனிதர்கள் விஷயத்தில் மட்டுமல்லாமல் மற்ற உயிரினங்கள் விஷயத்திலும் உண்மையாக இருப்பது தான் பேராச்சரியம்.
உதாரணத்துக்கு எறும்புகள் குறித்து நடந்த ஒரு ஆராய்ச்சியைச் சொல்லலாம். ராணி எறும்பை எறும்புக் கூட்டத்தில் இருந்து அப்புறப்படுத்தி எத்தனை தொலைதூரத்தில் வைத்தாலும் எறும்புகளின் கட்டுமானப்பணிகள் தடைபடாமல் கச்சிதமாக நடப்பதை ஆராய்ச்சியாளர்கள் கண்டனர். ஆனால் தொலைதூரத்தில் இருக்கும் அந்த ராணி எறும்பைக் கொன்று விட்டாலோ அந்த எறும்புகள் செய்வதறியாது ஸ்தம்பித்துப் போய் விடுகின்றன என்பதையும் அங்குமிங்கும் அலைபாய்கின்றன என்பதையும் ஆராய்ச்சியில் அறிய முடிந்தது. எவ்வளவு தொலைவானாலும் சரி ராணி எறும்பு உயிருடன் இருக்கும் வரை அதனிடமிருந்து எப்படியோ தேவையான கட்டளைகள் மற்ற எறும்புகளுக்குப் போய் சேர்கின்றன என்பது மிகப்பெரிய ஆச்சரியம் அல்லவா? அப்படி செய்திகள் பரிமாற்றம் ஆவது ஆழ்மன அளவிலேயே தான் இருக்க வேண்டும் என்பது தான் பலருடைய கருத்தாக
இருக்கிறது.
நாம் முன்பு பார்த்த பல ஆழ்மன சாதனையாளர்களும் ஒருவித அரைமயக்க நிலைக்குச் செல்ல முடிந்த போது தான் அற்புதங்களை நிகழ்த்திக் காட்டினார்கள் என்பதைக் கண்டோம். மேல்மன சலசலப்புகள் குறைந்து ஆழ்மன பிராந்தியத்துக்குள் நுழையும் போது தான், ஆல்ஃபா, தீட்டா, டெல்டா அலைகளில் சஞ்சரிக்கும் போது தான், எல்லோரையும் பிணைக்கும் மாபெரும் பிரபஞ்ச சக்தியைத் தொடர்பு கொள்ள முடிகிறது.
உதாரணத்துக்கு, எல்லாத் தகவல்களும் அண்ட வெளியில் பரந்து கிடப்பதாகவும் அதை ஆகாய ஆவணங்கள் என்றும் எட்கார் கேஸ் சொன்னதை எண்ணிப்பாருங்கள். அதைப் படிக்கும் கலையை அறிந்து கொண்டால் எந்தத் தகவலையும் மிக எளிதாகப் பெற்று விடலாம் என்று அவர் சொன்னதையும் சிந்தித்துப் பாருங்கள்.
ஆல்ஃபா, தீட்டா, டெல்டா அலை வரிசைகளில் சஞ்சரித்து ஆழ்மன சக்திகளை அடைய முதலடி எடுத்து வைப்போமா?
No comments:
Post a Comment