அருணா சுரேஷ், பள்ளி முதல்வர்
ஆசிரியர்களே... நீங்கள் வகுப்பறைக்குள் எடுக்கும் ஒவ்வொரு முடிவுகளும் வகுப்பில் எத்தனை மாணவர்களோ அத்தனை பேரையும் சாதகமாகவோ அல்லது பாதகமாகவோ பாதிக்கக் கூடும் என்பதை நினைவில் கொள்ளுங்கள். அத்துடன், உங்கள் வகுப்பில் அனைத்து மாணவர்களின் குடும்பத்துடன் நீங்கள் இணைந்திருக்கிறீர்கள் என்பதையும் மறவாதீர்கள்.
வகுப்பறையில் உங்களின் ஒவ்வொரு அசைவுகளும் கவனிக்கப்படுகின்றன. குறிப்பாக, 40 மாணவர்கள் இருக்கும் வகுப்பில் அனைவராலும் நுணுக்கமாகக் கவனிக்கப்படுகிறீர்கள். ஒரு மாணவனின் மனநிலையை, அவனது சுய மரியாதையை உயர்த்துவதோ தாழ்த்துவதோ உங்களின் கையில்தான் இருக்கிறது.
இன்றையச் சூழலில் ஒரு சில ஆசிரியர்களின் முழுக் கவனமும் 'மாணவனை எப்படித் தன் கைக்குள் போட்டுக் கொள்ளலாம்', 'அவனை தமது டியூஷன் வகுப்புக்கு எப்படி வரவைக்கலாம்,' என்பன போன்ற எண்ணத்தில் தான் மேலோங்கியிருப்பதாகத் தெரிகிறது. இந்த எண்ணம் தான் உங்களிடமிருந்து மாணவர்களை அந்நியப்படுத்தி விடுகிறது.
வசதியிருக்கும் மாணவர்கள் மனத்தில் திட்டிக் கொண்டேயாயினும் டியூஷன் வகுப்பில் சேர்ந்து விடுகிறார்கள். ஆனால், வசதியில்லாதவர்கள் உங்களிடமிருந்து மனதளவில் வெகுதூரம் போய்விடுகிறார்கள். ஒரு வகையில் மாணவர்களின் இன்றைய நிலமைக்கும், அவர்களின் நிலை தடுமாறிய போக்குக்கும் கூட அதிக சதவீதம் ஆசிரியர்கள் காரணம் என்பேன்.
குழந்தைகள் சில வாழ்வியல் திறன்களை வீட்டில் பார்த்துக் கற்றுக் கொள்கின்றன. குறிப்பிடத்தக்க வாழ்வியல் திறன்களை பள்ளியில் பார்த்துக் கற்றுக் கொள்கின்றன. தற்போது நல்வழிகளையும் நற்குணங்களையும் பார்த்துக் கற்றுக் கொள்ள சரியான முன்மாதிரிகள் அவர்களுக்கு இல்லை.
மாணவர்களை, 'நீ ஒன்றுக்கும் உதவாதவன்' என்று முத்திரை குத்தாதீர்கள். நாம் கூட குழந்தைப் பருவத்தில் அனைவரின் முன் வாங்கிய கைதட்டல் வாழ்நாள் முழுவதும் கூடவே வருவதை அனுபவித்து உணர்ந்திருப்போம். அதே போல் என்றோ ஒருநாள் ஏற்பட்ட அவமானமும் வாழ்நாள் முழுவதும் கூடவே வந்து துன்புறுத்துவதையும் அறிவோம்; அனுபவித்துமிருப்போம். அதையே குழந்தைகளுக்கும் தரவேண்டுமா?
சிறு விஷயங்களுக்கும் குழந்தைகளை ஊக்குவிப்பதும், உற்சாகப்படுத்துவதும் அவர்களின் வாழ்வையே தலைகீழாக்கும் வித்தைகள் செய்வதுண்டு. பாராட்டுங்கள்; ஊக்குவியுங்கள்; உற்சாகப்படுத்துங்கள். அவர்கள் மேல் பாடம் படிப்பதில் மட்டுமல்லாமல் தனிப்பட்ட முறையிலும் அக்கறை காட்டுங்கள். தினமும் ஒரு நல்லப் பழக்கத்தை அறிமுகப்படுத்துங்கள். நல்ல செயல்களை மனம் திறந்து அனைவரின் முன் பாராட்டுங்கள். நாற்பது பேரில் நான்கு பேர் அதனால் ஊக்குவிக்கப்பட்டால் கூட முன்னேற்றம்தான்.
ஒரு மரம் நட்டு, அது வளர்ந்து எப்படி அடுத்தவர்களுக்குப் பயன்படுகிறதோ அதே போல்தான் ஓர் ஆசிரியரின் பணியும். அந்தப் பணிக்கிடையில் தற்போதைய பெற்றோர்கள் ஒரு பெரும் தடைக்கல்லாக மாறிவருகிறார்கள் என்பதை மறுக்க முடியாது. மாணவர்களை நெறிமுறையோடு வளர்ப்பது ஒரு பெரிய சவாலாக ஆகிவிட்டது.
'என் பிள்ளையை எதுவும் செய்யவேண்டாம்', 'படிக்காவிட்டாலும் பரவாயில்லை' எனும் பெற்றோர்களையும் பார்த்திருக்கிறோம். 'என்ன செய்வீங்களோ ஏது செய்வீங்களோ தெரியாது. என் பிள்ளைக்கு மார்க் வந்தாகணும்' எனச் சொல்லும் பெற்றோர்களையும் பார்த்திருக்கிறோம். இப்படிப் பிள்ளைகளை நெறிமுறைப்படுத்துவதில் பெற்றோர்களின் தலையீடு அளவுக்கு அதிகமாகவே இருக்கிறது. தாங்கள் செய்யும் தவறுக்கு வக்காலத்து வாங்க பெற்றோர்கள் இருக்கிறார்கள் என்ற தெம்பே மாணவர்களை மீண்டும் மீண்டும் தவறு செய்யத் தூண்டுகிறது.
மாணவர்களுக்கு நாம் எதைக் கற்றுக் கொடுக்கிறோமோ அதையேதான் நம்மிடமும் காட்டுவார்கள். நாம் கேலி செய்தால் அவர்கள் திருப்பிக் கேலி செய்கிறார்கள். நான் எப்போதும் என் ஆசிரியர்களிடமும் சொல்வது... Your values are reflected in your students.
தற்போதைய மாணவர்களின் போக்கு ஆசிரியர்களின் நடத்தையைத்தான் பிரதிபலிக்கச் செய்வதாகத்தான் எடுத்துக் கொள்ள வேண்டியதிருக்கிறது. ஆசிரியர்களுக்கும் குழந்தைகளுக்குமான நெருக்கத்தை அதிகப்படுத்த வேண்டிய காலகட்டத்தில் இருக்கிறோம். உங்களுக்கு மாணவர்களின் மேலிருக்கும் அக்கறையை அவர்களிடம் நடந்து கொள்ளும் விதம் மூலம் அவர்களாகப் புரிந்து கொள்ள உதவுங்கள்.
தண்டனை என்பதை அவர்களின் தவறுகளுக்கானதாக உணர்த்துங்கள். அதை வகுப்புக்கு உள்ளேயே முடித்து விடுங்கள். அதையே தினமும் பார்க்கும்பொழுதெல்லாம் நினைவுபடுத்தத் தேவையில்லை. சில விஷயங்களைத் தண்டனையின்றிப் பேசியே உணர வைக்கலாம். தற்பொழுது ஆசிரியர்கள் லேசாக அடித்தாலே அதனைப் பெரிதாக்கி பத்திரிக்கை, டி,வி என்று போகும் நிலையும் இருந்து வருகிறது. குழந்தைகளின் முன்னால் ஆசிரியர் தவறே செய்திருந்தாலும், ஆசிரியரை "வரட்டும் பார்த்துக்கறேன் அவனை... என்னா ஆட்டம் போடறான்..."அப்படியெல்லாம் தரக்குறைவாகப் பேசாதீர்கள்.
குழந்தைகள் எது செய்தாலும் "நாளைக்குப் பள்ளிக்கூடம் வந்து பாரு உன் டீச்சர்கிட்டே சொல்றேன்" என்றெல்லாம் எப்போதும் மிரட்டி டீச்சரை ஒரு பேய் பூதம் லெவெலுக்கு ஆக்கிவிடாதீர்கள். ஒருசில ஆசிரியர்கள் தண்டனை என்ற பெயரில் கொடுமையான செயல்களைச் செய்பவர்களும் இருக்கிறார்கள்.
ஆசிரியர்கள் மாணவர்களுடன் ஒரு விட்டேற்றியான மனநிலையுடன் இல்லாமல் இணக்கமான மன நிலையுடன் இருத்தல் நலம். எப்போதும் அறிவுரைகளை யாரும் ஏற்கத் தயாராயில்லை. அறிவுரைகளைக் கூட விளையாட்டுப் போல இலகுவான மனநிலையுடன் எடுத்துக் கூறுங்கள். மாணவர்கள் என்பவர்கள் மெழுகு போன்றவர்கள் எளிதில் தீப்பற்றிக் கொள்ளவும் செய்வார்கள். எளிதில் உருகவும் செய்வார்கள். எப்படிக் கையாள்கிறோம் என்பதைப் பொறுத்தது என்பது சொல்லித் தெரிய வேண்டியதில்லை.
No comments:
Post a Comment