Wednesday, September 21, 2011

மாணவர்கள் தற்கொலை ஏன்? - 4


- அருணா சுரேஷ், பள்ளி முதல்வர்
ள்ளி மாணவர்களின் மன அழுத்தம் பற்றி விரிவாக பார்த்த அதேநேரத்தில், கல்லூரி மாணவர்களிடமும் இதே வேகத்தில்
தற்கொலைகள் பரவலாகக் காணப்படுகிறது.
கல்லூரி மாணவர்களுக்குத்தான் படிப்பு பற்றிய மன அழுத்தம் கிடையாதே...
எத்தனை அரியர்ஸ் வேண்டுமானாலும் வைத்துக் கொள்ளலாமே...
நிறைய அரியர்ஸ் வைத்துக் கொண்டும் இருக்கிறார்களே.?!
பெற்றோர்களின் "படி படி" என்னும் மிரட்டல் இல்லையே..!
ஆசிரியர்களின் அச்சுறுத்தல் இல்லையே...
பிறகு ஏன் இந்தத் தற்கொலை வேகம்..?
இங்கே படிப்பு தரும் மன அழுத்தம் சில இடங்களில் தான். உதாரணத்துக்கு ஐ.ஐ.டி படிப்பில் இருந்தாலும், அதற்குக் காரணம் கோச்சிங்க் சென்டரில் சேர்ந்து இரவு பகல் உழைத்து ஓர் ஓரத்தில் இடம் கிடைத்து விட்ட பின் அதே அளவு திறமையைத்
தொடர்ந்து காட்ட முடியாத நிலை மன அழுத்தத்தைக் கொடுக்கிறது.
மற்றபடி பெரும்பாலும் கல்லூரிகளில் தற்கொலைகளுக்கு காதல் தோல்வியும்,ராகிங்கும் தான் காரணம் என பரவலாக கருத்து நிலவி வந்தாலும் வேறு சில முக்கிய காரணங்களும் நம்மை யோசிக்க வைக்கின்றன.
செல்ஃபோன் போன்ற சாதனங்கள் வாங்க முடியாததாலும், அவற்றை வாங்க பெற்றோர்கள் பணம் தராததாலும் ஏற்படும் விரக்தியாலும் தற்கொலை எண்ணம் மேலிடுவதைப் பார்க்க முடிகிறது. இயல்பாக ஏற்றுக்கொள்ள வேண்டிய விஷயங்களுக்காக வாழ்வை முடித்துக் கொண்டதில், இது ஒரு பெரிய மனச் சிக்கலாக இருக்குமோ என எண்ண வேண்டியதாயிருக்கிறது.
தற்போதைய குழந்தைகள் வளரும் சூழ்நிலையைக் கொஞ்சம் கவனித்துப் பார்த்தால், 'இது வேண்டும்' என்று குழந்தைகள் யோசிப்பதற்கும் கேட்பதற்கும் முன்பாகவே அப்பொருள் கிடைத்து விடுகிற நிலை இருக்கிறது. இது பொருளாதார ரீதியில் ஏற்றமடைந்த குடும்பத்தைச் சேர்ந்த குழந்தைகள் மட்டுமல்லாது, நடுத்தர வர்க்க குடும்பத்துக் குழந்தைகளுக்கும் பொருந்தும்.
குழந்தைகள் ஏமாந்து விடக் கூடாது என்பதில் பெற்றோர்கள் காட்டும் அக்கறை, எப்படியாவது கடன்பட்டாவது குழந்தைகள் கேட்பதை வாங்கிக் கொடுத்து விடுவது என்ற மனோபாவத்தையே காட்டுகிறது. இது குழந்தைகளுக்கு அடைய முடியாத எதுவும் இருக்கக் கூடாது என்று எண்ண வைக்கிறது. எப்போதாவது இல்லையென்னும்போது தாங்க முடியாததாகி விடுகிறது.
பெற்றோர்கள் இருவரும் வேலைக்குச் செல்பவர்களாக இருப்பதனால் தங்களால் கொடுக்க முடியாத அருகாமையும், நேரத்தையும், அன்பையும் இப்படிப் பொருட்கள் வாங்கிக் கொடுத்தும், அவர்கள் எது சொன்னாலும் சரியென்று தலையாட்டும் நிலைமைக்குத் தள்ளப்பட்டிருக்கிறார்கள் என்பதுதான் உண்மை.
அடுத்ததாக வெளியிலும் கல்லூரியிலும் நடப்பனவற்றை அவ்வப்போது கேட்டு, அவர்களைப் புரிந்து கொள்ளவோ, அவர்களுக்குத் தேவைப்படும் நேரத்தில் அறிவுரை சொல்லவோ பெற்றோர்களுக்கு நேரம் இருப்பதில்லை. நமக்கு மிகவும் அற்பமாக இருக்கும் சில விஷயங்கள் மாணவர்களைப் பொறுத்தவரையில் ஒரு பூதாகாராமான விஷயமாகத் தெரிகிறது.
தற்கொலை முடிவெடுக்கப் பல காரணங்கள் இருந்தாலும், தற்கொலை செய்து கொண்டவர்கள் சமூகத்தில் ஏற்படுத்தும் அதிர்வலைகள், மேலும் சமூகத்தைப் பழி வாங்க வேண்டும் எனும் எண்ணத்தை அதிகரிக்கச் செய்கிறது.
சமூகம், பெற்றோர், ஆசிரியர், இல்லையென்றால் தன் மீதே வெறுப்பா?
தற்கொலைக்கு முயன்ற ஒரு மாணவன் சொன்ன விஷயம்...
"எனக்கு எந்த விதமான மன அழுத்தமும் இல்லை. ஆனால் என் வீட்டில் அலமாரியின் சாவிக் கொத்து ஒரு அழகிய பெண் பொம்மையுடன் இருந்தது. அது தொங்கிக் கொண்டிருப்பதைப் பார்க்கும் போது எனக்கும் தொங்க வேண்டுமெனத்
தோன்றியது."
இவற்றை எல்லாம் பார்க்கும் போது தற்கொலை என்பது ஒரு நிமிடத்தில் எடுக்கும் முடிவுதானோ என்றும், பல நாள் திட்டம் போட்டு நிறைவேற்றப் பட்டதோ என்றும் கூடத் தோன்றும்.
மற்றொரு மாணவன் தற்கொலைக்கு முன் நண்பர்களிடமே சொல்லியிருககிறான்...
"என்ன செய்றேன்னு பாரு... இவரை உண்டு இல்லைன்னு பண்ணிடறேன்," என தன்னை தண்டித்த ஆசிரியரைப் பற்றிச்
சொல்லியிருக்கிறான்.
யாரைப் பழி வாங்குவதாக நினைத்துக் கொண்டு யாரைப் பழி வாங்கியிருக்கிறான்?
எந்தச் சூழ்நிலையையும் ஏற்றுக் கொண்டு அதற்குத் தன்னைத் தயார்ப்படுத்திக் கொண்டு வாழத் தெரியவில்லை. அல்லது, அப்படி வாழக் கற்றுக் கொடுக்கவில்லை. உலகில் சில நிகழ்வுகள் நாம் விரும்புவது போல நடவாமலிருக்கலாம். ஆனால், அதற்காக வாழ்வே அத்துடன் முடிந்து விட்டதாக எண்ணி வாழ்வை முடித்துக்கொள்வதா?
தோல்வியையோ, இல்லையென்பதையோ ஏற்றுக் கொள்ளும் மனப் பக்குவம் இல்லை. அல்லது, அந்த மனப் பக்குவத்தை உருவாக்கும் சூழ்நிலைகளை ஏற்படுத்திக் கொடுக்கவில்லை.
எங்கே... என்ன... எதில் தப்பு..?

No comments:

Post a Comment