- என்.கணேசன்
உயிர்களை சூழ்ந்துள்ள மின்காந்த வெளிச்சக்தியில் சிறிது கூடினாலும் அது மிகப் பெரிய பலன்களைத் தருவதாக உள்ளது என்றும் Salamander என்ற ஒரு உடும்பு வகைப் பல்லி தன் முழுக் காலை இழந்தாலும் குறுகிய காலத்தில் அதைத் திரும்ப வளர்த்துக் கொள்ள முடிகிறது. ஆனால் அதையே ஒரு தவளையால் இழந்த காலை வளர்த்துக் கொள்ள முடிவதில்லை. அதற்குக் காரணம் அந்த இரண்டு விலங்கு வகைகளின் உடல்களைச் சூழ்ந்துள்ள மின்காந்த வெளியில் உள்ள சில மில்லிவால்ட் சக்தி வித்தியாசம் தான் என்பதையும் பெவர்லி ரூபிக் 2000 ஆம் ஆண்டு வெளியிட்ட தன் ஆராய்ச்சி முடிவுகளில் கூறினார். மனிதர்களின் மின்காந்தவெளி குறித்து பல ஆராய்ச்சியாளர்களின் அறிவியல் கண்டுபிடிப்புகளையும் அவர் சுட்டிக் காட்டினார்.
மனிதனைச் சுற்றியும் மின்காந்தவெளி உள்ளதென்றும் SQUID என்ற கருவிகள் மூலம் அவற்றை அளக்க முடிகிறதென்றும் முன்பே ஜான் சிம்மர்மன் (John Zimmerman) போன்ற அறிஞர்களின் ஆராய்ச்சியில் வெளியாகி இருந்தது. மனித உடலிலேயே மிக அதிக மின்காந்த அலைகளை வெளிப்படுத்தும் உறுப்பாக இதயத்தைக் கண்டு பிடித்திருந்தார்கள். அடுத்ததாக அதிகாலையில் விழித்தவுடன் கண்களும் மின்காந்த அலைகளை வெளிப்படுத்துகிறதாம். அதிசயமாக மனித மூளை தான் மிகக் குறைந்த மின்காந்த அலைகளை வெளிப்படுத்துகின்றன என்கின்றன ஆராய்ச்சிகள். அதை விட தசைகள் கூட தங்கள் செயல்பாடுகளின் போது அதிக மின்காந்த சக்தியை வெளிப்படுத்துகின்றன என்கிறார்கள்.
ஜான் சிம்மர்மன் SQUID கருவியை உபயோகித்து மற்றவர்களின் நோய்களைக் குணப்படுத்தும் சக்திபடைத்தவர்களின் கைகளில் இருந்து அச்சமயத்தில் 7 முதல் 8 ஹெர்ட்ஸ் மின்காந்த சக்தி வெளிப்படுவதாகக் குறித்துள்ளார்.
எல்மர் க்ரீன் என்ற ஆராய்ச்சியாளர் சக்திகள் படைத்த குணப்படுத்தும் நபர்களை செம்பாலான தகடுகள் பதிந்த ஆராய்ச்சி அறைகளில் இருத்தி செய்த ஆராய்ச்சிகளில் சில சமயங்களில் நூறு வால்ட்ஸ் வரை சக்திகள் வெளிப்பட்டதாகத் தெரிவித்துள்ளார்.
அது போல டான் விண்டர் (Dan Winter) என்ற ஆராய்ச்சியாளர் மரங்களின் கீழ் அமர்ந்து செய்யும் தியானங்களின் போது வெளிப்படும் சக்திகள் குறித்து பல ஆராய்ச்சிகள் செய்துள்ளார்.
இது போன்ற பலருடைய ஆராய்ச்சிகளையும் பற்றிக் கூறும் அவர் ஃபாரடே கூண்டுகள் extra low frequency (ELF) என்று கூறப்படும் ஒரு நொடிக்கு 300க்கும் குறைவான அலைகளை வெளிப்படுத்துவனவாக உள்ள சக்திகளைத் தடை செய்வதில்லை என்றும் ஆழ்மனசக்திகளின் ஃபாரடே கூண்டு ஆராய்ச்சிகளின் போது அப்படிப்பட்ட அலைகள் தான் வெளிப்பட்டு அதிசயங்கள் நிகழ்த்தியிருக்க வேண்டும் என்றும் கருதுவதாகக் கூறினார். அந்த அளவு குறைந்த அலைவரிசை சக்திகள் உண்மையிலேயே சக்திவாய்ந்தனவாக இருப்பதாக அவர் கருதினார்.
இரண்டு புத்தகங்களையும், சுமார் அறுபது ஆராய்ச்சிக் கட்டுரைகளையும் எழுதியுள்ள பெவர்லி ரூபிக் பல அறிவியல் கருத்தரங்கங்களிலும், டெலிவிஷன் நிகழ்ச்சிகளிலும் கலந்து கொண்டு தன் ஆராய்ச்சிகள் குறித்து பேசியிருக்கிறார். அமெரிக்காவின் பிரபல டெலிவிஷன் நிகழ்ச்சியான 'Good Morning America' - (ABC-TV)யில் டிசம்பர் 2000ல் அவர் ஆழ்மன ஆராய்ச்சிகள் பற்றிப் பேசிய நிகழ்ச்சி மிகவும் பிரபலமாகப் பேசப்பட்டது.
ஆழ்மன சக்திகளின் பிரம்மாண்டம் தன்னை பெரும் வியப்பில் ஆழ்த்துவதாகக் கூறும் பெவர்லி ரூபிக் இந்த ஆராய்ச்சிகளில் இருக்கும் சிக்கல்களையும் ஒத்துக் கொள்கிறார். இந்த ஆராய்ச்சிகள் வியப்பில் ஆழ்த்துகிற முடிவுகளைத் தெரிவித்தாலும் இந்த ஆராய்ச்சிகளின் முடிவுகள் ஒன்று போலவே இருப்பதில்லை என்கிறார் அவர்.
விஞ்ஞானம் எத்த்னை முறை ஒரு ஆராய்ச்சி செய்தாலும் அது ஒரே மாதிரியான முடிவைத் தர வேண்டும் என்று எதிர்பார்க்கையில் இந்த ஆராய்ச்சிகள் அது போன்ற ஒரே முடிவைத் தருவதில்லை என்பதுவே யதார்த்தமான உண்மையாக இருப்பதாகச் சொல்கிறார். ஆராய்ச்சியில் ஈடுபடுத்தப்படும் சக்தி வாய்ந்த மனிதர்களின் மனநிலை, தயார்நிலை போன்றவை அடிக்கடி மாறுவதால் இந்த ஆராய்ச்சிகளில் ஒரே விளைவைத் தரத் தவறுகிறது என்று கருத இடமிருக்கிறது என்கிறார் அவர்.
இன்றும் எத்தனையோ ஆராய்ச்சிகள் உலகமெங்கும் நடந்த வண்ணம் இருக்கின்றன. ஆராய்ச்சிகள் குறித்து ஓரளவு விளக்கமாகவே பார்த்து விட்டதால் அவற்றை இத்துடன் நிறுத்திக் கொள்வோம்.
No comments:
Post a Comment