- என்.கணேசன்
டேனியல் டங்க்ளஸ் ஹோம் (1833-1886) ஆவிகளுடன் சம்பந்தப்படுத்தி பேசப்பட்டவர்களில் மிகப் பிரபலமானவர். ஸ்காட்லாண்டில் பிறந்த அவர் தாயாரின் சகோதரி மேரி குக் என்பவரால் வளர்க்கப்பட்டார். சிறு வயதிலேயே பெரியம்மாவுடன் அமெரிக்கா சென்ற ஹோமிக்கு இளமையிலேயே நெருங்கியவர்களின் இறப்பு ஆவி ரூபத்தில் அடிக்கடி தெரிய வந்தது. இந்தக் காலத்தைப் போல 19 ஆம் நூற்றாண்டில் நவீன தகவல் தொடர்பு சாதனங்கள் இல்லாததால் சில இறப்புகள் அவரால் உடனடியாக அறியப்பட்டு சில நாட்கள் கழித்து கடிதம் வந்த பின்பே உறுதி செய்யப்பட்டிருக்கின்றன.
அவருடைய 17ஆம் வயதில் தாய் "டேன், 12 மணி" என்று சொன்னதாய் காட்சி கண்டார். பெரும்பாலும் அவருக்கு ஏற்படும் காட்சிகள் இறந்தவர்கள் சம்பந்தப்பட்டதாகவே இருப்பதால் தாய் மரணமடைந்து விட்டார் என்று உணர்ந்தார் ஹோம். பின்பு தாயார் அந்தக் குறிப்பிட்ட நாளில் 12 மணிக்கு காலமானார் என்ற தகவல் அவருக்குக் கிடைத்தது. தாயாரின் மரணத்துக்குப் பிறகு அந்த வீட்டில் சத்தமாகத் தட்டுவது, தட்டு முட்டுச் சாமான்கள் எல்லாம் அங்குமிங்குமாக இடம் பெயர்வதெல்லாம் நிகழத் துவங்க, அவரது பெரியம்மா பயந்தார். சிலர் சைத்தான் ஹோமை ஆக்கிரமித்துள்ளது என்று கருதினார்கள்.
ஒரு முறை ஒரு டேபிள் தானாக நகர ஆரம்பிக்க ஹோமின் பெரியம்மா பையிளை அதன் மீது வைத்தார். அப்போதும் அது நிற்காமல் போகவே தன் முழு எடையையும் அதன் மேல் போட்டு தடுத்துப் பார்த்தார். ஆனாலும் டேபிள் நகர்வது நிற்கவில்லை. தன் வீட்டுக்குள் சைத்தானின் சேட்டைகளை அறிமுகப்படுத்தி விட்டதாகக் கூறி அந்த அம்மையார் ஹோமை வீட்டை விட்டு வெளியே அனுப்பிவிட்டார்.
ஆனாலும் அவரையும் அவரது சக்திகளையும் நம்பிய நண்பர்கள் அவருக்கு உதவினார்கள். ஆவிகளுடன் தொடர்பு கொண்டு தகவல்கள் சொல்ல ஆரம்பித்தார். அவருடைய இளம் வயதிலேயே நியூயார்க் மாகாணத்தின் சுப்ரீம் கோர்ட் நீதிபதி ஜான் எட்மண்ட்ஸ், பெனிசில்வேனியா பலகலைக்கழகத்தின் வேதியியல் பேராசிரியர் ராபர்ட் ஹாரே போன்றவர்கள் அவர் மீது மிகுந்த நம்பிக்கை வைத்திருந்தார்கள்.
1868ல் அட்லாண்டிக் கேபிள் கம்பெனி என்ற பிரபல நிறுவனத்தின் தலைமை பொறியியல் வல்லுனர் க்ராம்வெல் வார்லெ என்பவருடனும், பின்னர் லண்டன் வாதக்கலை சமூக நிறுவனத்துடனும் சேர்ந்து ஆவிகளுடன் தொடர்பு கொள்ளும் நிகழ்ச்சிகள் சுமார் ஐம்பதை ஹோம் நடத்தினார். லண்டன் சமூக நிறுவனத்தினருடனான நிகழ்ச்சிகளில் சுமார் முப்பது பேர் கலந்து கொண்டனர். அவர்கள் 1871ல் சமர்ப்பித்த அறிக்கையில் சத்தங்கள், அதிர்வுகள், யாரும் தொடாமலேயே பொருள்களின் அசைவுகள், கண்ணுக்குத் தெரியாத இசைக்கருவிகளில் இருந்து இசை, பரிச்சயமில்லாத சில முகங்கள், சில கைகள்
ஆகியவற்றை கண்டதாகவும் கேட்டதாகவும் கூறினார்கள்.
ஹோமைப் பற்றிப் படித்து ஆர்வம் கொண்ட விஞ்ஞானி சர் வில்லியம் க்ரூக்ஸ் என்பவர் தானும் ஹோமை வைத்து ஆராய்ச்சிகள் நடத்தினார். அவருடன் லண்டனின் ராயல் சொசைட்டியின் இன்னொரு விஞ்ஞானி சர் வில்லியம் ஹக்கின்ஸ் உட்பட எட்டு கண்காணிப்பாளர்களும் கலந்து கொண்டனர். ஒரு ஆராய்ச்சியில் ஒரு மரப்பலகையின் எடையை ஹோம் தொடாமலேயே கூட்டிக் குறைத்துக் காண்பித்தார்.
இன்னொரு ஆராய்ச்சியில் ஒரு பிரத்தியேக கூண்டு ஒன்றைத் தயாரித்து அதில் ஒரு இசைக்கருவியைத் தலைகீழாக வைத்து இசைக்கருவியின் பின்புறத்தை மட்டும் ஹோமால் ஒரு கையால் தொட முடிகிறாற் போல் அந்தக் கூண்டை ஹோம் அமர்ந்திருந்த மேசையினடியில் தள்ளி வைத்தார்கள். ஹோமின் மறு கையை மேசையின் மேல் வைக்கச் சொன்னார்கள். (விளக்கப்படம் காண்க). ஹோம் தொட முடியாத அந்த இசைக்கருவியின் ஆணிப்பட்டையில் இருந்து வித விதமாக இசை கிளம்பியதைக் கண்டு அனைவரும் வியந்தனர்.
ஒரு சந்தர்ப்பத்தில் ஹோம் அந்த இசைக்கருவியை எடுத்து அருகில் இருந்தவர் கையில் தந்த பின்னரும் கூட, யார் கைகளும் இசைக்கருவி மீது இல்லாத போதும் கூட இசை நிற்கவில்லை.
இது போன்ற நிகழ்ச்சிகளில் பலரும் வித்தியாசமான விளக்கொளிகளைக் கண்டனர். தட்டப்படும் ஓசையைக் கேட்டனர். மணிக்கட்டு வரையே தெரியக் கூடிய கைகளை மட்டும் கண்டனர். கூடியிருந்தவர்களுடன் அந்தக் கைகள் கை குலுக்கியும், மேசை நாற்காலிகளை நகர்த்தியும், இறந்தவர்களிடம் இருந்து செய்திகளை அங்கு வைக்கப்பட்டிருந்த எழுத்தட்டைகளை சேர்த்து வைத்துக் காட்டியும் அங்குள்ளவர்களை பிரமிக்க வைத்தன.
ஹோம் இது போன்ற நிகழ்ச்சிகள் நடக்கும் போது தன் கைகளையும் கால்களையும் அங்குள்ளவர்களைப் பிடித்துக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்வார். தான் ரகசியமாக எதையும் இயக்குவதில்லை என்பதைப் புரிய வைக்க அப்படிச் செய்வதை வழக்கமாகக்
கொண்டு இருந்தார்.
1852 முதல் ஹோம் செய்து காட்டிய இன்னொரு அற்புதம் அந்தரத்தில் நிற்பது. க்ரூக்ஸ் உட்பட பலர் அதைக் கண்டுள்ளார்கள். ஹோம் தரையிலிருந்து சுமார் ஆறு அங்குலங்கள் அந்தரத்தில் உயர ஆரம்பித்து பத்து வினாடிகள் அந்தரத்திலேயே நின்று மறுபடி தரைக்கு வந்ததைக் கண்ட ஃப்ராங்க் பொட்மோர் என்பவர் சாட்சிகளுடன் பதிவு செய்துள்ளார். பல சமயங்களில் பல அடிகள் மேலே அந்தரத்தில் நின்று காண்பிக்க, இதில் ஏதோ ஏமாற்று வேலை இருக்கிறது என்று சந்தேகப்பட்ட ஒரு பத்திரிகை இது போன்ற ஏமாற்று வேலைகளை அம்பலப்படுத்துவதில் சமர்த்தரான எஃப். எல்.பர் என்ற நிருபரை அனுப்பியது.
அமெரிக்காவில் கனெக்டிகட்டில் வார்ட் சேனே என்ற செல்வந்தரின் வீட்டில் ஹோம் நிகழ்ச்சி ஒன்றில் பர் கலந்து கொண்டார். குறை காணப் போனவர் உண்மையாகவே அசந்து போனார். அந்தப் பத்திரிகையாளர் எழுதினார். "ஹோமின் கையை நான் பிடித்திருந்தேன். திடீரென்று ஹோம் தரையிலிருந்து ஒரு அடி தூரம் மேலே அந்தரத்தில் நின்றார். நான் அவருடைய காலையும் தொட்டுப் பார்த்தேன். மறுபடி கீழே வந்த அவர் அடுத்த முறை இன்னும் மேலே அந்தரத்தில் நின்றார். மூன்றாவது முறையோ அந்த அறையின் விட்டத்தைத் தொட்டுக் கொண்டு அந்தரத்தில் நின்றார். என்னைப் போல் அங்கு கூடியிருந்த
அனைவரும் அதிசயித்து நின்றோம்..."
அதை கேப்டன் வின்னே உறுதியாக மறுத்தார். 'என்னை அறிந்தவர்கள் யாரும் என்னை அப்படி வேறொருவர் ஹிப்னாடிசம் செய்து நம்பவைக்க முடியும் என்று கூற மாட்டார்கள். அப்படியெல்லாம் ஏமாறக் கூடியவன் அல்ல நான்" என்றார். மேலும் ஹோம் நல்ல ஆரோக்கியமானவராக இருக்கவில்லை. காசநோயால் பாதிக்கப்பட்ட அவர் மிக பலவீனமாக இருந்தார். மூன்றாவது மாடியில், அதுவும் டிசம்பர் குளிரில் சர்க்கஸ் செய்து காட்டுவது போல் தோற்றத்தை ஏற்படுத்தக் கூடிய அளவு செய்து காட்டக் கூடிய சக்தியெல்லாம் அவரிடம் இருக்கவில்லை என்பதும் உண்மை.
இந்த அற்புதங்களுக்கெல்லாம் காரணமாக ஹோம் என்ன சொல்கிறார்? ஆவிகளுடன் தொடர்பு கொள்ளும் சக்தி கொண்ட அவர் இந்த நிகழ்வுகளுக்கு தான் காரணமல்ல என்கிறார்.
"இதெல்லாம் நட்பான ஆவிகள் மூலமே சாத்தியமாகிறது. ஆனால் அவை எல்லாம் என் முழுக் கட்டுப்பாட்டில் இல்லை..."
No comments:
Post a Comment