- அருணா சுரேஷ், பள்ளி முதல்வர்
ஒரு கட்டுரைத் தொடர் மூலம் அவ்வளவு எளிதில் தீர்வு சொல்லிவிட்டுப் போய் விட முடியாதுதான். ஆயினும், ஒரு கண்ணாடிப் பாத்திரத்தைக் கையாள்வதில் காட்டும் அக்கறையைக் கூட நாம் மாணவர்களைக் கையாள்வதில் காண்பிப்பதில்லை எனபதும் உண்மைதான். எனினும், பொதுவாகச் சில விஷயங்களைக் கவனத்தில் கொண்டால் மாணவர்களை, குழந்தைகளை மன அழுத்தத்திலிருந்து காப்பாற்றலாம்.
வெறும் பாடத் திட்டங்களை மாற்றுவதனாலோ, படிப்பை ஓரம் கட்டுவதாலோ, வந்துவிடப் போவதில்லை எண்ணங்களில் மாற்றம். நிச்சயம் இதற்குக் காரணம் குழந்தைகள் மீது திணிக்கப்படும், வெற்றியோடுதான் வரவேண்டும் வெற்றி மட்டுமே தான்... இரண்டாவது பரிசு கூட வேண்டாம் என்று விரட்டும் பெற்றோர்களின் மனப்பான்மையும் முக்கிய காரணம் என்பதைப் புரிந்து கொள்ளத்தான் வேண்டும்.
அந்த மனப்பானமையைக் குழந்தைகளின் மனநலம் கருதி மாற்றிக் கொள்ள முயற்சிக்கத்தான் வேண்டும். வெற்றி, வெற்றி என்று அவர்களுடைய மூளையிலேற்றி வெற்றி கிடைக்கவில்லையென்றால் வாழவே தகுதியை இழந்து விடுவது போன்ற ஒரு மாயையும் வேண்டாத மன உளைச்சலகளுக்கும் ஆளாக்குகிறது. பின் இதற்குத் தற்கொலையே தீர்வாக மாணவர்கள் தேர்ந்தெடுத்துக் கொள்கிறார்கள்.
பள்ளிகளில் மென்டர்ஸ், கவுன்சிலர்ஸ், சைக்கியாட்ரிஸ்ட்... இவர்களுக்கு அவசியமென்ன? எப்போதிருந்து இதற்கு அவசியமேற்பட்டது? மாணவர்களின் பிரச்னைகளைக் கேட்க ஆளில்லை. வீட்டிலும் பள்ளியிலும் அவர்களின் நியாயமான கவலைகளைக் கூடப் பகிர்ந்துககொள்ள யாருமில்லாதது ஒரு பெரிய பிரச்னை.
வீட்டில் அப்பா அம்மாக்கள் வேலைக்கு ஓட்டம், ஆசிரியர்கள் சிலபஸ் பின்னால் ஓட்டம்... இப்படி யாருக்காக எல்லோரும் சேர்ந்து ஓட ஆரம்பித்தொமோ அவர்களே கவலைக்கிடமாக இருப்பதுதான் வேதனை.
நர்சரியில் அவனின் படிப்பு பற்றி அவ்வளவு அக்கறை கொண்ட நீங்கள், அவர்களுக்காகச் சின்னச் சின்ன விஷயங்களுக்காகப் பள்ளிக்கு வந்த நாட்களை நினைத்துப் பாருங்கள். இப்போது பெற்றோர் கூட்டத்துக்குக் கூட வர மறுக்கிறீர்கள். அந்தக் குழந்தைக்கு எப்போது உங்களின் கவனமும் அருகாமையும் தேவையோ அப்போது கொஞ்சம் கொஞ்சமாக அவர்களை விட்டு விலகிப் போய்க் கொண்டிருக்கிறீர்கள் என்று தெரியுமா?
நம்மை விட்டு வெகுதூரம் போய்விட்ட அவர்களை மீட்டெடுக்கத்தான் பள்ளிகளில் மென்டர்ஸ், கவுன்சிலர்ஸ், சைக்கியாட்ரிஸ்ட் போன்றோரின் தேவை ஏற்பட்டிருக்கிறது.
ஒரு மாணவியைத் தவறான முறையில் ஆசிரியர் கஷ்டப்படுத்திய விபரத்தைச் சொல்ல முடியாமல் அழுது அழுது படிகக முடியாமல் பள்ளியை விட்டே நின்றுவிட்ட குழந்தைகளின் கதைகளையும் அறிவோம்.
குழந்தைகளை, மாணவர்களைத் தேர்வுக்குத் தயார்ப்படுத்துவதை விட வாழ்க்கைக்குத் தயார்ப்படுத்துங்கள். அவ்வப்போது NO சொல்லலாம் தப்பில்லை. தோல்வியைச் சந்திக்கும் தைரியத்தை கொடுங்கள். பாசத்தைப் பொருட்கள் மூலம் தெரியப்படுத்துவதை முதலில் நிறுத்துங்கள். கண்டிப்பையும் அவ்வப்போது காட்டுங்கள். கண்டிப்பு என்பதைத் தண்டனைகளால்தான் உறுதிப்படுத்த வேண்டியதில்லை.
விழலாம் தப்பில்லை என்பதைப் பதிய வையுங்கள். வெற்றியையும் தோல்வியையும் வாழ்வின் தினசரி நிகழ்வுகளை எடுத்துக் கொள்வதைப் போல எடுத்துக் கொள்ளப் பழக்குங்கள்.
வாழ்வு, மதிப்பெண்கள் மட்டுமே சார்ந்தது அல்ல என உணர வையுங்கள். அவை வாழ்க்கையை மேம்படுத்த உதவும் கருவிகளுள் ஒன்றே தவிர அதுவே வாழ்க்கையை நிர்ணயிக்கும் மந்திரக் கோல் அல்ல என்பதையும் புரிய வையுங்கள்.
No comments:
Post a Comment