Wednesday, September 21, 2011

நோய்களுக்கு எதிராக ஆழ்மன சக்தி


- என்.கணேசன்
ருந்துகள் இல்லாமல் நோய்களைக் குணமாக்க முடிவது பண்டைய காலத்தில் இருந்தே உலகில் பல நாடுகளிலும் பேசப்பட்டு வந்திருக்கிறது. இயேசு கிறிஸ்து போன்ற தெய்வப்பிறவிகள், மகான்கள், யோகிகள், சித்தர்கள், அபூர்வ சக்தி படைத்தவர்கள் இப்படி குணமாக்கினார்கள் என்று பண்டைய பதிவுகள் சொல்கின்றன. பிற்காலத்திலும் பதினெட்டாம் நூற்றாண்டில் மெஸ்மர் என்ற ஜெர்மன் மருத்துவர் மருந்துகள் இல்லாமல் கும்பல் கும்பலாக ஒரு கட்டத்தில் நோயாளிகளைக் குணப்படுத்தினார் என்பதை இத்தொடரில் 18 ஆம் அத்தியாயத்தில் விவரமாகப் பார்த்தோம்.
இக்காலத்திலும் மருந்தில்லா மருத்துவ முறைகளில் ரெய்கி (Reiki), ப்ரானிக் ஹீலிங் (Pranic Healing) போன்ற சிகிச்சைகள் பல நாடுகளிலும் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. தற்போது இந்த சிகிச்சைகள் செய்வோர் எண்ணிக்கையில் எல்லா நாடுகளிலும் ஏராளமாக இருக்கின்றனர். அவர்கள் அனைவருமே வெற்றிகரமாக நோய்களைக் குணப்படுத்துகிறார்கள் என்று சொல்ல முடியா விட்டாலும் அந்த சிகிச்சைகளைச் செய்வோரில் குறிப்பிட்ட சிலர், நோய்களைத் தீர்ப்பதில் மிகச் சிறப்பான விளைவுகளை ஏற்படுத்தி வருகிறார்கள் என்றே சொல்ல வேண்டும். எந்த சிகிச்சையிலும் இப்படி சிறப்பான விளைவுகளை ஏற்படுத்துபவர்கள் அறிந்தோ, அறியாமலோ தங்கள் ஆழ்மன சக்தியை பயன்படுத்துபவர்களாகவே இருக்கிறார்கள்.
அறுவை சிகிச்சையின் போது பயன்படுத்தப்படும் மயக்க மருந்து அனெஸ்தீஸியா கண்டுபிடிக்கப்படும் முன்பே இந்தியாவில் மேற்கு வங்கத்தில் டாக்டர் ஜேம்ஸ் எஸ்டெய்ல்லே (Dr. James Esdaille) என்னும் ஸ்காட்லாந்தைச் சேர்ந்த மருத்துவர் 1843 ஆம் ஆண்டு முதல் 1846 ஆம் ஆண்டு வரை சுமார் 400 அறுவை சிகிச்சைகள் நோயாளிகளுக்கு வலி சிறிதும் தெரியாமல் செய்து சாதனை படைத்திருக்கிறார்.
இந்த அறுவை சிகிச்சைகள் கண், காது, தொண்டை போன்ற உறுப்புகளிலும், உடலில் இருந்து கட்டிகள், கான்சர் பாதிக்கப்பட்ட பகுதிகளை எடுப்பதிலும் செய்யப்பட்டு இருக்கின்றன. இந்த சிகிச்சைகள் மருத்துவ சிகிச்சைகள் தான் என்றாலும் வலி தெரியாமல் இருக்க மயக்க மருந்து
இல்லாத காலத்தில் ஆழ்மன சக்தியையே அவர் பயன்படுத்தியதாக டாக்டர் ஜேம்ஸ் எஸ்டெய்ல்லே கூறினார். இந்த 400 அறுவை சிகிச்சையின் போதும் ஒரு மரணம் கூட நிகழ்ந்து விடவில்லை என்பது மிக முக்கியமாக கவனிக்க வேண்டிய அம்சம்.
இந்த ஆழ்மன சக்தியைப் பயன்படுத்தி ஒருவரைக் குணப்படுத்த முடியும் என்றாலும் முதலில் நாம் நம்க்குப் பயன்படுத்தி நம் நோய்களைக் குணப்படுத்துவது எப்படி என்றும் நம் ஆரோக்கியத்தை மேம்படுத்திக் கொள்வது எப்படி என்றும் பார்ப்போம்.
நம் உடல் நல்ல முறையில் இயங்குவதற்கு இயற்கையாகவே ஆழ்மனதின் ஒரு பகுதி பயன்படுத்தப்பட்டு வருகிறது. அந்த ஆழ்மனசக்தி தான் நாம் உறங்கும் போதும் மூச்சு விடுதல், இதயம் துடித்தல், ஜீரணம் நடை பெறுதல், உடலில் பாதிக்கப்பட்ட சில பகுதிகளை ரிப்பேர் செய்தல் போன்ற முக்கிய வேலைகளை நாம் அறியாமலேயே செய்து வருகிறது. இன்னும் சொல்லப் போனால் நாம் விழித்திருக்கும் நேரத்தில் நம் கவலைகள், பயங்கள், டென்ஷன், போன்றவற்றால் நம் இதயம், நுரையீரல், வயிறு போன்றவற்றின் செயல்பாடுகளை நாம் கெடுத்துக் கொண்டாலும், நம் உறக்க நேரத்தில் ரிப்பேர் வேலைகளைச் செய்து ஆழ்மனம் முடிந்த அளவு நம்மைக் காப்பாற்றுகிறது. இந்த வேலையை ஓய்வில்லாமல் ஆழ்மனம் செய்கிறது. உடல்நிலை சரியில்லாத காலத்தில் நாம் அதிகமாக உறங்கியபடியே இருப்பதற்குக் காரணம் கூட ஆழ்மனதின் பொறுப்பில் நம் உடலை விடுவதற்கு வழி செய்யத் தான். இயல்பாக இதைச் செய்யும் ஆழ்மனதை மேலும் முறையாகப் பயன்படுத்தினால் நோய்களை நாம் விரைவாக குணப்படுத்தலாம்.
முதலில் நாம் ஆழ்மனதை அதன் வேலையைச் செய்ய விட வேண்டும். கற்பனைக் கவலைகள் மற்றும் பயங்கள், அவசர வாழ்க்கையின் டென்ஷன் ஆகியவற்றை மேல் மனதில் இருந்து ஆழ்மனதிற்கு அனுப்பும் முட்டாள்தனத்தை உடனடியாக நிறுத்த வேண்டும். இப்படி அனுப்பிக் கொண்டே இருந்தால் ஆழ்மனம் தன் வேலையை நிறுத்தி நம் பொய்யான பிரச்னைகளின் பக்கம் தன் கவனத்தைத் திருப்பும். நம் ஆரோக்கியம் கவனிப்பாரில்லாமல் மேலும் பாழாகும்.
தியானம் மற்றும் உயர் உணர்வு நிலை பெற சொல்லப்பட்ட சிந்தனை மற்றும் பயிற்சிகளைத் தொடர்ந்து செய்து வந்தால் மனம் தானாக அமைதியடையும். அமைதியடைந்த மனம் ஒரு வலிமையான ஆயுதம் என்றே சொல்ல வேண்டும். அமைதியான மனநிலையை அதிகமாக தக்க வைத்துக் கொள்கின்ற போது ஆழ்மனமும் சக்தி பெற்று வழக்கத்தை விட சிறப்பாக உடல் நலத்தைப் பாதுகாக்கும்.
சரி, நமக்கு வந்து விட்ட நோயை அல்லது உடல் உபாதையை ஆழ்மன சக்தியால் நாமே குணப்படுத்திக் கொள்ளும் வழியை இனி பார்ப்போம். முதலில் தலை வலி போன்ற தற்காலிக சிறிய உபாதைகளை நீக்க பயிற்சி செய்து பழகிக் கொள்ளுங்கள். இதில் வெற்றி கண்ட பிறகு சற்று பெரிய, தொடர்ந்து வருத்தும் நோய் அல்லது உபாதைகளை நீக்க நீங்கள் முயலலாம்.
முதலில் மனதை அமைதியாக்கி தனிமையில் அமருங்கள். தலைவலி போன்ற உபாதைகள் இருக்கையில் தியானம் சுலபமல்ல என்றாலும் நீங்கள் தொடர்ந்து தியானம் செய்யும் இடத்திலேயே இதற்கென அமர்வது நல்ல பலனைக் கொடுக்கும். மூச்சுப் பயிற்சி செய்து மூச்சை சீராக்குங்கள். பின் சில வினாடிகள் உங்கள் வலி மீதே முழு சிந்தனையை வையுங்கள். பின் 'இந்த வலி சிறிது சிறிதாகக் குறைய ஆரம்பிக்கிறது' என்ற எண்ணத்தை உங்களுக்குள் நிதானமாக, அழுத்தமாக சில முறை சொல்லிக் கொள்ளுங்கள். பின் நீங்கள் அந்த தலைவலி இல்லாமல் முழு ஆரோக்கியமாக இருப்பது போல மனதில் காட்சியை உருவகப்படுத்திப் பாருங்கள். அப்படிப் பார்க்கையில் தலைவலி என்கிற எண்ணத்தைப் பலமிழக்க வைத்து ஆரோக்கியம் என்கிற எண்ணத்திற்கு தான் நீங்கள் சக்தி சேர்க்க வேண்டும்.
அந்தக் குணமாகி இருக்கும் காட்சியை மனத்திரையில் பெரிதாக்கி, வலுவாக்கி, ஒளிமயமாக்கிக் காணுங்கள். ஒருசில நிமிடங்கள் அப்படிக் கண்டு அந்தக் காட்சியை ஆழ்மனதிற்கு கட்டளை போல் அனுப்பி விட்டு எழுந்து விடுங்கள். பின் மனதை வேறு விஷயங்களுக்கு திருப்புங்கள். சில நிமிடங்கள் கழித்து உங்கள் தலைவலி பெருமளவு குறைந்து, அல்லது பூரணமாக விலகி விட்டிருப்பதை நீங்கள் காணலாம். முன்பு விளக்கி இருந்த மனதை ஒருமுகப்படுத்தும் பயிற்சியையும், மனக்கண்ணில் தத்ரூபமாகக் காட்சிகளை உருவகப்படுத்தும் பயிற்சியையும் நீங்கள் செய்து தேர்ந்திருந்தால் விளைவுகள் சிறப்பாகவும், சக்தி வாய்ந்தவையாகவும் இருக்கும்.
சற்று பெரிய உபாதையாகவோ, தொடர்ந்து கஷ்டப்படுத்தும் நோயாகவோ இருந்தால் இது போல சில நாட்கள் தொடர்ந்து நீங்கள் இந்தப் பயிற்சி செய்ய வேண்டி வரும். அப்படியிருந்தால் உறங்குகின்ற நேரத்தில் இந்தப் பயிற்சியைச் செய்து கொண்டே நீங்கள் உறங்கி விடுவது வேகமாக அதைக் குணமாக்கி விட உதவும். 55 ஆம் அத்தியாயத்தில் முற்றிய கான்சரின் பிடியில் இருந்த சிறுவன் இது பற்றித் தெரியாமலேயே தொடர்ந்து பயன்படுத்திய கற்பனைக் காட்சிகள் அவனை இப்படித் தான் குணமாக்கியது.
நோய்கள் நெருங்காமல் பாதுகாப்பு செய்து கொள்ளவும் ஆழ்மன சக்தி உதவும். அதைச் செய்து கொள்ள சென்ற அத்தியாயத்தில் சொல்லியிருந்தபடி உங்கள் உணர்வுத் திறனைக் கூர்மைபடுத்துவதில் நீங்கள் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். அப்படித் தேர்ச்சி பெற்றிருந்தால் நோய்க்கிருமிகள் உங்கள் உடலை நெருங்கிய அந்தக் கணத்திலேயே உங்களால் உணர முடியும். அவை உங்கள் உடலில் தங்கி அஸ்திவாரம் போட்டு பலம் பெற்ற பின் அவற்றை விரட்டுவது சற்று நீண்ட சிரமமான வேலை. அவை நெருங்கியவுடனேயே உறுதியாக, அழுத்தமாக, உணர்வு
பூர்வமாக அனுமதி மறுத்து விரட்டி விடுங்கள்.
அரவிந்தாஸ்ரமத்து அன்னை இதனை விளக்குகையில் நோய்க்கிருமிகள் நெருங்குவதை உணரும் அந்த கணத்திலேயே "NO" என்று உணர்வு பூர்வமாக முழு சக்தியையும் திரட்டி மனதில் கட்டளை இடச் சொல்கிறார். இதற்கு உணரும் திறனை கூர்மையாகப் பெற்றிருப்பதும், வலிமையான மனநிலையில் இருப்பதும் மிக முக்கியம். இது வரை சொன்ன ஆழ்மனப்பயிற்சிகளை தொடர்ந்து செய்தவர்களுக்கு இந்த இரண்டையும் இயல்பாகவே அடைந்து விட்டிருப்பார்கள் என்பதால் இது எளிதில் கைகூடும்.
உங்கள் வீட்டிலோ, நீங்கள் வசிக்கும் பகுதியிலோ ஏதாவது ஒரு நோய் ஒவ்வொருவராக பாதித்துக் கொண்டு வந்தால் அந்த நோய் உங்களை நெருங்காதபடி ஆழ்மன சக்தியை உபயோகித்து ஒரு பாதுகாப்பு வளையத்தைக் கூட நீங்கள் உருவாக்கிக் கொள்ளலாம். அந்த நோயை எதிர்க்கும் அல்லது வர விடாமல் தடுக்க வல்ல பெரும் சக்தி வாய்ந்த பொன்னிற பாதுகாப்பு வளையம் உங்களைச் சுற்றி இருப்பதாக மனக்கண்ணில் உருவகப்படுத்தி தத்ரூபமாகக் காணுங்கள். ஒரு நாளில் ஓரிரு முறை இப்படி உருவகப்படுத்தி ஆழமாக உணர்ந்து இரவில் உறங்கும் போதும் சிறிது நேரம் உருவகப்படுத்துங்கள். உங்களைச் சுற்றி உள்ள அந்த பாதுகாப்பு வளையத்தை அடிக்கடி உணருங்கள். அந்த நோய் உங்களைக் கண்டிப்பாக பாதிக்காது. ஆனால் இதெல்லாம் சாத்தியமாக பயிற்சிகள் செய்து உங்கள் ஆழ்மனதை சக்தி வாய்ந்த ஆயுதமாக நீங்கள் வைத்திருக்க வேண்டும் என்பது முக்கியம்.

உணர்வுத் திறனை கூர்மையாக்குங்கள்!


என்.கணேசன்
தியானம் பற்றி குறிப்பிடுகையில் ஆரம்பத்தில் 'ஒரே இடத்தில் தியானம் செய்யும் போது அந்த இடத்தில் தியான அலைகள் உருவாக ஆரம்பிக்கின்றன. நாளாக நாளாக அந்த அலைகள் வலிமைப்பட ஆரம்பிக்கின்றன. முதலில் தியானம் கைகூட நிறைய நேரம் ஆனாலும் காலப்போக்கில் அந்த இடத்தில் தியானத்திற்காகச் சென்று அமர்ந்த சிறிது நேரத்திலேயே அங்கு உருவாகி இருக்கும் அலைகளின் தன்மையால் தியான நிலைக்குச் சுலபமாகப் போய் விடலாம்,' என்று சொல்லி இருந்தது வாசகர்களுக்கு நினைவிருக்கலாம்.
மனிதர்களின் எண்ணங்கள் தொடர்ந்து எண்ணும் போது சக்தி வாய்ந்தவையாக மாறுகின்றன. அவற்றை வாய் விட்டுச் சொல்லாத போதும் அவை சக்தியை இழப்பதில்லை. எண்ணங்களும், இயல்பும் ஒருவரைச் சுற்றி நுண்ணிய அலைகளாக எப்போதும் இருக்கின்றன. காலப்போக்கில் அவர்கள் வசிக்கும் இடத்தில் கூட அந்த நுண்ணிய அலைகளின் தாக்கம் அதிகப்பட ஆரம்பிக்கும் என்று சொல்கிறார்கள்.
உண்மையான மகான்கள் வாழ்ந்த இடங்களுக்கும், சில புனித வழிபாட்டுத் தலங்களுக்கும் சென்றவர்கள் அங்கு இருக்கையில் வார்த்தைகளில் சொல்ல முடியாத ஒரு வித அமைதியையும், நிறைவையும் உணர்ந்திருக்கக்கூடும். அந்த மகான்கள் வாழ்க்கைக் காலம் முடிந்து பல ஆண்டுகள் கழிந்த பின்பும் அந்த இடத்தில் அவர்களது ஆன்மிக சக்தி மையம் கொண்டிருப்பதே அதற்குக் காரணம் என்று சொல்லலாம்.
அதே போல அந்த புனித வழிபாட்டுத் தலங்கள் உருவாகிப் பல நூறு ஆண்டுகள் கூட ஆயிருக்கலாம். ஆனால் அந்த தலங்களை நிறுவிய மற்றும் வழிபாடு நடத்தி வந்த ஆன்மிகப் பெரியோரின் சக்தி மற்றும் பக்தி அலைகள் அங்கு இப்போதும் பரவியிருந்து நம்மை ஊடுருவுவதே நாம் உணரும் அந்த அமைதிக்குக் காரணம்.
மனதின் எண்ண அலைகள் சக்தி வாய்ந்ததாக இருந்தால் அவர்களுடைய காலம் கழிந்த பின்னும் அவற்றின் தாக்கம் அப்படியே இருக்கும் என்பதற்கு இதுவே ஒரு சிறந்த உதாரணம். உடல் அழிந்து பல்லாண்டுகள் கழிந்த பின்னும் உள்ளத்தின் எண்ண அலைகள் வீரியமுள்ளதாக இருந்தால் அவை வாழ்வது மட்டுமல்லாமல் மற்றவர்களிடம் தாக்கத்தையும் ஏற்படுத்தும் என்பது நல்ல எண்ணங்களுக்கு மட்டுமல்லாமல் தீய எண்ணங்களுக்கும் பொருந்தும்.
தியோசபி அமைப்பின் நிறுவனரான ப்ளாவட்ஸ்கி அம்மையார் தன் அதீத சக்திகளுக்குப் பெயர் போனவர். அவர் ஒரு முறை அந்த அமைப்பின் சக நிறுவனரான கர்னல் ஓல்காட் அவர்களுடன் அலகாபாத் சென்றிருந்தார். அவர்களை இரவு உணவுக்கு ஓரிடத்திற்கு சின்னட் என்ற நண்பர் காரில் அழைத்துச் சென்றார். போகின்ற வழியில் கார் ஒரு தெரு முனையைக் கடக்கையில்
ப்ளாவட்ஸ்கி அம்மையார் திடீரென்று உடல் சிலிர்த்தபடி சொன்னார். "இந்த இடத்தில் ஏதோ பெரிய கொடூரம் நடந்திருக்க வேண்டும். இரத்தம் சிந்திய இடத்தைப் போல் நான் உணர்கிறேன்".
அலகாபாதிற்கு ப்ளாவட்ஸ்கி அம்மையார் வருவது அதுவே முதல் முறை. அதுவும் சின்னட் என்பவரின் வீட்டிற்கு வந்து தங்கியவர் அந்த வீட்டை விட்டு வெளியே வருவதும் அதுவே முதல் முறை. அப்படி இருக்கையில் அவருடைய உணர்வின் கூர்மையால் அப்படி உணர்ந்ததைக் கண்டு வியப்பு மேலிட்ட சின்னட் அந்த தெருமுனையின் அருகில் இருந்த ஒரு பெரிய கட்டிடத்தைக் காட்டி சொன்னார்.
"அந்த கட்டிடத்தில் தான் ஒரு காலத்தில் சில ஆங்கிலேய அதிகாரிகள் தங்கி இருந்தனர். சிப்பாய்கள் கலகத்தின் போது ஒரு நாள் இரவு அவர்கள் சாப்பிட்டுக் கொண்டிருக்கையில் சிப்பாய்கள் அவர்களைக் கொடூரமாகக் கொன்று குவித்திருந்தார்கள்."
சிப்பாய் கலகத்தில் நடந்த அந்த சம்பவம் முடிந்து பல ஆண்டுகள் கழித்தும் ப்ளாவட்ஸ்கி அம்மையார் அலகாபாத்தில் அந்த இடத்திற்குச் சென்றவுடனேயே ஏதோ ஒரு கொடூர சம்பவம் நடந்திருக்கிறது என்பதை உணர முடிந்ததை யோசித்துப் பாருங்கள்.
ப்ளாவட்ஸ்கி அம்மையாரைப் போல சற்று தொலைவிலேயே உணரக் கூடியதாகவும், பல காலம் கழித்து உணரக் கூடியதாகவும் அந்தத் திறன் இல்லா விட்டாலும் நாம் அனைவருமே அந்தந்த இடத்திலும், நிகழ்காலத்திலும் உணரக்கூடிய திறனை ஓரளவு இயல்பாகவே பெற்றிருக்கிறோம். ஆனால் அது பெரும்பாலும் வார்த்தைப் படுத்த முடியாதபடி கூட இருக்கலாம். சில வீடுகளுக்குள்ளேயே நுழையும் போதே ஒரு அசௌகரியமான உணர்வை நாம் பெறுவதுண்டு. அங்கிருந்து சீக்கிரமே போய் விட வேண்டும் என்று தோன்ற ஆரம்பித்து விடும். நம் தன்மைக்கு ஒவ்வாத எதிர்மறையான தன்மைகள் இருக்கிற மனிதர்கள் வசிக்கிற வீடாக பெரும்பாலும் அது இருக்கும்.
கலகலப்பாகவும், மகிழ்ச்சியாகவும் அனைவரும் இருக்கும் ஒரு இடத்தில் திடீரென்று யாராவது ஒரு நபர் உள்ளே வர கலகலப்பும், மகிழ்ச்சியும் காணாமல் போய் ஒரு அசௌகரியமான மௌனம் நிலவுவதை நீங்கள் பார்த்திருக்கலாம். அவர்களுடைய மனநிலைகளுக்கு எதிர்மறையான நபராக அவர் இருந்திருப்பார். அவர் அங்கிருந்து போகும் வரை கலகலப்பு தொடராது. அதே போல ஒரு நபர் வரவால் அந்த இடத்தில் இருக்கும் பலரும் ஒரு புத்துணர்ச்சியையும், மகிழ்ச்சியையும் உணர்வதும் நிகழ்வதுண்டு. அந்த நபரின் இயல்பு நுண்ணலைகள் அந்த மாற்றத்தை ஏற்படுத்துவனவாக இருந்திருக்கும்.
இது போன்ற அனுபவங்கள் கூட சம்பந்தப்பட்ட மனிதர்களின் இயல்பின் நுண்ணலைகள் நல்லதாகவோ, தீயதாகவோ மிகவும் உறுதி படைத்தவையாக இருக்கும் போது மட்டுமே நாம் உணர்கிறோம். அப்படி உணரும் போதும் நாம் அதைப் பற்றி மேற்கொண்டு ஆராயப்போவதில்லை. அதற்கு பெரிய முக்கியத்துவமும் கொடுப்பதில்லை. ஆனால் மனிதர்கள், மற்றும் இடங்களுடைய நுண்ணலைகளை தெளிவாக உணர முடிவது ஆழ்மன சக்திகளை அடைய விரும்புவோருக்கு அத்தியாவசியத் தேவை என்று சொல்லலாம்.
பெரும்பாலும் நாம் நம் முயற்சியில்லாமல் உணரும் மற்ற நபர்களுடைய, அல்லது இடங்களுடைய நுண்ணலைகள் நம் ஆழமான இயல்புத் தன்மைகளுக்கு பாதிப்பையோ, தாக்கத்தையோ ஏற்படுத்துவனவாகவே இருக்கின்றன. அவற்றைப் பாதிக்காத, சம்பந்தமில்லாத நுண்ணலைகளை நாம் உணர்வதில்லை. ஆனால் பயிற்சியின் மூலம் நாம் நம் உணர்வுத் திறனை அதிகரித்துக் கொள்ள முடியும். அதனைக் கூர்மைப்படுத்திக் கொள்ளவும் முடியும்.
ஆழ்மன சக்தியின் ஒன்பது வகை வெளிப்பாடுகளில் Psychometry பற்றி குறிப்பிட்டு இருந்தோம். இந்த சக்தி மூலம் ஒரு பொருளை வைத்து அதன் சம்பந்தப்பட்ட விஷயங்களையும், மனிதர்களையும் அறிய முடியும். இச்சக்தி நாம் மேலே குறிப்பிட்ட நுண்ணலைகளை உணரும் சக்தியின் தொடர்ச்சி தான். மனிதர்கள் உபயோகப்படுத்திய இடங்களில் அவர்களுடைய எண்ண மற்றும் இயல்பு நுண்ணலைகள் பரவியிருப்பது போல அவர்கள் உபயோகப்படுத்துகிற பொருள்களிலும் பரவி இருக்கிறது என்று சொல்லப்படுகிறது. அதனால் அந்தப் பொருளைக் கையில் வைத்துக் கொண்டு அதை உபயோகப்படுத்திய நபரின் இயல்பு பற்றிய தகவல்கள் சொல்ல முடியும்.
பொதுவாக ஒருவரை அறிய நாம் நம் ஐம்புலன்களின் உதவியையே அதிகம் பயன்படுத்துகிறோம். அவரது தோற்றம், உடை, பேச்சு, நடத்தை ஆகியவற்றை வைத்தே அவரை எடை போடுகிறோம். ஆனால் மனித இயல்பை நன்றாக அறிந்த சாமர்த்தியமான ஏமாற்றுப் பேர்வழிகள் அப்பழுக்கற்ற தோற்றம், நடை, உடை, பேச்சுகளை வெளிப்படுத்தி யாரையும் ஏமாற்ற வல்லவர்களாக இருக்கிறார்கள். ஆனால் தங்கள் உள்ளுணர்வுத் திறன்களை மேம்படுத்திக் கொண்டவர்களை யாரும் அவ்வளவு சுலபமாக ஏமாற்றி விட முடியாது.
இனி பயிற்சிக்குச் செல்வோம்.
எல்லா ஆழ்மனசக்திகளை அடையவும் தேவையான அமைதியான மனநிலையே இதற்கும் முதலில் வேண்டும். சிறிது நேர தியானத்திற்குப் பின் முயற்சிப்பது மிகச் சரியான உணர்வு நிலைக்கு உங்களைத் தயார் செய்யும். ஒரு மனிதரைப் பற்றியோ, இடத்தைப் பற்றியோ நுண்ணலைகள் மூலம் உணர வேண்டுமானால் முதலிலேயே அவரைக் குறித்தோ, அந்த இடத்தைக் குறித்தோ மற்றவர்கள் மூலம் அறிந்த விவரங்களையும் அபிப்பிராயங்களையும் நீங்கள் வைத்துக் கொண்டிருக்கக் கூடாது. அப்படி வைத்துக் கொண்டிருந்தால் அதற்கேற்றபடி உணர நம் கற்பனை வழி வகுக்கக் கூடும்.
ஆரம்ப காலத்தில் கண்களை மூடிக் கொண்டு நுண்ணலைகளை உணர முயற்சி செய்வது நல்லது. பார்வையினால் தான் பல அபிப்பிராயங்களையும் நாம் உருவாக்குவதால் கண்களை மூடிக் கொள்வது அதைத் தவிர்க்கும். தானாக, தெளிவாக ஏதாவது ஒரு தகவலை அறியும் வரை பொறுத்திருங்கள். ஆரம்பத்தில் அதற்கு நிறையவே தாமதமாகலாம். ஆனால் அவசரப்படாதீர்கள். அப்படி பெறும் உணர்வை சில சமயங்களில் வார்த்தையாக்க முடியாமல் போகலாம். ஆனாலும் அந்த உணர்வு தெளிவாகும் வரை அதற்கு வார்த்தையைத் தந்து விடாமல் பொறுத்திருங்கள். பொறுமையாக இருந்தால் விரைவான விளைவுகளைப் பெறுவோம் என்பது ஆழ்மனம் மற்றும் ஆன்மிக மார்க்கங்களில் ஒரு மகத்தான விதி. ஆரம்பத்தில் பிரதானமான ஓரிரு விஷயங்களை மட்டும் தான் உங்களால் உணர முடியும். ஆனால் போகப் போக நிறைய தகவல்களை உங்களால் பெற முடியும்.
நீங்கள் செல்லும் புதிய இடங்களில் உள்ள நுண்ணலைகளை அறிய முயற்சியுங்கள். பின் அந்த இடங்களைப் பற்றி விசாரித்துத் தெரிந்து கொண்டு நீங்கள் அறிந்ததுடன் அது பொருந்தி வருகிறதா என்பதை சரி பாருங்கள். அது போல நீங்கள் சந்திக்கும் புதிய மனிதர்களிடமும் அவர்கள் நுண்ணலைகளை உணர முயற்சி செய்யுங்கள். அதையும் உங்கள் அனுபவத்துடனும், விசாரித்துப் பெறும் உண்மையான தகவல்களுடனும் ஒப்பிட்டு சரி பார்த்துக் கொள்ளுங்கள். பொருந்தி வரா விட்டால் இரு காரணங்கள் இருக்கக் கூடும். ஒன்று உள்ளுணர்வு தரும் தகவலைப் பெறுவதில் அவசரப்பட்டிருப்பதோ, விருப்பு வெறுப்புகளைப் புகுத்தியிருப்பதோ காரணமாக இருக்கலாம். இல்லா விட்டால் நீங்கள் விசாரித்துப் பெற்ற தகவல்கள் தவறாக இருந்திருக்கலாம். அதை ஏற்றுக் கொண்டு மறுபடி தொடருங்கள்.
துவக்கத்தில் நல்லது, தீயது, அன்பு, வெறுப்பு, அமைதி, குழப்பம் என்பது போன்ற மிகப் பொதுவான நுண்ணலைகளைத் தான் உணர முடியும். ஆனால் போகப் போக அந்தப் பொதுவான உணர்வுக்குள் இருக்கும் சூட்சுமமான சில விஷயங்களையும் விடாமல் முயற்சி செய்பவர்களால் கண்டிப்பாக உணர முடியும்.
இதில் நன்றாகத் தேர்ச்சி பெற்றால் இது போல மற்றவர்கள் உபயோகித்த பொருள்களைக் கையில் வைத்து அதில் வெளிப்படும் நுண்ணலைகளை அறிய நீங்கள் முயற்சி செய்யலாம். அந்தப் பொருள்கள் உலோகமாக இருந்தால் அதன் மூலம் வெளிப்படும் நுண்ணலைகள் தெளிவாகக் கிடைக்கின்றன என்று அனுபவஸ்தர்கள் கூறுகின்றனர். ஆட்கள், இடங்கள் வெளிப்படுத்தும் நுண்ணலைகள் அளவுக்கு இந்தப் பொருட்களின் நுண்ணலைகள் பெறுவதில் தினசரி வாழ்க்கையில் பெரிய பயன் இருக்கப் போவதில்லை என்றாலும் ஆராய்ச்சி செய்ய விரும்புபவர்கள் முயன்று பார்ப்பதில் தவறில்லை.
இந்த நுண்ணலைகளைத் தெளிவாக உணர முடிவதில் மிகவும் தேர்ச்சி பெற்றவர்கள் கூட 80 அல்லது 90 சதவீதம் தான் வெற்றி பெறுகிறார்கள் என்று சொல்லப்படுகிறது. அவர்களே 10 முதல் 20 சதவீதம் தோல்வி அடைகிறார்கள் என்கிற போது புதிதாக முயல்பவர்கள் தங்கள் தோல்விகளைப் பெரிதுபடுத்தத் தேவை இல்லை. ஆனால் விடாமல் முயற்சி செய்யச் செய்ய நுண்ணலைகளை உணரும் திறன் அதிகரித்துக் கொண்டே போகிறது என்பது அனுபவ உண்மை.

அறிந்ததை சோதித்துப் பார்க்க 'டெலிபதி'


- என்.கணேசன்
ஆழ்மன சக்திகள் பற்றி ஆதாரபூர்வமான நிகழ்வுகளை ஆரம்பத்தில் பார்த்தோம். பிறகு அந்த ஆழ்மன சக்திகளை அடைய உதவும் வழிகளில் தியானம் துவங்கி பல வகைப் பயிற்சிகளையும் பார்த்தோம். ஆழ்மன சக்திகளைப் பெற உதவும் உணர்வு மற்றும் மனநிலைகளையும், அதைப் பெறத் தடையாக இருக்கக்கூடிய மனநிலைகளையும் பார்த்தோம்.
கடந்த சில வாரங்களில் ஆழ்மனதைப் பலப்படுத்துபவை எவை, பலவீனப்படுத்துபவை எவை என்றும் பார்த்தோம். இது வரை அறிந்தவற்றை எல்லாம் பயன்படுத்தி நம்மாலும் அந்த சக்திகளைப் பயன்படுத்த முடிகிறதா என்று சோதித்துப் பார்க்கும் கடைசிக் கட்டத்திற்கு இப்போது வந்திருக்கிறோம்.
ஒரு விஷயத்தை அறிவு பூர்வமாக அறிந்து கொள்வது வேறு. அதை உணர முடிவது வேறு. அறிந்து கொள்வதற்கு அறிந்தவர்களும், தகவல் சாதனங்களும் உதவ முடியும். ஆனால் உணர்வது என்பது தனிமனித அனுபவமே. அதற்கு மற்றவர்களோ, சம்பந்தப்பட்ட தகவல்களோ உதவ முடியாது. இந்த உண்மை மற்றெல்லா விஷயங்களையும் விட அதிகமாக ஆழ்மன சக்திகளுக்கு பொருந்தும்.
அறிய உதவும் தகவல்கள், வரைபடங்கள் போன்றவை. ஒரு இடத்திற்கு எப்படிப் போக வேண்டும் என்று மட்டுமே தெரிவிக்கும். ஆனால் அந்தத் தகவலை எந்த அளவுக்கு ஒருவன் பயன்படுத்துகிறான், அங்கு போக எந்த அளவு முயற்சி செய்கிறான், அவன் போகும் வேகம் எந்த அளவுக்கு இருக்கிறது என்பது அந்த தனிமனிதனையே சார்ந்தது. அதைப் பொறுத்தே அவன் அந்த இடத்திற்குப் போய் சேர்வதும், சேராதிருப்பதும் தீர்மானிக்கப்படுகிறது.
இங்கு இது வரை சொல்லப்பட்ட பயிற்சிகள், தகவல்கள் எல்லாம் வரைபடங்கள் போன்றவையே. அந்தப் பயிற்சிகளை எந்த அளவு பயன்படுத்துகிறீர்கள், செயல்படுத்துகிறீர்கள் என்பதைப் பொறுத்தே இதில் பெறும் வெற்றியின் அளவும் இருக்கும். இதில் சில பயிற்சிகள் சுவாரசியமில்லாதவையாக இருக்கலாம். சில பயிற்சிகள் கடினமானதாக இருக்கலாம். சில பயிற்சிகள் பொருளில்லாதவையாகக் கூடத் தோன்றலாம். ஆனாலும் அதை விடாமுயற்சியோடும், ஆர்வத்தோடும் செய்வது மட்டுமே முடிவில் ஆழ்மன சக்திகளை அடைய வழி செய்யும்.
ஆனால் உங்களுக்குள்ளே இருக்கும் ஆர்வம் உறுதியானதாக இருந்தால், அது காலப்போக்கில் வடிந்து போகாததாக இருந்தால் அது ஆழ்மன சக்திகளை அடையத் தேவையான அனைத்தையும் உங்களைச் செய்ய வைக்கும். அப்படித் தொடர்ந்து ஆர்வத்துடன் படித்து, உங்களுக்குத் தெரிந்த வகையில் விடாமல் பயிற்சிகளும் செய்து வந்திருந்தால் அந்த சக்திகளை ஓரளவாவது நிச்சயமாக நீங்கள் அடைந்திருப்பீர்கள். அதை சோதித்துப் பார்க்கும் வழிகளைப் பார்ப்போம்.
முதலில் 'டெலிபதி' எனப்படும் ஒரு மனதில் இருந்து இன்னொரு மனதிற்கு வார்த்தைகளால் அல்லாமல் செய்திப் பரிமாற்றம் செய்யும் சக்தியைப் பார்ப்போம். மிகவும் நெருக்கமான மனிதர்களுக்கு இடையில் இந்த சக்தி இயல்பாகவே அதிகம் இருக்கும் என்று பார்த்தோம். தாய்-குழந்தை, காதலர்கள், நெருங்கிய நண்பர்கள் இடையே சொல்லாமலேயே உணரும் சக்தி இருக்கும். எதையும் சொல்லியே தெரியப்படுத்திப் பழகி விட்டதால் சொல்லாமல் உணரும் சக்தியைப் பெரும்பாலும் நாம் இழந்து விட்டிருக்கிறோம். பொதுவாக ஏதோ சில அசாதாரண
சந்தர்ப்பங்களில் மட்டும் இது நம்மிடையே எழுகிறது.
ஆதிசங்கரர் சன்னியாசம் வாங்குகையில் அவர் தாய் ஆர்யாம்பாள் மிகவும் துக்கத்தில் ஆழ்ந்தார். அவரிடம் அவருடைய மரண காலத்தில் கண்டிப்பாக வந்து சேர்வதாக ஆதிசங்கரர் சத்தியம் செய்து தந்தார். அதே போல ஆர்யாம்பாள் மரணத் தருவாயில் மகனை நினைக்க உடனடியாக ஞான திருஷ்டியால் ஆதிசங்கரர் உணர்ந்து தாயிடம் விரைந்து சென்றார் என்று படித்திருக்கிறோம். இது தான் டெலிபதி என்று சொல்லலாம்.
இதே போன்ற இன்னொரு சம்பவம் நடந்ததை நான் அறிவேன். எங்கள் வங்கியில் வேலைக்குச் சேர்ந்த ஒரு பெண் தன் தந்தையுடன் மிகவும் பாசமாக இருப்பவர். வெளியூரில் வேலை கிடைத்ததால் லேடீஸ் ஹாஸ்டலில் தங்கி இருந்தார். ஒரு நாள் தன்னுடன் தங்கி இருந்த தோழியுடன் கோயிலுக்குச் சென்றார். கோயிலுக்குச் செல்லும் போது மிகவும் நகைச்சுவையாகப் பேசிக் கொண்டு சென்ற அவர் கோயிலுக்குச் சென்ற சில நிமிடங்களில் காரணம் தெரியாமல் சோகமயமானார். திடீரென்று விக்கி விக்கி அழ ஆரம்பிக்க அந்தத் தோழி காரணம் கேட்டார்.
ஆனால் அவருக்குச் சொல்லத் தெரியவில்லை. "ஏனோ அழுகை அழுகையாய் வருகிறது"
என்று சொல்லி தொடர்ந்து அழுதார். சிறிது நேரம் கழித்து இருவரும் ஹாஸ்டலிற்குத் திரும்பினார்கள். ஹாஸ்டலுக்கு வந்த போது அவரது தந்தை மாரடைப்பால் காலமானார் என்று சிறிது நேரத்திற்கு முன் போனில் தகவல் வந்ததைத் தெரிவித்தார்கள். அப்போது செல்போன் வசதி இல்லாத காரணத்தால் வீட்டார்கள் லேடீஸ் ஹாஸ்டலுக்குப் போனில் தகவல் சொல்லி இருந்திருக்கிறார்கள்.
அந்தப் பெண்ணின் தந்தைக்கு மாரடைப்பு வந்த சமயத்தில் தான் காரணம் தெரியாமல் அந்தப் பெண் அழ ஆரம்பித்திருக்கிறார் என்பது பின்னர் புரிந்தது. தந்தைக்கும், அந்தப் பெண்ணிற்கும் இடையே எல்லை இல்லாத பாசம் இருந்தது என்பதைத் தவிர ஆழ்மன சக்தி, டெலிபதி போன்ற பெரிய விஷயங்களைப் பற்றி இருவரும் அறியாதவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
இப்படி உணர்ச்சிகளின் உச்சக்கட்டங்களிலும், அவசரமான கட்டங்களிலும் மிகவும் நெருக்கமான நபர்களுடன் நாம் அரைகுறையாக உணர முடிகிற விஷயங்களை இயல்பான நேரங்களிலும் கூட வார்த்தைகளில்லாமல் தெளிவாக உணர முடியும் என்பது ஆழ்மன சக்திகளை அடைந்தவர்களின் அனுபவம். இந்த டெலிபதி உங்களுக்கு கைகூடி வருகிறதா என்பதை இனி சோதித்துப் பாருங்கள்.
முதலில் உங்கள் எண்ண அலைகளுக்கு ஒத்த எண்ண அலைகள் உள்ள ஒரு நண்பரை இதில் உதவியாளராக சேர்த்துக் கொள்ளுங்கள். என்றுமே இது போன்ற விஷயங்களில் ஈடுபாடோ, நம்பிக்கையோ இல்லாத ஆள்களைத் தவிருங்கள். உங்கள் சோதனை சமயங்களில் பார்வையாளராகக் கூட அது போன்ற ஆட்கள் அருகில் இருக்க அனுமதிக்க வேண்டாம். இது ஆரம்பக் கட்டங்களில் மிகவும் அவசியம். இதில் நல்ல தேர்ச்சி அடைந்த பின்னர், உங்கள் ஆழ்மன சக்திகள் வலிமை அடைந்த பின்னர் மற்றவர்களின் எப்படிப்பட்ட எதிர்மறை எண்ண அலைகளும் உங்களையும், உங்கள் சக்தியையும் பாதிக்காது. ஆனால் அந்த நிலையை அடையும் வரை ஒத்த எண்ண அலைகள் உள்ள மனிதர்கள், சூழ்நிலைகளே சோதனைக்கு உகந்தவை.
பரபரப்பில்லாத அமைதியான மனநிலையே ஆழ்மன சக்திகள் வெளிப்படப் பொருத்தமான மனநிலை. சரியாகச் சொல்ல முடிய வேண்டுமே என்ற பரபரப்போ, முடியுமா என்ற சந்தேகமோ மனதில் வேண்டாம். முதலில் எளிமையான சோதனையில் இருந்து ஆரம்பியுங்கள். நண்பரிடம் ஒன்றில் இருந்து பத்திற்குள்ளாக ஒரு எண்ணை நினைக்கச் சொல்லுங்கள். அவரை அந்த எண்ணை அவருடைய மனத்திரையில் பெரியதாக உருவாக்கி ஒளிரச்செய்து காணச் சொல்லுங்கள். பின் கண்களை மூடிக்கொண்டு உங்கள் மனத்திரையில் அவர் கண்டு கொண்டு இருக்கும் எண்ணைக் காண முயற்சி செய்யுங்கள். அந்த எண் உங்கள் மனத்திரையில் ஒளிர வேண்டும் என்று எதிர்பாருங்கள்.
இந்த முயற்சியில் நீங்கள் உங்களை அறியாமலேயே யூகம் செய்ய முயற்சிக்கக் கூடும். நண்பருக்குப் பிடித்த எண் எது, அவரது அதிர்ஷ்ட எண் எது என்று யூகிக்கத் தோன்றலாம். அதைத் தவிருங்கள். யூகத்தின் மூலம் சரியான எண்ணைச் சொன்னாலும் நம் நோக்கத்திற்கு அது தோல்வியே. ஓரிரு நிமிடங்கள் கழித்து உங்கள் மனத்திரையில் பெரிதாக ஒளிர ஆரம்பிக்கும் எண்ணை, அல்லது உறுதியாக மேலோங்கி நிற்கிற எண்ணை வாய் விட்டு அவரிடம் சொல்லுங்கள். சரி பார்த்துக் கொள்ளுங்கள். 90 சதவீதம் ஆரம்பத்தில் தப்பாகச் சொல்ல வாய்ப்பிருக்கிறது. ஏனென்றால் அந்த எண் ஆழ்மனதின் முயற்சியின் மூலம் தானாக வரும் முன், பொறுமையில்லாமல் நம் ஆர்வக் கோளாறு ஒரு கற்பனை எண்ணை நாம் வரவழைக்கச் செய்திருக்கலாம்.
முதல் முயற்சியிலேயே குழந்தை நடக்க ஆரம்பித்து விடுவதில்லை. எனவே தளராமல் உங்கள் முயற்சிகளைத் தொடருங்கள். எண்கள் மட்டுமல்லாமல், காய்கறிகள், பழங்கள், பொருள்கள், உங்கள் இருவருக்கும் நன்றாகத் தெரிந்த மனிதர்களின் முகங்கள், ஏதாவது ஒரு துறையின் பிரபலங்கள் என்று மாற்றிக் கொண்டு முயற்சியுங்கள். யூகம், அவசரம், சரியாகச் சொல்ல வேண்டும் என்கிற படபடப்பு போன்றவை இல்லா விட்டால் விரைவிலேயே உங்களால் சரியாகச் சொல்ல முடியும்.
தோல்வியைப் போலவே வெற்றியும் நம் மனநிலையைப் பாதிக்கக் கூடும். அப்படி வெற்றி தோல்விகள் ஏற்படுத்துகிற மாறுதல் மனநிலைகளைத் துடைத்து விட்டு மறுபடியும் புதிதாக ஆரம்பியுங்கள். களைப்பான சமயங்களும் இந்த சோதனைக்கு உகந்ததல்ல. அந்த நேரங்களிலும் சோதனை செய்வதைத் தவிருங்கள்.
அது போல உங்களுக்கு மிக நெருங்கியவர்கள் ஏதாவது சிந்தனையில் இருக்கையில் அவர்களிடம் கேட்காமலேயே அதை உங்களால் உணர முடிகிறதா என்று முயற்சி செய்யுங்கள். முன்பு சொன்னது போல யூகம், கற்பனை இரண்டின் வழியாக அல்லாமல் தானாக மனதில் வந்து சேரும் வரை பொறுமையாகக் காத்திருங்கள். தானாக விடை ஏதும் வரா விட்டால் விட்டு விடுங்கள். கட்டாயப்படுத்தி வரவழைக்க நினைக்கும் விடைகள் சரியாக இருப்பதில்லை. ஒரு விடை மனதில் உறுதியாகத் தோன்றினால் விடை சரி தானா என்று அவர்களிடம் கேட்டு சரிபாருங்கள். தவறாக இருந்தால் அதைப் பொருட்படுத்தாதீர்கள். இது ஒன்றும் உங்கள் வாழ்வை நிர்ணயிக்கும் பரீட்சை அல்ல. அடிக்கடி முயற்சி செய்யுங்கள். போகப் போக நீங்கள் அந்த உணரும் சக்திக்கு 'ட்யூன் ஆக' ஆரம்பிப்பீர்கள். பின் நீங்கள் இந்தத் திறனில் வெற்றி பெறுவது அதிகரிக்க ஆரம்பிக்கும்.
அடுத்ததாக நீங்கள் உங்கள் எண்ணத்தை அடுத்தவருக்கு அனுப்புவது பற்றிய சோதனையை ஆரம்பியுங்கள். ஆரம்பத்தில் எளிய சோதனைகளையே ஆரம்பியுங்கள்.
உதாரணத்துக்கு தெருவில் நடந்து கொண்டிருக்கும் போது முன்னால் போகும் நபர் திடீரென்று உங்களைத் திரும்பிப் பார்க்க வேண்டும் என்று உறுதியாக எண்ணுங்கள். அவரது பின் கழுத்தில் உங்கள் பார்வையைப் பதித்து ஆழமாக எண்ணுங்கள். அவர் திரும்பிப் பார்க்கிறாரா என்று பாருங்கள். உங்களிடம் பேச வரும் நபர் நீங்கள் தேர்ந்தெடுக்கும் ஒரு சொல்லை அல்லது ஒரு
விஷயத்தைப் பற்றி கண்டிப்பாக உங்களிடம் சொல்ல வேண்டும் என்று உறுதியாக, ஆழமாக எண்ணுங்கள். நீங்கள் நினைக்கிறபடி அந்த நபர் நடந்து கொள்கிறாரா, சொல்கிறாரா என்று பாருங்கள்.
அப்படி நடக்கா விட்டால் அது உங்களின் சக்தியின் குறைபாடாக இருக்க வேண்டியதில்லை. வேறு காரணங்கள் கூட இருக்கலாம். உங்கள் முன்னால் போய்க் கொண்டிருக்கும் நபர் தன்னைப் பாதிக்கும் ஏதோ ஒரு விஷயத்தில் ஆழ்ந்து போயிருக்கலாம். ஆழ்ந்த சிந்தனையில் ஆழ்ந்து போய் இருக்கிற நபரை அந்த சிந்தனையில் இருந்து வெளியே வர வைத்துப் பின் திரும்ப வைப்பது மிகவும் சக்தி படைத்த ஒருசிலரால் மட்டுமே முடியும். ஓரளவு சக்தி பெற்றவர்களாலும் கூட அது முடியாது. அது போல ஒரு விஷயத்தில் ஆழ்ந்து போய் அதைப் பற்றி உங்களிடம் பேச வரும் ஒரு நபரை சம்பந்தமில்லாத விஷயத்தையோ, அதற்குப் பொருத்தமில்லாத வார்த்தையையோ சொல்ல வைப்பதும் கடினமே. ஆகவே இது போன்ற சமயங்களில் முன்பே ஏதோ சிந்தனையிலோ, கவலையிலோ, வேலைப்பளுவிலோ மூழ்கி இருப்பவர்கள் இந்த சோதனையில் ஈடுபடுத்தப் பொருத்தமானவர்கள் அல்ல என்று புரிந்து கொள்ளுங்கள்.
இது போல பல சோதனைகளை நீங்களே தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம். உருவாக்கிக் கொள்ளலாம். வீட்டில் உள்ளவர்களைக் கூட வாய் விட்டுச் சொல்லாமல் உங்கள் எண்ணங்கள் மூலம் இயக்க முடிகிறதா என்று பாருங்கள். இதிலும் அது அந்த நபருக்கு இசைவில்லாத செயல்களைச் செய்ய வைக்கும் முயற்சியாக இல்லாமல் இருக்கும்படி பார்த்துக் கொள்ளுங்கள்.
இந்த சோதனைகள் சுவாரசியமானவை. இதில் கிடைக்கும் வெற்றி தோல்விகளுக்குப் பெரிய முக்கியத்துவத்தைத் தராதீர்கள். சற்று முன் விளக்கியபடி தோல்விகளுக்கு உங்கள் ஆழ்மனசக்திக்கு சம்பந்தமில்லாத வேறு காரணங்கள் இருக்கக் கூடும். அதையும் அலசுங்கள்.
போகப் போக உங்கள் முயற்சிகளில் வெற்றிகள் அதிகரித்துக் கொண்டே போவதை நீங்கள் காண்பீர்கள். ஆனால் இந்த சோதனைகள் குறித்தும், நீங்கள் அடைந்த வெற்றிகள் குறித்தும் மற்றவர்களிடம் சொல்வதையோ, அலசுவதையோ தவிர்ப்பது நல்லது. காரணத்தைப் பின்பு பார்ப்போம்.
இனி அடுத்த ஆழ்மன சக்திகளைப் பரிசோதிக்கச் செல்லலாமா?

மனக்கண்ணில் காணும் காட்சிகளின் சக்தி


என்.கணேசன்
ழ்மனதை மாபெரும் சக்தி படைத்த ஆயுதமாக மாற்ற ஒருமுனைப்படுத்தப்பட்ட மனதைப் போலவே உதவுகிற இன்னொரு முக்கியப் பயிற்சி மனக்கண்ணில் காட்சிகளாகக் காணும் பயிற்சி.
வார்த்தைகளைக் காட்டிலும் அதிகமாக ஆழ்மனதை எட்ட வல்லது காட்சிகள். அந்தக் காட்சிகள் நிஜமாக நடப்பவைகளாகக் கூட இருக்க வேண்டியதில்லை. அவை கற்பனையாக இருந்தாலும் கூட தத்ரூபமாகக் கற்பனையில் காண முடிந்தால் அந்தக் கற்பனைக் காட்சிகளையே நிஜமாக ஆழ்மனம் எடுத்துக் கொண்டு விடும். முன்பே குறிப்பிட்டது போல ஆழ்மனம் பிரமிக்கத்தக்க சக்திகளைப் பெற்றிருந்தாலும் தனக்கு அளிக்கப்படும் செய்திகளின் உண்மைத் தன்மையை அலசி ஆராய்வதில்லை. அதனால் மனதில் உருவகப்படுத்தப்படும் எல்லாக் காட்சிகளையும் உண்மையான தகவல்களாகவே எடுத்துக் கொண்டு அதற்கேற்றாற் போல இயங்குகிறது. இதை ஆராய்ச்சிகளின் மூலம் கண்டு பயன்படுத்திக் கொண்டு சிறந்தபலன் கண்டவர்கள் ரஷியர்கள்.
ஆழ்மன சக்திகள் குறித்து முதல் முதலில் அதிகமாக ஆராய்ந்த நாடுகளில் முதலிடம் வகித்தது ரஷியா என்றே சொல்லலாம். வாசிலிவ் என்ற ஆழ்மன ஆராய்ச்சியாளர் செய்கையால் கவரப்பட்டு ரஷிய சர்வாதிகாரி ஸ்டாலின் லெனின்கிராடு பல்கலைகழகத்தில் ஆழ்மன ஆராய்ச்சிக் கூடம் ஏற்படுத்த அனுமதி அளித்தது பற்றி முன்பு கூறியிருந்தது வாசகர்களுக்கு நினைவிருக்கலாம். அங்கு நடந்த ஆராய்ச்சிகளில் ஸ்டாலினும், பிந்தைய ஆட்சியாளர்களும் ஆர்வம் காட்டினார்கள்.
1976ல் மாண்ட்ரீல் நகரில் ஒலிம்பிக்ஸ் விளையாட்டுப் போட்டிகளில் மிக அதிகமான கோப்பைகளைத் தட்டிச் சென்ற கிழக்கு ஜெர்மானிய வீரர்கள் ஆழ்மனப் பயிற்சிகளில் visualization என்று சொல்லப்படும் மனக்கண்ணில் காட்சிகளாகக் காணும் பயிற்சியைத் தொடர்ந்து செய்து வந்தனர் என்ற செய்தி பத்திரிக்கைகளில் வெளியானது. அதைப் படித்தவுடனேயே 1980ஆம் ஆண்டில் மாஸ்கோவில் நடக்கவிருக்கும் ஒலிம்பிக்ஸ் விளையாட்டுப் போட்டிகளுக்குத்
தயாரான ரஷியா தங்கள் நாட்டிலேயே நடக்கும் ஒலிம்பிக்ஸ் விளையாட்டில் மிகச் சிறப்பாக சோபிக்க வேண்டும் என்று எண்ணி தங்கள் விளையாட்டு வீரர்களின் பயிற்சிகளுக்கு அந்தப் பயிற்சிகளையும் சேர்த்துக் கொள்ள முடிவு செய்தது.
அந்தப் பயிற்சிகளையே ஆராய்ச்சிகளாகவும் மாற்ற எண்ணிய ரஷியர்கள் ஆரம்பத்திலேயே தங்கள் விளையாட்டு வீரர்களை நான்கு பிரிவுகளாகப் பிரித்தனர்.
'ஏ' பிரிவில் உள்ள விளையாட்டு வீரர்களுக்கு நூறு சதவீதம் உடல் ரீதியான விளையாட்டுப் பயிற்சி மட்டும் அளிக்கப்பட்டது. அடுத்ததாக 'பி' பிரிவில் 75 சதவீதம் உடல் ரீதியான விளையாட்டுப் பயிற்சிகளும் 25 சதவீதம் மன ரீதியான விளையாட்டுப் பயிற்சிகளும் அளிக்கப்பட்டது. அடுத்ததாக 'சி' பிரிவில் உடல்ரீதியான விளையாட்டுப் பயிற்சிகளும், மனரீதியான பயிற்சிகளும் 50, 50 சதவீதமாக அளிக்கப்பட்டது. கடைசியாக 'டி' பிரிவில் உடல் ரீதியான பயிற்சிகள் 25 சதவீதமும், மனரீதியான பயிற்சிகள் 75 சதவீதமும் அளிக்கப்பட்டது.
கடைசியாக 1980 ஆம் ஆண்டு ஒலிம்பிக்ஸ் போட்டிகள் முடிந்த போது கணக்கிட்டதில் அந்த விளையாட்டு வீரர்களில் மிக அதிகமான வெற்றிக் கோப்பைகளைப் பெற்றது 'டி' பிரிவில் பயிற்சி பெற்ற வீரர்கள் தான் என்பதை ரஷிய ஆராய்ச்சி தெரிவித்தது. அதாவது 25 சதவீத உடல் ரீதியான பயிற்சிகளும், 75 சதவீத மனரீதியான பயிற்சிகளும் பெற்றவர்கள் தான் அதிகக் கோப்பைகள் பெற்றவர்கள். மற்ற பிரிவினர்களிலும் மனரீதியான பயிற்சிகள் பெற்ற அதிக விகிதத்தின் படியே அதிகக் கோப்பைகள் பெற்றிருந்தார்கள்.
மன ரீதியான பயிற்சிகளில் பெரும்பாலும் அவர்கள் பயன்படுத்தியது மனக்கண்ணில் வெற்றியைக் காட்சியாகக் காணும் பயிற்சியைத் தான். இது விளையாட்டு உலகில் பெரும் புரட்சியை ஏற்படுத்தியது என்றே சொல்ல வேண்டும். அதன் பிறகு மேலை நாடுகளில் சர்வ தேசப் போட்டிகளில் பங்கு பெறும் திறமை வாய்ந்த விளையாட்டு வீரர்களுக்குப் பயிற்சியளிக்க விளையாட்டு மனோதத்துவ நிபுணர் (sports psychologist) தனியாக நியமிக்கும் வழக்கம் ஆரம்பித்தது.
1970 களில் மொத்த விளையாட்டுகளுக்கும் சேர்த்து ஓரிரண்டு விளையாட்டு மனோதத்துவ நிபுணர்களை மட்டும் வைத்திருந்த மேலை நாடுகளில் பல இப்போது ஒவ்வொரு விளையாட்டின் குழுவிற்கும் தனித்தனியாக விளையாட்டு மனோதத்துவ நிபுணரை நியமிக்கின்றன.
டென்னிஸ் வீரரான ஆண்ட்ரி அகாசி, கால்ஃப் வீரரான ஜேக் நிக்ளாஸ், கால் பந்தாட்ட வீரர் பீலே போன்றவர்கள் தங்கள் துறையில் சிகரத்தை எட்டி வரலாறு படைத்தவர்கள். அவர்களும், அவர்களைப் போன்ற பல வெற்றி வீரர்களும் visualization என்று சொல்லப்படும் மனக்கண்ணில் தங்கள் வெற்றியை கற்பனையாக உருவகப்படுத்தி காணும் பயிற்சியை செய்பவர்களாகத் தான் இருந்தார்கள்/இருக்கிறார்கள். அது அவர்களுடைய விளையாட்டுப் பயிற்சியுடன் சேர்ந்த ஒரு அங்கமாகவே பிரதான இடம் வகிக்கிறது.
கனடா நாட்டில் ஒலிம்பிக் விளையாட்டுக் குழுவிற்கு மனோதத்துவ நிபுணராக இருந்த டாக்டர் லீ புலோஸ் (Dr. Lee Pulos) தான் விளையாட்டு வீரர்களுக்கு அளித்த மனபயிற்சிகளில் முக்கியமானவை இரண்டு என்கிறார். ஒன்று தனக்குள்ளேயே சொல்லிக் கொள்ளும் வார்த்தைகளில் தன்னம்பிக்கை இல்லாதவற்றை அகற்றும் பயிற்சி. ஒவ்வொரு மனிதனும் தனக்குள் நிமிடத்திற்கு சுமார் 150 சொற்கள் சொல்லிக் கொள்கிறான் என்றும் வெற்றி பெற விரும்புவன் அச்சொற்களில் தன்னைக் குறைத்துக் கொள்கிற, தன்னம்பிக்கை இழக்கிற, பலவீனமான வார்த்தைகளை எதுவும் சொல்லிக் கொள்ளாமல் இருப்பது மிக முக்கியம் என்றும் சொல்கிற அவர் அதற்கான பயிற்சி முதல் பயிற்சி என்கிறார். (கிட்டத்தட்ட இதையே 53வது அத்தியாயத்தில் நாம் பார்த்தோம்.)
அடுத்த பயிற்சியாக வெற்றியை மனக்கண்ணில் காட்சிகளாகக் காணும் பயிற்சியைத் தான் டாக்டர் லீ புலோஸ் கூறுகிறார். வெற்றியை மிகத் தெளிவாக சினிமாப்படம் பார்ப்பது போல் மனத்திரையில் திரும்பத் திரும்ப ஓட்டிப் பார்ப்பது முக்கியம் என்கிறார் அவர். வெற்றி பெறத் தேவையான அத்தனையும் ஒவ்வொன்றாய் சிறப்பாகச் செய்து முடிப்பது போல மனதில் காட்சியைத் தெளிவாக உருவகப்படுத்துவது முக்கியம் என்கிறார். அப்படி உருவகப்படுத்தும் பயிற்சியின் போது ஆட்டத்தின் முழு சூழ்நிலையையும் கொண்டு வர வேண்டும் என்கிறார். ஆட்ட மைதானத்தின் சத்தம், கைதட்டல்கள், தட்பவெப்ப நிலை என்று முடிந்த அளவு எல்லா சின்னச் சின்ன விஷயங்களையும் அந்தக் காட்சியில் தெளிவாகக் கொண்டு வர வேண்டும் என்கிறார். இப்படி மனத்திரையில் தொடர்ந்து காட்சியைக் கண்டு ஆழ்மனதில் ஆழமாகப் பதித்தால் நிஜமான விளையாட்டின் போது ஆழ்மனம் அந்தப் பதிவை படபடப்பில்லாமல் நிஜமாக்கிக் காட்டும். இது விளையாட்டுக்கு மட்டுமல்ல எல்லா இலட்சியங்களுக்கும் மிகச்சரியாகப் பொருந்தி வரும் என்கிறார்கள் ஆழ்மனப் பயிற்சியாளர்கள்.
ஆழ்மனதில் சொற்களாகவும், நம்பிக்கைகளாகவும், காட்சிகளாகவும் நாம் அனுப்பிப் பதிய வைக்கும் விஷயங்கள் நம் தன்னம்பிக்கையையும், உற்சாகத்தையும் அழிப்பனவாக இருக்கக் கூடாது என்பதையும் நம் இலட்சியத்தை நாம் வெற்றிகரமாக அடைவது போல மனத்திரையில் நாம் காணும் காட்சிகள் தெளிவாகவும் உணர்வு பூர்வமாகவும் இருக்கும் பட்சத்தில் ஒரு நாள் ஆழ்மனதால் நிஜமாக்கியே காட்டப்படும் என்பதையும் நாம் என்றும் மறந்து விடக்கூடாது.
பிரமிக்கத் தக்க சாதனைகள் செய்த பல வெற்றியாளர்கள் தங்களை அறியாமலேயே இப்படி மனத் திரையில் இலட்சியங்களை அடைந்து வெற்றி பெறுவதாக காட்சிகளை உருவாக்கிப் பார்க்கும் பழக்கத்தைப் பெற்றிருந்தார்கள். இதற்கு சிறந்த உதாரணம் சொல்ல வேண்டுமானால் நெப்போலியனைச் சொல்லலாம்.
ஒரு சாதாரணக் குடிமகனாய் பிறந்து வறுமையில் வாடி வளர்ந்த நெப்போலியன் இளமையில் ஒதுக்கமான ஓரிடத்தில் கருங்கற்பாறையின் பிளவு ஒன்றில் அமர்ந்து பகற்கனவு காணுவது வழக்கம். மற்ற சிறுவர்கள் விளையாடிக் கொண்டிருக்கையில் அவன் மட்டும் அங்கு அமர்ந்து சக்கரவர்த்தியாகத் தன்னை பாவித்து போர்களை வெல்வது போலவும் நாடுகளை ஆக்கிரமிப்பது போலவும் கற்பனை செய்வது வழக்கம். திரண்டு வரும் அலைகளைத் தன் எதிரிகளாகவும், எதிரிகள் தன்னருகே வந்து தோற்றுப் பின் வாங்குவது போலவும் கற்பனை செய்து கொள்வானாம். அவன் ஆழ்மனதில் பதித்த அந்த கற்பனைகள் பிறகு வரலாறாகியது என்பதை எல்லோரும் அறிவோம். நெப்போலியன் அமர்ந்து கற்பனைக் கனவு கண்ட அந்த பாறைப் பிளவு இன்றும் "நெப்போலியனின் அழகுமிகு செயற்கைக் குகை (Napoleon's Grotto)" என்ற பெயரால் அழைக்கப்பட்டு வருகிறது.
இன்னொரு வியப்பூட்டும் சம்பவத்தையும் மனக்கண்ணில் காணும் காட்சிகளின் சக்திக்கு உதாரணமாய் சொல்லலாம். சில வருடங்களுக்கு முன்பு டிஸ்கவரி சேனலில் மனோசக்தி பற்றிய சில அசாதாரண நிகழ்வுகளைக் காண்பித்தார்கள். அதில் ஒரு நிகழ்வு கான்சரால் பாதிக்கப்பட்ட ஒரு சிறுவனுடையது. கான்சர் முற்றிய கட்டத்தில் இருப்பதால் அவன் ஆறு மாதங்களுக்கு மேல் பிழைக்க வாய்ப்பில்லை என்று டாக்டர்கள் கைவிரித்து விட்டார்கள். அவனை ஆஸ்பத்திரியில் இருந்து திருப்பி அழைத்து வருகையில் அந்த சிறுவன் தாயிடம் தன் உடலுக்கு என்ன வியாதி என்று கேட்டான். தாய் அவனிடம் அந்த நோய் பற்றி விளக்கப் போகாமல் "உன் உடலில் நோய்க்கிருமிகள் நிறைய உள்ளன. அதனால் தான் உனக்கு அசுகம்," என்று சுருக்கமாகச் சொல்லி விட்டாள்.
ஆறுமாதங்கள் கழித்து சிறுவன் இறந்து போவதற்குப் பதிலாக ஆரோக்கியமாய் இருக்க தாய் மறுபடி அவனை அந்த டாக்டரிடம் அழைத்துப் போனாள். அவனைப் பரிசோதனை செய்து பார்த்த டாக்டருக்கு பேராச்சரியம். அவன் உடலில் கான்சர் செல்கள் இல்லவே இல்லை. அவர் அந்தத் தாயிடம் என்ன மருத்துவம் பார்த்தீர்கள் என்று கேட்க அவளோ "பெரிய டாக்டர் நீங்களே இனி ஒன்றும் செய்ய முடியாது என்று சொல்லி விட்டதால் நான் வேறு சிகிச்சைக்கே போகவில்லை," என்றாள். பின் மெல்ல அந்த சிறுவனை விசாரித்த போது பதில் கிடைத்தது. 'வீடியோ கேம்'களில் மிக ஆர்வம் உள்ள அந்த சிறுவன் தாய் அவன் உடம்பில் இருப்பதாகச் சொன்ன நோய்க்கிருமிகளை எதிரிகளாக பாவித்து தினமும் அவற்றை துப்பாக்கியால் சுட்டுத் தள்ளுவது போலவும் அவை எல்லாம் செத்து விழுவது போலவும் மனதில் கற்பனை விளையாட்டு விளையாடுவானாம். ஆழ்மனம் அவனுடைய கற்பனைப்படியே நோய்க்கிருமிகளைக் கொன்று அவனைக் குணப்படுத்தியே விட்டது. இது நடந்து முடிந்து பல வருடங்கள் கழித்து தான் டிஸ்கவரி சேனலில் இந்த சம்பவத்தைக் குறிப்பிட்டார்கள். அந்த சிறுவன் அப்போது இளைஞனாக மாறி ஆரோக்கியமாய் இருப்பதைக் காட்டவும் செய்தார்கள்.
சக்கரவர்த்தியாவதும், ஒலிம்பிக்கில் கோப்பைகள் வாங்குவதும், கடும் நோய் குணமாவதும் கூட நம் மனதில் தெளிவாகக் காணும் கற்பனைக் காட்சிகளின் மூலம் சாத்தியமாகிறது என்றால் அவற்றை நாம் ஏன் பயன்படுத்தி நம் இலட்சியங்களை அடையக் கூடாது.
இந்தப் பயிற்சி செய்ய அமைதியாய் அமருங்கள். மூச்சுப் பயிற்சி செய்து, ஏதாவது எளிய தியானமும் செய்து மனதையும் அமைதியாக்குங்கள். பின் உங்கள் மனத்திரையில் உங்கள் இலக்கை நீங்கள் அடைந்திருக்கும் ஒரு அழகான தருணத்தைக் கற்பனை செய்து ஓட விடுங்கள். அது நிஜம் போலவே உணர்வு பூர்வமாக இருக்க வேண்டும். அந்தக் காட்சி ஒரு வரண்ட உயிரில்லாத கற்பனையாக இருந்து விடக் கூடாது. அப்படியிருந்தால் அது ஆழ்மனத்தை சென்றடையாது. உயிரோட்டமுள்ள ஒரு காட்சியாக அது இருக்க வேண்டும்.
அப்படி உயிரோட்டமாக இருக்க அந்தக் காட்சிக்கு எத்தனை கூடுதல் தகவல்களைச் சேர்க்க முடியுமோ அத்தனை தகவல்களைச் சேருங்கள். அந்த இலக்கை அடைந்த தருணத்தில் எப்படிப்பட்ட சந்தோஷத்தை உணர்வீர்களோ அதை உணருங்கள். அந்த தருணத்தில் உங்களுக்குக் கிடைக்கக் கூடிய பாராட்டுகளையும் கற்பனைக் காட்சியில் தெளிவாகப் பாருங்கள். ஆழ்மனம் அதை நம்ப ஆரம்பிக்கும் போது புதிய பாதைகள் உங்கள் முன் விரியும், உதவக் கூடிய ஆட்கள் கிடைப்பார்கள், நீங்கள் எதிர்பார்த்திராத திறமைகள் உங்களுக்குள் பிறக்கும். ஒரு நாள் அந்த இலக்கை நீங்கள் கண்டிப்பாக அடைவீர்கள். ஆழ்மனம் அதை சாதித்திருக்கும்.

ஆழ்மனதின் அபார சேவை!


- என்.கணேசன்
ழ்மனதில் ஆழமாகப் பதிபவையே நம்மை உண்மையில் இயக்கும் சக்தியாக இருக்கிறது என்பதைப் பார்த்தோம். இனி ஆழ்மனம் தன் தகவல் களஞ்சியத்தைப் பயன்படுத்தி நமக்கு எப்படியெல்லாம் அபார சேவை புரிகிறது என்பதையும், அதனிடம் அந்த வேலை வாங்குவது எப்படி என்றும் பார்ப்போம்.
மேல்மனம் உறக்கத்தின் போது ஓய்வு எடுத்துக் கொள்கிறது. ஆழ்மனம் உறக்கத்தின் போதும் கூட ஓய்வு எடுத்துக் கொள்வதில்லை. இதை பல ஆராய்ச்சிகள் செய்து உதாரணங்களுடன் டாக்டர் ஏ.ஸ்மித் என்ற இங்கிலாந்து மனவியல் அறிஞர் தன்னுடைய நூலில் (Does Brain Think, When I Sleep?) எழுதியுள்ளார். முன்பே கூறியது போல அது தான் சேகரித்து வைத்து இருக்கும் தகவல்களுடன் புதிதாகப் பெற்ற தகவல்களைச் சேர்த்து தக்க விதத்தில் சரி செய்தும், ஒழுங்குபடுத்தி, புதுப்பித்து வைத்துக் கொள்கிறது. மேல்மனம் எப்போதோ நினைத்து மறந்த சின்னத் தகவல் கூட ஆழ்மனதில் முறையாக சேகரிக்கப்பட்டு இருக்கும்.
இந்த தகவல் களஞ்சியத்தில் இருந்து தேவைப்பட்ட தகவல்களை எல்லாம் தேர்ந்தெடுத்து இணைத்து தொகுத்து புதிய கண்டுபிடிப்புகளையும், புதிய சித்தாந்தங்களையும், புதிய கோட்பாடுகளையும், பேருண்மைகளையும் முடிவாக நமக்கு உணர்த்த வல்லது ஆழ்மனம். எந்த விஞ்ஞானக் கண்டுபிடிப்பையும், வாழ்வையே திசை திருப்ப வல்ல பேருண்மையையும் ஆழ்மனதின் உதவி இல்லாமல் யாரும் பெற்று விட முடியாது.
சர் வில்லியம் ஆர். ஹேமில்டன் என்பவர் 19 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த கணித மேதை, வானவியல் அறிஞர், மற்றும் இயற்பியல் அறிஞர். அவர் ஒரு முக்கிய கணித ஆராய்ச்சி செய்து கொண்டிருந்த போது என்ன முயன்றும் அவரால் அதற்கு தீர்வு காண முடியவில்லை. 1843 ஆம் ஆண்டு அக்டோபர் 16 ஆம் நாள் அவர் தன் மனைவியுடன் ஒரு பாலத்தின் அருகே நடந்து கொண்டிருந்த போது திடீரென்று பதில் தானாக அவர் மனதில் உதித்தது. அந்தத் தீர்வை மறந்து விடக்கூடும் என்று பயந்து அந்த பாலத்தின் சுவரில் கல்லால் கீறி அந்த சமன்பாட்டை அவர் பதித்தார். அவர் கண்டுபிடித்த க்வார்டெர்னியன்ஸ் என்ற தீர்வு இன்றும் கணிதத் துறையில் மிக முக்கிய விதியாகக் கருதப்படுகிறது. அந்தப் பாலத்தின் சுவரில் இருந்த கீறல் பிற்காலத்தில் மறைந்து விட்டிருந்தாலும் அயர்லாந்து அரசாங்கம் அதே இடத்தில் அந்த தீர்வை ஒரு குறிப்புடன் கல்வெட்டாக இன்றும் வைத்திருக்கிறது.
டாக்டர் தாம்சன் என்ற மனோதத்துவ மேதை "System of Psychology" என்ற நூலை
எழுதத் துவங்கியிருந்த போது அதற்காக நிறைய படித்து குறிப்புகள் எழுதி வைத்திருந்தார். ஆனால் எழுதுகின்ற சமயத்தில் நிறைய விஷயங்கள் கோர்வையாக இல்லாமல் தனித் தனியாக இருந்ததாக அவருக்குத் தோன்றியது. ஒரு விஷயத்தைப் பற்றி எழுதும் போது அது கோர்வையாக வராமல் இப்படி சம்பந்தமில்லாத தனிக் கருத்துகளாக இருந்தால் அது முழுமையாக இருக்காது என்று நினைத்த டாக்டர் தாம்சன் என்ன தான் அதைக் கோர்வைப் படுத்த முயன்றும் முடியாது போகவே அவர் எழுதுவதை சுமார் ஒரு மாதத்திற்கு நிறுத்தியே வைத்திருந்தார். பிறகு ஒரு நாள் எழுதியதை எடுத்துப் படிக்கையில் விடுபட்டதாய் நினைத்த விஷயங்கள் அவர் மனதில் தானாக பளிச்சிட்டன. உடனடியாக அவற்றை எழுதி அந்த நூலை அவர் முடித்தார். இது போன்ற நிகழ்வுகள் பல முறை தனக்கு ஏற்பட்டதாக அவர் கூறுகிறார்.
Synthetic Chemistry-ஐ கண்டுபிடித்த விஞ்ஞானி பெர்த்லாட் அவர்களும் தன் கண்டுபிடிப்புகள் அனைத்தும் ஆராய்ச்சி கூடங்களில் முறையாக சிந்திக்கும் போது வந்தவை அல்ல என்றும் திடீரென்று தானாக வானில் இருந்து வந்தவை போல வந்தவை தான் என்று கூறுகிறார்.
மோசார்ட் என்ற இசை மேதை தன் 35 வருட வாழ்க்கையில் பத்து ஓபரா என்னும் இசை நாடகங்கள், 41 ஸிம்ஃபனி என்னும் விரிவான இசை நாடகங்கள், நூற்றுக் கணக்கான சிறிய இசைச் சித்திரங்கள் உருவாக்கிய மேதை. அவர் தன்னுடைய பெரும்பாலான புதிய இசைப் படைப்புகள் ஒவ்வொன்றும் முழுமையாக தானாக மனதில் தோன்றியவை என்றும், மனதில் கேட்டவற்றை அப்படியே திரும்ப உருவாக்கியது தான் அவர் செய்த வேலை என்றும் கூறுகிறார். நம் கணித மேதை ராமானுஜம் தன்னுடைய எல்லா கணக்குகளுக்கும் விடையை நாமகிரிப் பேட்டை அம்மன் கொண்டு வந்து தருவதாகச் சொல்லி இருக்கிறார்.
இது போல் எத்தனையோ காலத்தை வென்று நின்ற எழுத்துக்களையும், இசையையும், அறிவியல் கண்டுபிடிப்புகளையும் சொல்லிக் கொண்டே போகலாம். அவற்றைத் தங்கள் முயற்சியால் வந்ததென அந்த அறிஞர்களால் சொல்ல முடியவில்லை. தானாக வந்ததாகவும், தாங்கள் நம்பும் இறைவன் கொண்டு வந்து தந்ததாகவும் அவர்கள் சொன்ன போதிலும் அவற்றை அவர்கள் மேல்மனதிற்குத் தந்தது அவர்களுடைய ஆழ்மனமாகவே இருக்க வேண்டும் ஆழ்மன சக்தி ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.
எத்தனையோ முறை ஏதாவது ஒரு பெயர் மறந்து போயோ, ஒரு பொருளை வைத்த இடம் மறந்து போயோ நாம் அனைவருமே மூளையை கசக்கி இருந்திருக்கக் கூடிய தருணங்களை ஒரு கணம் நினைத்துப் பாருங்கள். பிறகு வேறெதோ நாம் செய்து கொண்டிருக்கையில் தானாக அது நம் நினைவில் பளிச்சிடுவதை நாம் அனுபவித்திருக்கிறோம். இது நம் ஆழ்மன செயல்பாடே.
நாம் பல விதங்களில் சிந்தித்தும் விடை கிடைக்காத அல்லது நினைவுக்கு வராத விஷயங்களில் இருந்து சிந்தனையை மேல்மனம் கை விட்டு வேறு விஷயங்களுக்கு நகர்த்தும் போது அந்த பழைய தேடலை ஆழ்மனம் தன் பொறுப்பில் எடுத்துக்கொள்கிறது. அது தன்னிடம் உள்ள தகவல் களஞ்சியத்தில் இருந்து நமது அறிவுக்கெட்டாத முறையில் பிரம்மாண்டமான விதத்தில் விடையைக் கண்டுபிடித்து வேறு விஷயத்தில் ஆழ்ந்திருக்கும் மேல்மனத்திற்கு அனுப்பி வைக்கிறது. நாம் அதை 'திடீர்' என்று வந்ததாக நினைத்து வியக்கிறோம்.
சிறு வயதில் நாம் பூதம் அல்லது தேவதைக் கதைகள் நிறைய படித்திருப்போம். பாவப்பட்ட ஒருவனுக்கு அல்லது ஒருத்திக்கு கொடுமைக்காரர்கள் இரவில் ஏராளமான வேலைகளைத் தந்து மறு நாள் காலையில் அனைத்தையும் முடித்திருக்க வேண்டும் என்று கட்டளையிட்டு விட்டுப் போய் விடுவார்கள். அந்த பாவப்பட்ட ஜீவன் மீது அன்பும், இரக்கமும் கொண்ட பூதமோ, தேவதையோ அந்த வேலைகளைத் தான் எடுத்துக் கொண்டு அனைத்தையும் அசுர வேகத்தில் நேர்த்தியாக செய்து தந்துவிடும் என்பதைப் படித்திருப்போம். உண்மையில் நம் ஆழ்மனம் அது போன்ற ஒரு சக்தி படைத்த தேவதையே.
சிக்கலான ஒரு பிரச்னைக்கு ஒரு தீர்வோ, அல்லது சிக்கலான ஒரு கேள்விக்கு விடையோ அறிய நாம் எந்த விதத்தில் யோசித்தும் நமக்கு பதில் கிடைக்கவில்லையானால் மேலே சொன்ன அறிஞர் பெருமக்கள் தாங்கள் அறியாமலேயே ஆழ்மனதைப் பயன்படுத்தி விடை கண்டு பிடித்தது போல நாமும் ஆழ்மனதின் உதவியை நாடலாம். அது எப்படி என்று பார்ப்போம்.
உங்கள் பிரச்னைக்கோ, கேள்விக்கோ சம்பந்தப்பட்ட அத்தனை தகவல்களையும் ஆழ்ந்து யோசித்துக் கொள்ளுங்கள். அதன் தீர்வு அல்லது விடை உங்களுக்கு மிக முக்கியமானதாக இருக்க வேண்டும். அதை மிக முக்கியமானது என்று நீங்கள் மனப்பூர்வமாக நினைக்க வேண்டும். எல்லா விதங்களிலும் சம்பந்தப்பட்ட விஷயங்களை யோசித்து விட்டு ஆழ்மனதிடம் 'இதைக் கவனி' என்று கட்டளையிடுங்கள். பின் அதை மறந்து விடுங்கள்.
இதைச் செய்யப் பொருத்தமான நேரம் இரவு தூங்குவதற்கு சிறிது நேரம் முன் என்கிறார்கள். மேல்மனம் உறங்க ஆரம்பித்தவுடன் 24 மணி நேரமும் விழித்திருக்கும் ஆழ்மனம் நீங்கள் தந்த அந்த வேலையை, தான் சேகரித்து வைத்திருக்கும் பல்லாயிரம் தகவல்களையும் பல விதங்களைலும் மிக நேர்த்தியாக அலசி மிகச் சிறந்த ஒரு தீர்வையோ, பதிலையோ மறு நாள் உங்களுக்குத் தந்து விடும். ஆரம்பத்தில் நீங்கள் தந்திருக்கும் வேலையின் சிக்கல் தன்மையின் கடுமைக்கேற்ப ஒரிரு நாட்கள் அதிகமாகக் கூட அது எடுத்துக் கொள்ளக் கூடும். ஆனால் இந்த விதத்தில் மிகச் சிறப்பான பதில் கிடைத்தே தீரும் என்பது பலரின் அனுபவம்.
இதில் மூன்று விஷயங்கள் முக்கியம். முதலாவது அது உண்மையாகவே உங்களுக்கு முக்கியமானதாக இருக்க வேண்டும். நீங்கள் அது சம்பந்தமாக நிறைய தேவையான தகவல்களை அலசி இருக்க வேண்டும். (தகவல்கள் என்ற பெயரில் கவலைகள், பயங்களை ஆழ்மனதிற்கு அனுப்பி விடாமல் இருப்பது முக்கியம்). மூன்றாவது ஆழ்மனதிடம் ஒப்படைத்து விட்ட பின் விரைவில் அதனிடம் இருந்து தீர்வு கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பில் உங்களுக்கு அவநம்பிக்கை இருக்கக் கூடாது.
(ஒன்பதாவது அத்தியாயத்தில் மைக்கேல் க்ரிஸ்டன் என்ற பிரபல ஆங்கில சினிமா டைரக்டர் ஸ்பூன்களைப் பார்வையாலேயே மடக்கும் சம்பவங்கள் பற்றிக் குறிப்பிடுகையில் நன்றாக கவனத்தைக் குவித்து விட்டு பிறகு கவனத்தை வேறிடத்திற்குத் திருப்பின பிறகு தான் இந்த சக்தி வேலை செய்கிறது என்பதை வியப்புடன் சொல்லி இருப்பதைக் குறிப்பிட்டிருந்ததைப் படித்திருப்பீர்கள்.
அதற்கும் காரணம் இது தான். மேல்மனம் நன்றாக முயன்று விட்டு பின் அதிலிருந்து கவனத்தை திருப்பி விட்ட பின் ஆழ்மனம் அதைத் தன் பணியாக எடுத்துக் கொண்ட பிறகு தான் சக்தி வேலை செய்ய ஆரம்பிக்கிறது)
இரவு உறங்கப் போகும் நேரத்திற்கு முன் ஓரிரு மணி நேரம் ஆழ்மனம் சம்பந்தப்பட்ட மிக முக்கியமான நேரம். இந்த நேரத்தில் அதிகமாக நாம் எண்ணும் எண்ணங்களே பெரும்பாலும் நம் உறக்கத்தில் ஆழ்மனதால் அதிகம் அலசப்படுகின்றன. அதனால் அந்த நேரத்தில் சண்டை சச்சரவுகள், வாக்குவாதங்கள், துக்ககரமான அல்லது வன்முறை சீரியல்கள் ஆகியவற்றைத்
தவிர்த்து விடுதல் நல்லது. அந்த நேரத்தில் நல்ல புத்தகங்கள் படித்தல், மனதிற்கு இதமான இசை கேட்டல், நமக்குப் பயன்படும் விஷயங்களில் ஈடுபாடுடைய செயல்கள் செய்வது எல்லாம் மிக நல்லது.
முக்கியமாக நம்முடைய இலட்சியங்கள், குறிக்கோள்கள் குறித்து அந்த நேரத்தில் நினைவு படுத்திக் கொள்ளுவதும், அது சம்பந்தமான செயல்களில் அந்த நேரத்தில் ஈடுபடுவதும் நாம் விரைவில் இலக்கை அடைய மிகவும் உதவும்.

ஆழ்மன எண்ணங்களே ஒருவரின் நிஜங்கள்!


- என்.கணேசன்
ழக்கங்கள் உருவாகி பலப்படும் இடம் ஆழ்மனம் தான் என்பதையும் ஆழ்மனதில் பதியும் எண்ணங்கள் எப்படி அதிக சக்தி பெறுகின்றன என்பதையும் பார்த்தோம். அது மட்டுமல்ல ஒரு மனிதனின் வெற்றி - தோல்வியையும், அவன் பலங்கள், பலவீனங்களையும் தீர்மானிப்பது அவன் ஆழ்மன நிலையே தான். ஏன் ஒருவர் இன்று எப்படி இந்த உலகில் வாழ்கிறார் என்பதைத் தீர்மானிப்பதும் ஆழ்மனமே.
இந்தத் தலைப்பைப் பற்றி எழுதுவதால் தான் எல்லாமே ஆழ்மனம் என்று சொல்வதாக வாசகர்கள் நினைக்க வேண்டாம். இது நூறு சதவீதம் உண்மை. சுமார் 250 வருடங்களுக்கு முன்னால் மெஸ்மர் (ஆழ்மனசக்தி 18 ஆம் அத்தியாயத்தில் இவர் பற்றி விவரமாய் படித்தோம்) ஹிப்னாடிசம் மூலம் மனிதனின் தீராத நோய்களைக் கூட தீர்க்க முடியும் என்று கண்டு பிடித்தார். ஹிப்னாடிசம் என்பது ஆழ்மனதை வசப்படுத்துவது தான். ஆழ்மனதில் எதை மனிதன் நம்புகிறானோ அதுவே
அவனுக்கு உண்மையாகிறது என்பதைப் பின்னால் நடைபெற்ற பல விஞ்ஞான ஆராய்ச்சிகள் உறுதிப்படுத்தின.
1955 ஆம் ஆண்டு இங்கிலாந்து அரசாங்கமும், 1958 ஆம் ஆண்டு அமெரிக்க அரசாங்கமும் ஹிப்னாடிசத்தை மருத்துவத்திற்குப் பயன்படுத்த அங்கீகாரம் கொடுத்த பின்னர் உலகெங்கும் பல நாடுகளிலும் அதிகாரபூர்வமாகவே மருத்துவ சிகிச்சைகளுக்கும், ஆராய்ச்சிகளுக்கும் ஹிப்னாடிசம் அதிகமாகவே பயன்படுத்தப்பட்டது.
ஹிப்னாடிசம் செய்து ஏர்கண்டிசன் அறையில் இருக்கும் ஒருவரிடம் நீங்கள் சஹாரா பாலைவனத்தில் இருக்கிறீர்கள், உங்களுக்கு வெயில் தாங்க முடியவில்லை என்று சொன்னால் அவருக்கு உடனடியாக வியர்வை கொட்ட ஆரம்பித்து விடும். சாதாரண தரையில் நின்று கொண்டிருக்கும் ஒருவரிடம் நீங்கள் கடலில் படகில் சென்று கொண்டிருக்கிறீர்கள், இப்போது உங்கள் படகு அலைகளில் சிக்கி தத்தளிக்கிறது என்று சொன்னால் அவர் நிஜமாகவே அலையில் சிக்கிய படகில்
இருந்தால் எப்படி தள்ளாடுவாரோ அப்படியே ஆட ஆரம்பித்து விடுவார். இது போன்ற ஆராய்ச்சிகளில் நிரூபிக்கப்பட்ட சம்பவங்கள் ஏராளம்.
அவை அனைத்தையும் எழுதுவதானால் அதற்கே பல தொகுப்பு நூல்கள் எழுத வேண்டி இருக்கும். எனவே உதாரணத்துக்கு நம் தலைப்புக்குத் தேவையான பரிசோதனை ஒன்றை மட்டும் பார்த்து விட்டு மேலே செல்வோம். அமெரிக்காவின் ஸ்டான்ஃபோர்டு பல்கலைகழகத்தில் சென்ற நூற்றாண்டில் ஹிப்னாடிசம் குறித்து எர்னெஸ்ட் ஹில்கார்டு (Ernest Hilgard) 1970களில் செய்த சோதனை ஒன்றில் நன்றாகக் காது கேட்கும் சக்தி உள்ள ஒரு குருடனை ஹிப்னாடிசத்திற்கு உள்ளாக்கி 'உன்
காதுகள் கேட்கும் சக்தியை இழந்து விட்டன' என்று அவன் ஆழ்மனதை நம்ப வைத்தார். பின் அவனிடம் கேட்ட எந்த கேள்விகளுக்கும் பதில் இல்லை. எத்தனை பெரிய சத்தத்தை உண்டாக்கினாலும் அவனிடம் எந்த பாதிப்பும் இல்லை. காதுக்கு அருகே ஏற்படுத்தப்பட்ட சத்தங்கள் கூட அவனை எதுவும் செய்யவில்லை. டமாரச் செவிடு என்பார்களே அது போலவே ஹிப்னாடிசத்தில் இருந்து வெளிவரும் வரை அவன் இருந்தான்.
அவர் செய்த இன்னொரு ஆராய்ச்சி ஐஸ் தண்ணீரில் கைகளை வைப்பதைப் பற்றியது. நல்ல தெளிவு நிலையில் இருக்கும் ஒருவரால் சில வினாடிகளுக்கு மேல் அதில் கைகளை வைத்து இருக்க முடியவில்லை. வலி மிகுதியால் உடனடியாக அவர்கள் கைகளை எடுத்துக் கொண்டார்கள். ஆனால் ஹிப்னாடிசத்தில் சிலரை ஈடுபடுத்தி அவர்களிடம் அது சாதாரண தண்ணீர் என்று அவர்களை கைகளை வைக்கச் சொன்ன போது அவர்களால் பல நிமிடங்கள் எந்த பாதிப்பும் இல்லாமல் கைகளை வைத்திருக்க முடிந்தது.
இதிலிருந்து மிகப்பெரிய உண்மை ஒன்றை நாம் புரிந்து கொள்ளலாம். ஒவ்வொரு மனிதருக்கும் ஆழ்மனம் நம்புவது தான் நிஜம். அதன்படியே அவர்கள் உணர்கிறார்கள். அதன்படியே அவர்கள் பாதிக்கப்படுகிறார்கள். அது பொய்யான தகவலாகவே இருந்தாலும் உண்மை என்று ஆழ்மனம் எடுத்துக் கொண்டால் அதுவே அவர்களுக்கு உண்மையாகிறது. அதன்படியே அவர்கள் அனுபவம் அமைகிறது.
துரதிர்ஷ்டவசமாக இது ஆராய்ச்சிகூடத்தில் ஒரு ஹிப்னாடிஸ்ட் மூலமாகத் தான் செய்யப்படுகிறது என்ற நிலைமை இல்லை. தினசரி வாழ்க்கையில் இது சர்வசகஜமாக நடக்கிறது. ஒரு வேடிக்கைக் கதையை நீங்கள் படித்திருக்கலாம். நன்றாக ஆரோக்கியமாக உள்ள ஒருவன் காலையில் உற்சாகமாக வீட்டை விட்டுக் கிளம்புகிறான். முன்பே பேசி வைத்துக் கொண்டிருந்த அவன் நண்பர்கள் அவன் போகிற பாதையில் ஒவ்வொருவராகக் கிடைக்கிறார்கள். முதலாமவன் "என்ன ஆயிற்று. ஏன் என்னவோ போலிருக்கிறாய்?" என்று கேட்கிறான். நம் ஆள் "இல்லையே
நன்றாகத் தானே இருக்கிறேன்," என்கிறான். சிறிது தூரம் கழித்து இன்னொரு நண்பன் அவனிடம் "என்ன உடம்பு சரியில்லையா?" என்று கேட்கிறான். இப்படியே ஒவ்வொருவரும் அவன் உடல்நிலை பற்றி மோசமாகவே கேட்க நம் ஆள் நிஜமாகவே நோய்வாய்ப்பட்டு படுத்து விடுகிறான். இது கதை ஆனாலும் நிஜமாக நம் ஒவ்வொருவர் வாழ்க்கையிலும் நடக்கக் கூடியதே.
நாம் மற்றவர்கள் கருத்து மூலமாகவும், நம் தவறான புரிந்து கொள்ளல் மூலமாகவும் நம் ஆழ்மனதிற்குத் தவறான அபிப்பிராயங்களை உண்மை என அனுப்பினால் அதுவே நம் வாழ்வில் உண்மையாகி விடும். "நான் அதிர்ஷ்டம் இல்லாதவன். எனக்கு நல்லது எதுவும் அமையாது" என்று ஆழ்மனதில் பதித்து வைத்திருக்கும் மனிதர்கள் துரதிர்ஷ்டசாலிகளாகவே கடைசி வரை இருந்து விடுகிறார்கள். "நான் பலவீனமானவன்", "என்னால் இது முடியாது", "எனக்கு ஆரோக்கியம் சரியில்லை" என்ற ஆழ்மனப்பதிவுகள் பலவீனர்களையும், இயலாதவர்களையும், நோயாளிகளையுமே கண்டிப்பாக உருவாக்கும். இதற்கு உதாரணங்களைப் பார்க்க ஆராய்ச்சிக் கட்டுரைகள் எல்லாம் படிக்க வேண்டியதில்லை. நம்மைச் சுற்றிலும் பார்த்தால் போதும், நூற்றுக் கணக்கான உதாரணங்களை நாமாகவே அறிந்து கொள்ளலாம். அதே போல் வெற்றியாளர்களைக் கூர்ந்து பார்த்தால் அவர்கள் ஆழ்மனப்பதிவுகள் தோல்வியாளர்கள் ஆழ்மனப்பதிவுகளுக்கு நேர் எதிராக இருக்கும்.
நாம் பல சமயங்களில் நம்மை அறியாமலேயே சுயமாக நம்மை நாமே ஹிப்னாடிசம் செய்து கொண்டு கருத்துகளைப் பதிவு செய்து கொண்டு விடுகிறோம்.. அது போல சில சமயங்களில் நாம் மிகவும் நம்பும் அல்லது மதிக்கும் மனிதர்களை நம்மை ஹிப்னாடிசம் செய்து கருத்துகளை நம் மனதில் பதிக்க அனுமதித்து விடுகிறோம். அந்தக் கருத்துகள் உயர்ந்ததாகவும், பலம் வாய்ந்ததாகவும் இருக்கும் போது நாம் சாதனையாளர்கள் ஆகிறோம். மாறாக அவை தாழ்ந்ததாகவும், பலமிழந்தும் இருக்கிற போது தோல்வியாளர்களாகவும் மாறி விடுகிறோம்.
என் உறவுக்காரப் பெண்மணி ஒருவர் அதிகமாக சிரிக்க மாட்டார். அப்படி யாராவது மிக நகைச்சுவையாக பேசியதைக் கேட்டு சிரிக்க நேர்ந்தால் கூட பயத்துடன் சொல்வார். "எவ்வளவு சிரிக்கிறோமோ, அந்த அளவு அழவும் நேரிடும்". அது போலவே தான் அவருக்கு எல்லாம் அமைவதை நான் கண்கூடாகப் பார்த்திருக்கிறேன். அவருடைய நம்பிக்கைக்கேற்றபடியே ஆழ்மனம் நிகழ்வுகளை அவர் வாழ்க்கையில் ஏற்படுத்தி வந்தது. அப்படி ஒரு பைத்தியக்காரத் தனமான பலமான அபிப்பிராயம் ஒரு வாழ்க்கையின் மக்ழ்ச்சியையே குலைத்த விதத்தை நான்
நேரடியாகப் பார்த்திருக்கிறேன்.
நாம் முன்பே பார்த்தது போல ஆழ்மனம் எதையும் மேல்மனம் தந்தபடியே எடுத்துக் கொள்கிறது. தினந்தோறும் நூற்றுக் கணக்கான தகவல்களை மேல் மனம் தந்தபடி இருக்க அவற்றை ஆழ்மனம் மனதில் பதித்துக் கொண்டும், ஒழுங்கு படுத்திக் கொண்டும், புதுப்பித்துக் கொண்டும் இருக்கிறது. ஓரிரு எண்ணங்கள் தவறாகவும், பலவீனமாகவும் உள்ளே செல்வதில் பெரிய பாதிப்பு இருக்காது. தொடர்ந்து அதே போல் எண்ணங்கள் ஆழ்மனதில் பதிய ஆரம்பித்தால் தான் பிரச்னை.
எனவே மேல்மனம் எடுத்து உள்ளே அனுப்பும் தகவல்களில் மிக கவனமாக இருங்கள். மேல்மனம் அனுப்பும் தகவல்கள் தொடர்ந்து பயம், பலவீனம், கவலை, தாழ்வு மனப்பான்மை கொண்ட எண்ணங்களாக இருந்தால் அவை பலப்பட்டு அப்படியே பதிவாகி அதை மெய்ப்பிக்கும் நிகழ்வுகளாக உங்கள் வாழ்வில் கண்டிப்பாக வரும். அதற்கு எதிர்மாறாக தைரியம், வலிமை, தன்னம்பிக்கை, மகிழ்ச்சி, உற்சாகம் போன்ற தகவல்களாக மேல்மனம் உள்ளே தொடர்ந்து அனுப்பினால் அதுவும் அப்படியே உங்கள் நிஜ வாழ்வில் பிரதிபலிக்கும் என்பது உறுதி.
இப்போது ஒரு கேள்வி எல்லோர் மனதிலும் எழலாம். ஹிப்னாடிசம் மூலமாக யாரையும் எப்படியும் மாற்ற முடியுமா? அதற்கு ஒரு நிகழ்வைச் சொல்லலாம். ஒரு ஆராய்ச்சியாளர் ஒரு பெண்ணை ஹிப்னாடிசம் செய்து பல வியக்க வைக்கும் அற்புதங்களைச் செய்து காட்டினார். கடைசியில் அந்தப் பெண்ணை ஆடைகளைக் களையச் சொன்ன போது மட்டும் அந்தப் பெண் அப்படிச் செய்யாமல் பேசாமல் நின்றாள். "ஏன்?" என்று கேட்ட போது "அது தவறு" என்ற பதில் வந்தது.
நம் ஆழ்மனதில் முன்பே ஆழமாகப் பதிந்துள்ள நமது ஒழுக்கத்திற்கோ, நம்பிக்கைகளுக்கோ, மதிப்பீடுகளுக்கோ எதிராக யாரும் நம்மை ஹிப்னாடிசம் மூலமாக செயல்படுத்தி விட முடியாது. இதை எத்தனையோ சோதனைகள் நிரூபித்துள்ளன.
இதையெல்லாம் வைத்து யோசித்துப் பார்த்தால் நம் இன்றைய நிலைக்கு மிகப் பெரிய பொறுப்பு வகிப்பது நம் ஆழ்மனமே. இப்போதைய வாழ்க்கை நிலை போதாது என்று தோன்றினால் நாம் ஆழ்மனப் பதிவுகளை மேம்படுத்தி புதுப்பித்துக் கொள்வதே வழி.
ஆழ்மன சக்தி பெறத் தடையாக இருக்கும் குணங்களில் மிக முக்கியமானது அவநம்பிக்கை என்று முன்பு சொன்னதன் காரணம் இப்போது மேலும் நன்றாக விளங்கி இருக்கும் என்று நம்புகிறேன். இந்த சக்திகள் எல்லாம் நமக்கு வராது என்று ஆழ்மனதில் அழுத்தமான எண்ணம் இருந்தால் அந்த சக்திகள் கண்டிப்பாக கைகூட வாய்ப்பே இல்லை. அது போல் ஆழ்மன சக்திகள் வகைகளில் எதெல்லாம் சாத்தியம் என்று நீங்கள் உறுதியாக நம்புகிறீர்களோ அதையெல்லாம் கண்டிப்பாக நீங்கள் வெளிப்படுத்த முடியும்.
பைபிளில் இந்த உண்மையை விளக்கும் ஒரு சம்பவம் அழகாக சொல்லப்பட்டு இருக்கிறது. "இயேசு கிறிஸ்துவிடம் குருடர்கள் வந்தார்கள். அவர்களிடம் இயேசு கேட்டார். "என்னால் உங்களைக் குணப்படுத்த முடியும் என்று நீங்கள் நம்புகிறீர்களா?" அவர்கள் கூறினார்கள். "ஆமாம் பிரபு" இயேசு அவர்களுடைய கண்களைத் தொட்டு கூறினார். "உங்கள் நம்பிக்கையின் படியே
உங்களுக்கு ஆகக் கடவதாக!". அவர்கள் கண்கள் திறந்தன (பார்வை பெற்றார்கள்)". (மாத்யூ 9:28:30) இங்கு இயேசு பிரான் அவர்களுடைய ஆழ்மன நம்பிக்கையைத் தான் குறிப்பிடுகிறார். அந்த நம்பிக்கையின் படியே அவர்கள் பார்வை பெற்றனர் என்பதைக் கவனிக்கவும்.
ஆழ்மன சக்திகளுக்கு எதிரான பண்புகளோ, நம்பிக்கைகளோ உங்கள் ஆழ்மனதில் இருக்கின்றனவா என்று நீங்கள் கணக்கெடுக்க வேண்டிய நேரம் இது. அப்படி இருந்தால் அதற்கு எதிர்மாறான பண்புகளையும், நம்பிக்கைகளையும் சிறிது சிறிதாக வளர்த்துக் கொள்ளுங்கள். அதற்குத் தேவையான நூல்களைப் படியுங்கள். தேர்ச்சி பெற்ற அறிஞர்களின் அனுபவங்களைப் படியுங்கள். அவர்களது பேச்சுகளைக் கேளுங்கள். வெற்றியாளர்களுடன் தொடர்பு வையுங்கள். சிறிது சிறிதாக உங்கள் ஆழ்மனம் பழைய பதிவுகளை மாற்றி புதிய தகவல்களைப் பதித்துக் கொள்ளும்.
இனி ஆழ்மனதைப் பயன்படுத்தி பிரமிக்க வைக்கும் வேலைகள் வாங்குவது எப்படி என்று பார்ப்போம்.

தீயப் பழக்கங்களை கைவிட ஆழ்மனப் பயிற்சி


 என்.கணேசன்
ஆழ்மனதின் அற்புத சக்திகளை ஆரம்பத்தில் இருந்து விளக்கமாகப் பார்த்தோம். அந்த சக்தியை அடைய உதவும் பயிற்சிகளை அறிந்து வரும் இந்த வேளையில் ஒரு மிக முக்கியமான உண்மையை நாம் உணர வேண்டும்.
ஆழ்மனம் மிக மிக சக்தி வாய்ந்தது என்பதில் கடுகளவும் சந்தேகமில்லை. ஆனால், அது நன்மை தரும் சக்தியாகவே இருக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை. அது தீமையின் ஊற்றாகக் கூட இருக்கலாம். அது வரமாகலாம். சாபமுமாகலாம். அது எப்படி என்பதையும் அதை சாபமாக்கிக் கொள்ளாமல் வரமாக்குவது என்பதற்கான பயிற்சியையும் இப்போது பார்க்கலாம்.
மேல்மனம் மூலமாகத் தான் ஆழ்மனம் தகவல்களைப் பெறுகிறது. அது மேல்மனம் எப்படிச் சொல்கிறதோ அப்படியே எடுத்துக் கொண்டு நினைவு வைத்துக் கொள்கிறது. நல்லது, கெட்டது, இனிமையானது, சகிக்க முடியாதது என்று எப்படியெல்லாம் மேல்மனம் அடைமொழிகளோடு செய்திகளை நினைக்கிறதோ அதே அடைமொழிகளோடு அந்த தகவல்களை சேமித்து வைத்துக் கொள்கிறது. ஆழ்மனம் மிக மிக சக்தி வாய்ந்ததாக இருப்பினும் அது தனியாக சிந்தித்தறியும் வேலையை செய்வதில்லை.
ஆழ்மனம் தான் நம் பழக்க வழக்கங்கள் பதிந்திருக்கும் இடம். நம்மை உண்மையாக இயக்குவது அது தான். கவனத்தோடு சிந்தித்து செயல்படும் போது மட்டுமே நாம் மேல்மன ஆதிக்கத்தில் இருக்கிறோம். மற்ற சமயங்களில் நாம் ஆழ்மன தகவல்கள் படியே இயக்கப்படுகிறோம்.
உதாரணத்துக்கு ஒரு வாகனத்தை ஓட்டக் கற்றுக் கொள்ளும் போது மேல் மனம் கவனமாக இருந்து ஒவ்வொன்றையும் செய்கிறது. அந்தத் தகவல்கள் ஆழ்மனதில் சேகரிக்கப்படுகிறது. ஆழ்மனம் அதைப் பழக்கமாக்கிக் கொள்கிறது. பின் நாம் மேல்மனதில் எத்தனையோ எண்ணங்கள் ஓடிக் கொண்டிருந்தாலும் நம்மையறியாமலேயே வாகனத்தை ஓட்ட ஆரம்பிக்கிறோம். இனி வாழ்நாள் பூராவும் வாகனம் ஓட்டும் விதம் குறித்து மேல்மனம் கவலைப்பட வேண்டியதே இல்லை.
இது போன்ற வேலைகளை அற்புதமாக ஆழ்மனம் எடுத்துக் கொண்டு விடுவதால் தான் நமக்கு வாழ்க்கை சுலபமாகிறது. இல்லாவிட்டால் நடப்பது, வண்டி ஓட்டுவது, சட்டைக்குப் பட்டன்கள் போட்டுக் கொள்வது போன்ற அன்றாட வேலைகளைக் கூட முதல் முதலில் செய்வது போலவே ஒவ்வொரு முறையும் நாம் சிரமத்துடன் செய்ய வேண்டி இருக்கும். எனவே இது போன்ற தேவையான பழக்கங்களும், வேறு நல்ல பழக்கங்களும் அமைய உதவும் போது ஆழ்மனம் நமக்கு வரப்பிரசாதமே.
தகவல்களை உள்ளே அனுப்பும் வேலையை மட்டுமே மேல்மனம் முக்கியமாகச் செய்கிறது. ஆழ்மனம் அது சொல்கிற படியே எல்லாவற்றையும் எடுத்துக் கொள்வதால் அனுப்பும் செய்திகளின் நம்பகத்தன்மையை உறுதிப்படுத்திக் கொள்ளும் பெரும் பொறுப்பு மேல்மனத்திற்கு உண்டு. ஆழ்மனம் வரமாவதும் சாபமாவதும் மேல்மனதின் இந்தத் திறனைப் பொறுத்தே அமையும். மேல்மனம் அந்தத் திறன் பெற்றிராமல் இருந்தால் மற்றவர்கள் சொல்வதையே அல்லது தோற்றத்தில் தெரிவதையே உண்மை என்று எடுத்துக் கொண்டுவிடும். ஆழ்மனமும் அதை அப்படியே பதிவு செய்து கொள்ளும். எடுத்துக் கொள்வது தவறான செய்திகளும், நம்பிக்கைகளுமாக இருந்தால் பின் ஆழ்மனம் மூலமாக தீமைகளே விளையும் என்பதில் சந்தேகமில்லை.
எத்தனையோ கொடுமையான செயல்களைச் சிறிதும் உறுத்தல் இன்றி செய்ய சில தீவிரவாதிகளாலும், கொடியவர்களாலும் எப்படி முடிகிறது என்ற கேள்விக்கு இங்கு தான் பதில் கிடைக்கிறது.
மதம் என்ற பெயரிலும், கொள்கை என்ற பெயரிலும் இளமையிலேயே மூளைச்சலவை செய்து தவறான, வெறுப்பு விதைகளை நியாயமானவைகளாக ஆழ்மனதில் விதைத்து இப்படித் தான் சமூக விரோதிகள் தீவிரவாதிகளை உருவாக்குகிறார்கள்.
ஆழ்மனம் என்ற அரண்மனைக்கு மேல் மனம் தான் வாட்ச்மேன். யாரை உள்ளே விடுவது, யாரை உள்ளே விடக்கூடாது என்பதை அது தான் தீர்மானிக்க வேண்டும். அது பொறுப்பற்று இருந்தால், கவனக்குறைவோடு இருந்தால் யார் யாரோ உள்ளே நுழைந்து அரண்மனைச் சொத்துகள் சூறையாடப்பட்டு தீய வழிக்குப் பயன்படுத்தப்படும். உள்ளே விட்ட எதையும் வெளியேற்றுவது மேல்மனதிற்கு அவ்வளவு சுலபமல்ல.
நம்முடைய எல்லா தீய பழக்கங்களும் இப்படி உருவானவை தான். அதில் இன்பம் கிடைக்கிறது என்ற செய்தியை உள்ளே அனுப்பி அதில் ஆரம்பத்தில் ஈடுபடுகிறோம். அதில் நமக்குக் கட்டுப்பாடும் இருப்பதாக ஒரு தோன்றல் கூட ஆரம்பத்தில் சிலருக்கு இருக்கும். எப்போது வேண்டுமானாலும் நிறுத்திக் கொள்ளலாம் என்றும் அவர்கள் எண்ணுவதுண்டு.
ஆனால், ஆழ்மனதில் பதிந்து அது பழக்கமாக மாறி விட்ட பின்னர் அதைக் களைவது கிட்டத்தட்ட முடியாத காரியமே. இது போன்ற தீய பழக்கங்களை அமைத்துக் கொண்டு நாம் கஷ்டப்படும் போது ஆழ்மனம் ஒரு சாபக்கேடே.
'நாளை முதல் குடிக்க மாட்டேன்' என்று ஒரு குடிகாரன் சபதம் எடுத்துக் கொண்டு மறு நாள் மறுபடி போதையுடன் வருவதைப் பார்த்து பலரும் கிண்டல் செய்கிறோம். ஆனால், அந்தக் குடிகாரன் அந்த சபதம் எடுக்கையில் உண்மையான ஆர்வத்துடன் இருந்திருக்கக் கூடும். மறுநாள் அந்த சந்தர்ப்பம் வரும் போது ஆழ்மனம் அந்த செயலுடன் மகிழ்ச்சியைப் பிணைத்து வைத்து இருப்பதால் குடிக்காமல் இருப்பது அந்த குடிகாரனுக்கு முடியாமல் போகிறது.
நல்ல புத்தகங்களைப் படிக்கையிலும், பெரியோர் பேச்சுகளைக் கேட்கையிலும் அந்த கணத்தில் நல்ல முறையில் எதிர்காலத்தில் இருந்து விட நம்மில் பலருக்கும் தோன்றுவதுண்டு. 'இனி மேல் கோபப்பட மாட்டேன்', 'இனி மேல் தவறான வழிகளில் ஈடுபட மாட்டேன்' என்றெல்லாம் நாம் உறுதியுடன் நினைப்பதுண்டு. ஆனால், மறுநாளே நாம் பழைய படியே நடந்து கொள்வதற்குக் காரணமும் ஆழ்மனமே. முதலிலேயே பதித்து வைத்திருந்த தகவல்களையும், நம்பிக்கைகளையும் வேரோடு பிடுங்கி எறிகிற வரை நாம் எந்த விதத்திலும் மாறி விடப் போவதில்லை.
எனவே தவறான பழக்கங்களில் ஈடுபடும் முன்பே எச்சரிக்கையாக இருங்கள். உங்கள் மேல்மனம் விழிப்புணர்வோடு இருந்தால் அந்த தவறான விதைகளையே உள்ளே விடாமல் தடுப்பது மிக எளிதான விஷயம். விதைக்காமலேயே இருந்தால், அறுக்கவும் தேவை இல்லை. பின் வேரோடு பிடுங்கப் போராடவும் அவசியம் இல்லை.
சரி, நாம் ஒரு முறை தவறாக பழகி விட்ட எதிலிருந்தும் விடுபட முடியாதா, தீய பழக்கங்களைக் களைய முடியாதா என்றால், கஷ்டமானாலும் முடியும் என்பது தான் நல்ல செய்தி. எப்படி என்பதைப் பார்ப்போம்.
முதலில் அமைதியாக ஓரிடத்தில் அமருங்கள். நாம் முன்பு பார்த்த மூச்சு சீராகும் பயிற்சியையும், ஏதாவது ஒரு தியானத்தையும் செய்து அமைதியான மனநிலையில் இருங்கள்.
பிறகு, முதலில் நாம் நம் ஆழ்மனதில் பதிய வைத்திருந்த தவறான செய்திகளுக்கு எதிர்மாறான நல்ல, உணர்வு பூர்வமான செய்திகளை ஆழ்மனதிற்கு அனுப்ப வேண்டும். அந்தப் பழக்கத்தினால் ஏற்படும் தீய விளைவுகளை, அதனால் நமக்கு ஏற்படும் இழப்புகளை மிகவும் விவரமாக மனதில் திரும்பத் திரும்ப எண்ணுங்கள். அந்தக் கஷ்டங்களை எல்லாம் அந்த பழக்கத்தோடு இணைத்துப் பாருங்கள். அந்தப் பழக்கத்தால் கஷ்டப்பட்ட நிகழ்ச்சிகளை உங்கள் மனதில் நிதானமாக ஓட விடுங்கள். உங்கள் பழக்கத்தால் நீங்கள் மிகவும் நேசிக்கும் மனிதர்கள் அடையும் துன்பங்களையும் படமாக மனதில் ஓட விடுங்கள். மனம் அதைச் செய்ய மறுத்து முரண்டு பிடிக்கும். ஆனாலும் உறுதியாக அதைச் செய்யுங்கள். உண்மையாக நேர்ந்தவற்றை அப்படி சினிமா பார்ப்பது போல் கசப்பாக இருப்பினும் மனதில் ஓட விடும் போது அதன் தாக்கம் மனதில் விரைவில் ஆழப்படும்.
அடுத்ததாக, அந்தப் பழக்கம் மட்டும் இல்லை என்றால் உங்களுக்கும் உங்களைச் சேர்ந்தவர்களுக்கும் ஏற்படும் மகிழ்ச்சியையும், மேன்மையையும் ஆழமாக சிந்தியுங்கள். அந்தப் பழக்கத்திலிருந்து நீங்குவதுடன் அதையெல்லாம் இணைத்து மனதில் பதியுங்கள். சென்ற அத்தியாயத்தில் சொல்லப்பட்டது போல மனதை ஒருமுனைப்படுத்தி இப்படி இரண்டு விதமாகவும் ஆழமாக சிந்தித்து ஆழ்மனதில் பதிய ஆரம்பியுங்கள்.
இத்தனை நாட்கள் அந்தப் பழக்கத்துடன் சுகத்தையும், அதை விடுவதுடன் அசௌகரியத்தையும் இணைத்து பதிய வைத்திருந்த ஆழ்மனம் இந்தப் புதிய நேர்மாறான செய்தியை உள்ளே பதித்துக் கொள்ளத் துவங்கும். அப்படி புதிய செய்தி ஆழமாகப் பதியும் வரை இதைத் தொடர்ந்து செய்யுங்கள். அத்துடன் அந்த பழக்கத்திலிருந்து விடுபட்டு முழுக் கட்டுப்பாட்டுடன் நீங்கள் இருப்பது போலவும், அதனால் ஏற்படும் நல்ல விளைவுகளாக நீங்களும், உங்களை சார்ந்தவர்களும் மகிழ்ச்சியாக இருப்பது போல் ஒரு கற்பனைக் காட்சியையும் மனதில் முடிந்த வரை தத்ரூபமாக எண்ணுங்கள்.
இந்த பயிற்சி காலம் வரை அந்தப் பழக்கத்தில் ஈடுபடாமல் இருக்க உங்களுக்கு உண்மையான ஆர்வமும், மன உறுதியும் தேவை. அது மட்டும் முடிந்தால் சில நாட்களிலேயே அந்த தீய பழக்கத்திலிருந்து சுலபமாக விடுதலை பெற்று விடலாம். (மனவியல் அறிஞர்கள் இது போன்ற புதிய பழக்கங்கள் நம்மிடம் வெற்றிகரமாக நிலைத்து நிலைக்க துவக்கத்தில் 21 நாட்கள் விடாமல் தொடர்ந்து பயிற்சி செய்தல் அவசியம் என்கிறார்கள்.)
எத்தனை ஆண்டுகளாக உங்களிடம் இருந்தாலும் சரி தீய பழக்கங்களையும், பலவீனமான குணாதிசயங்களையும் இந்த முறையில் நீங்கள் உங்களிடமிருந்து விலக்கி விடலாம்.

மனதை ஒருமுனைப்படுத்துங்கள்


- என்.கணேசன்
நீங்கள் எஜமானர், உடலும், மனமும் உங்கள் கருவிகள் என்பதை உணர்ந்து அந்த எண்ணத்தை மனதில் வேரூன்றச் செய்வதன் முக்கியத்துவத்தைப் பார்த்தோம். அடுத்த கட்டமாக அந்தக் கருவிகளை உங்கள் விருப்பத்துக்கேற்ப பயன்படுத்த முடிவது தான் உங்கள் எஜமானத்துவத்துக்கு அத்தாட்சி என்பதை உணருங்கள்.
உடலை முறையாகப் பயன்படுத்தி ஆரோக்கியமாக வைத்திருப்பது மிக முக்கியம். அது பழுதடைந்து விட்டால் மனதில் உடலைத் தவிர்த்து வேறு எந்த எண்ணமும் பலமாக எழ வாய்ப்பு குறைவு.
உதாரணத்துக்கு, கடுமையான தலைவலியோ, பல்வலியோ, வேறு பெரிய உபாதைகளோ இருக்கும் போது வேறு எதைப் பற்றியாவது சீரியசாக எண்ணி செயல்பட முடிகிறதா என்று பாருங்கள். அந்த உபாதைகள் சரியாகும் வரை அது முடியாது. எனவே, உடல் பாதிக்கப்படும் போது மனமும் நாம் நினைத்தபடி இயங்க மறுக்கிறது என்பதால் இரண்டுமே நமக்கு எண்ணியபடி பயன்படாமல் போகின்றன. எனவே உடலை நமக்கு இடைஞ்சல் தராத அளவுக்காவது நல்லபடி வைத்துக் கொள்வது ஆழ்மன சக்திகளை அடைய விரும்புவோருக்கு மிக முக்கியம்.
அடுத்ததாக மனம். சூரிய ஒளியை லென்ஸ் மூலமாக காகிதத்தின் ஒரு புள்ளியில் குவிக்கும் போது அந்தக் காகிதம் பற்றி எரிவதை பெரும்போலோர் சிறு வயதில் செய்து பார்த்திருப்போம். மனம் என்னும் கருவி சக்தி வாய்ந்ததாக மாறுவது நாம் விரும்பும் விதத்தில் அதை ஒருமுனைப்படுத்தும் போது. மனம் அதற்குப் பிடித்த செயலில் ஒருமுனைப்படுவது பெரிய விஷயமல்ல.
பிடித்த சினிமா பார்க்கும் போது, நாவல் படிக்கும் போது, இசையைக் கேட்கும் போது எல்லாம் மனம் தானாக ஒருமுனைப்படும். பிடித்த அந்தக் காரியம் முடிந்த பிறகு தான் மனம் வேறு விஷயத்திற்கு நகரும். அப்படி பிடித்த விஷயத்தில் தானாக ஒருமைப்பட முடிந்த மனத்தை நம் கட்டளைப்படி நாம் சொன்ன விஷயத்தில் ஒருமைப்படுத்த முடிவது ஆழ்மன சக்திகளை அடைய விரும்புவோர் பெற வேண்டிய அடுத்த பயிற்சி.
ஏதாவது ஒரு சாதாரண பொருளை எடுத்துக் கொள்ளுங்கள். அது நீங்கள் தினம் பார்க்கக்கூடிய பொருளாக இருக்கட்டும். உதாரணத்துக்கு பென்சிலை எடுத்துக் கொள்வோம். இனி அடுத்த சில நிமிடங்களுக்கு பென்சிலைத் தவிர நீங்கள் வேறு எதையும் நினைக்காமல் பென்சிலைப் பற்றியே சிந்தியுங்கள். உங்கள் முழுக் கவனமும் அதிலேயே இருக்கட்டும். சில வினாடிகளுக்கு மேல் அதில் கவனத்தைக் குவிப்பது ஆரம்பத்தில் முடியாத செயல். மனம் பென்சிலில் கவனம் வைக்க என்ன இருக்கிறது என்று சொல்லி சுவாரசியமான மற்றவற்றுக்குச் செல்ல அலைபாயும்.
ஆனால், மனதை திரும்பவும் பென்சிலுக்கே கொண்டு வாருங்கள். அதன் உருவம், நிறம், அளவு, உபயோகங்கள், என்று மனம் பென்சிலை சார்ந்த, பென்சிலை மையமாகக் கொண்ட விஷயங்களை மட்டுமே சிந்தியுங்கள். சில வினாடிகளில் மனம் இதைப் பற்றி முழுவதும் நான் சிந்தித்து முடித்து விட்டாயிற்று. இனி சிந்திக்க வேறொன்றும் இல்லை என்று சொல்லும். ஆனாலும் விடாமல் பென்சிலுக்கு மனதைக் கொண்டு வாருங்கள். உங்கள் முழுக் கவனமும் பென்சிலைப் பற்றியதாக, பென்சிலிலிலேயே இருக்கட்டும். ஓரளவு மனம் ஒருமுனைப்பட ஆரம்பித்த பின் பயிற்சி நேரத்தை ஒவ்வொரு நாளும் சிறிது சிறிதாகக் கூட்டிக் கொண்டே வாருங்கள். புதிது புதிதாக பென்சிலைப் பற்றிய அதிக விவரங்களை அறிய ஆரம்பிப்பீர்கள்.
கவனிக்கும் திறனின் முக்கியத்துவத்துவம் அறிய ஒரு நிகழ்வைச் சொல்லலாம். தாவரம், விலங்கு முதலான உயிரின ஆராய்ச்சியாளரான லூயி அகாசிஸ் (Louis Agassiz) என்பவர் 19 ஆம் நூற்றாண்டில் அந்தத் துறையில் தலைசிறந்து விளங்கியவர். அவரிடம் கற்ற மாணவர்கள் கூர்ந்து கவனித்து அறிந்து கொள்வதிலும், நுண்ணிய அறிவிலும் வல்லவர்களாக இருந்தார்கள். ஒரு முறை அவரிடம் கற்க ஒரு புதிய மாணவன் வந்தான்.
அகாசிஸ் மீன் தொட்டியில் இருந்து ஒரு மீனை எடுத்து அந்த மாணவன் முன் வைத்து அதை மிக நுணுக்கமாகக் கவனித்து தன்னிடம் விளக்கமாகச் சொல்லச் சொல்லி விட்டு வெளியே போய் விட்டார். அந்த மாணவன் பல முறை பல விதமான மீன்களைப் பார்த்தவன். இந்த மீனோ மிக சாதாரணமான மீன். இதைக் கவனித்து விளக்கமாகச் சொல்ல என்ன இருக்கிறது என்று எண்ணினான். ஆனாலும் அவர் சொல்லியபடி அந்த மீனைக் கவனித்து குறிப்பெடுத்துக் கொண்டான். மீனின் கண்கள், வால் பகுதி, வாய், செதிள்கள், பக்கவாட்டில் துடுப்பு போன்ற பகுதி என்று எல்லாவற்றையும் கவனித்து எழுதினான். சிறிது நேரத்தில் எல்லாம் அறிந்தாகி விட்டதாக நினைத்து வெளியே வந்து அகாசிஸைத் தேடினான். அவரைக் காணவில்லை.
மறுபடி உள்ளே வந்தவன் பொழுது போகாமல் அந்த மீனை வரைய ஆரம்பித்தான். வரையும் போது அந்த மீன் குறித்து இதற்கு முன் கவனிக்காத சில அதிகப்படியான தகவல்களை அவன் அறிந்தான். அதையும் குறித்துக் கொண்டான். பல மணி நேரம் கழித்து வந்த அகாசிஸிடம் தன் குறிப்புகளைக் காட்டினான். அகாசிஸ் திருப்தியடையவில்லை. இன்னும் நன்றாகவும் நுணுக்கமாகவும் கவனிக்கச் சொல்லி விட்டுப் போனார். மாணவனுக்கு ஒரே ஏமாற்றம். இந்த ஆளிடம் வந்து மாட்டிக் கொண்டோமே என்று நொந்து கொண்டான். ஆனாலும் மேலும் நுணுக்கமாக அதைக் கவனிக்க ஆரம்பித்தான். இதற்கு முன் சாதாரணமாகத் தெரிந்த ஓரிரு விஷயங்கள் இப்போது மிக நுண்ணிய அளவில் வித்தியாசமாக இருக்கக் கண்டான். அவற்றைக் குறித்துக் கொண்டான். அந்த நாளின் இறுதியில் மறுபடி வந்த அகாசிஸிடம் அவற்றைக் காட்டினான். அப்போதும் அவர் திருப்தியடையவில்லை. அது போல் மூன்று நாட்கள் அவனை அந்த மீனைக் கவனிக்க வைத்தார். மூன்று நாட்களின் இறுதியில் அவன் மேலும் மேலும் கவனித்து அந்த மீனின் தனித்தன்மைகளாக பல பக்கங்கள் எழுதியிருந்தான்.
அந்த மாணவன் பிற்காலத்தில் சிறந்த உயிரியல் வல்லுனராகப் புகழ் பெற்ற போது கூறினான். "நான் என் வாழ்க்கையில் கற்ற அந்த முதல் பாடம் தான் கற்ற எல்லாப் பாடங்களிலும் உயர்ந்ததென்று இப்போதும் நினைக்கிறேன். அதுவே பிற்காலத்தில் நான் அறிந்த அத்தனை அறிவுக்கும் காரணமாக இருந்தது. வேறு வகைகளில் யாரும் பெற முடியாத, பெற்ற பின் இழக்க முடியாத சிறந்த பாடமாக அதைச் சொல்லலாம்".
பிரபல விஞ்ஞானியான ஐசக் நியூட்டனும் தான் அறிவியல் ரகசியங்களை அறிந்த விதமாக இதையே கூறுகிறார். "நான் அறிய வேண்டிய விஷயத்தைக் குறித்தே தினமும் என் கவனத்தில் வைத்திருப்பேன். சிறிது சிறிதாக உண்மைகள் விளங்கும். ஒரு நாள் எல்லாம் தெளிவாகத் தெரியும்." இதையே மற்ற பெரும்பாலான விஞ்ஞானிகளும் அனுபவபூர்வமாகக் கூறுகிறார்கள்.
மனதை நாம் தேர்ந்தெடுக்கும் பொருளில் நூறு சதவீதம் கவனிக்க வைத்தல் தான் ஒருமுனைப்படுத்துதல். குரங்கு போல் தாவும் மனதைக் கடிவாளம் இட்டு இழுத்துப் பிடித்து, நமக்கு வேண்டியதில் ஒருமுனைப்படுத்துதல் மன உறுதியும், ஆர்வமும் இருந்தால் மட்டுமே சாத்தியமாகும்.
சுவாரசியமில்லாத பொருள்களிலும், சுவாரசியமில்லாத விஷயங்களிலும் தொடர்ந்து கவனத்தைக் குவிப்பதால் என்ன நன்மை விளைந்து விடும் என்று சந்தேகத்துடன் கேட்காதீர்கள். இந்தப் பயிற்சியில் நாம் எடுத்துக் கொள்ளும் பொருளோ, விஷயமோ முக்கியமல்ல. உடலின் பகுதிகளை உடற்பயிற்சி செய்து பலப்படுத்துவது போல மனதின் திறன்களைப் பலப்படுத்துவதே இந்தப் பயிற்சியின் நோக்கமும், பயனும். மனம் நம் கருவியாக இருந்து நாம் விரும்பும் இடத்தில் குவிகிறது என்கிற அளவிற்கு பழக்கப்படுத்திக் கொண்டால் அது பல பெரும் சக்திகள் அடங்கிய பொக்கிஷத்தைத் திறக்க உதவும் சாவியாக மாறும்.
எனவே இந்தப் பயிற்சியைத் தவறாமல் செய்து பாருங்கள். ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு பொருளாக எடுத்துக் கொள்ளுங்கள். நீங்கள் அதில் மனதைக் குவிக்கும் நேரத்தை நாளுக்கு நாள் அதிகப்படுத்திக் கொண்டே செல்லுங்கள். ஆரம்பத்தில் போரடித்தாலும் நீங்கள் தொடர்ந்து செய்து ஒன்றைப் பற்றி புதிது புதிதாக போகப் போக அறியும் போது தானாக அதில் ஈடுபாடும், ஆர்வமும் பிறக்கும்.

மனதை மறக்க ஒரு பயிற்சி!


- என்.கணேசன்
பிரபஞ்ச சக்தியின் அங்கமாக உங்களை எண்ண முடிவது எல்லா சமயங்களிலும் உங்களுக்கு சாத்தியமாகா விட்டாலும் பயிற்சி செய்யும் அந்த சில நிமிடங்களிலாவது சாத்தியமாகிய பின், அது உண்மை என்று ஆழமாக உணர ஆரம்பித்த பின் மட்டுமே அடுத்த பயிற்சிக்குச் செல்ல வேண்டும்.
ஒரு வகுப்பில் தேர்ச்சி பெற்ற பின் மட்டுமே ஒரு மாணவன் அடுத்த வகுப்புக்கு அனுமதிக்கப்படுவது போலத் தான் இதுவும். அடுத்த நிலைப் பாடங்களைப் புரிந்து கொள்ளவும், பயிற்சி செய்து தேறவும் முதல் நிலைப்பாடங்களைக் கற்று தேர்ச்சி பெற்றவருக்கே முடியும் என்பதை மறந்து விடக்கூடாது.
முதல் பயிற்சியில் நான் என்று எண்ணும் போது உடலையே நானாக எண்ணும் வழக்கத்தை விட்டொழிக்கப் பழக ஆரம்பித்திருப்பீர்கள். அடுத்ததாக நான் என்று சொல்லும் போது மனதை நினைக்கும் வழக்கத்தையும் விட்டொழிக்கும் சிந்தனைகள் மற்றும் பயிற்சிகளைப் பார்ப்போம்.
நம் கட்டுப்பாட்டில் இருக்கையில் மனம் ஒரு சிறந்த சேவகன். அதன் கட்டுப்பாட்டில் நாம் இருக்கையில் மனம் ஒரு மோசமான எஜமானன். ஓர் உடலைத் தேர்ந்தெடுத்து நாம் இங்கு வந்தது போலவே மனநிலையையும் நாமே தேர்ந்தெடுத்து உருவாக்கிக் கொள்கிறோம். அது நாம் உருவாக்கிக் கொள்வது தான் என்றாலும் அதையே நாம் என்று அடையாளம் காண ஆரம்பிக்கும் போது அதன் பிடியில் சிக்கிக் கொள்கிறோம். பின் அது நம்மை அலைக்கழிக்க ஆரம்பிக்கிறது.
இந்த இரண்டாவது பயிற்சிக்கு முன்பு அமைதியாக ஓரிடத்தில் அமர்ந்து கொள்ளுங்கள். அமைதியாக இருக்கும் மனதில் வர ஆரம்பிக்கும் எண்ணங்களையும், உணர்ச்சிகளையும் ஒரு பார்வையாளனாகக் காண ஆரம்பியுங்கள். கோபம், வெறுப்பு, ஆசை, ஏமாற்றம், பொறாமை என்று நூற்றுக் கணக்கில் எழும் உணர்ச்சிகளோடு கூடிய எண்ணங்களை ஒவ்வொன்றாக ஆராயுங்கள். அது எப்படி எழுந்தது, ஏன் எழுந்தது, என்ன தெரிவிக்கிறது என்றெல்லாம் ஒரு விஞ்ஞானி மைக்ராஸ்கோப்பில் ஆராய்ச்சி செய்வது போல செய்யுங்கள். சரியாக நீங்கள் அலசியிருந்தால் அதன் ஆரம்பத்தையும், காரணத்தையும், வளர்ச்சியையும், முடிவையும் கூட நீங்கள் வெளியாளாக நின்று காண முடியும்.
ஒரு காலத்தில் உங்களிடம் இல்லாமல் இருந்து, பின் உருவாகி, சில சமயங்களில் உங்கள் மனநிலையில் பிரதான இடம் பிடித்து, ஆட்டுவித்து, பின் தணிந்து மடியும் அந்த உணர்ச்சிகளின் வரலாறை நீங்கள் பார்வையாளனாகப் பார்க்க முடியும். உங்களுடையது என்றால் அது என்றுமே உங்களிடம் இருந்திருக்கும். இடையே வந்து போவது என்றால் அது எப்படி உங்களுடையதாக முடியும். அதை எப்படி நீங்களாகவே உங்களால் அடையாளம் காண முடியும்?
எத்தனையோ எண்ணங்கள் ஒரு காலத்தில் மிக முக்கியமாக இருந்து இக்காலத்தில் நீங்கள் அலட்சியப்படுத்துவனவாக இருந்திருப்பதை நீங்கள் காண முடியும். இன்று முக்கியமாக இருப்பவைக்கும் நாளை அதே கதி நேரலாம். ஒரு காலத்தில் இது தான் நான் என்று நீங்கள் நினைத்ததெல்லாம் இன்று யாராவது சுட்டிக் காட்டினால் உங்களை தர்மசங்கடப்படுத்துவதாகக் கூட இருக்கலாம். நேற்றைய நான் வேறு, இன்றைய நான் வேறு என்பது எப்படி உண்மையாக முடியும்? இதெல்லாம் தத்துவமாகத் தோன்றலாம். ஆனால் ஆழமாக சிந்தித்துப் பார்த்தால் மனம் என்பது கூட மாறிக் கொண்டே இருப்பது, அதனால் அதுவும் நீங்கள் இல்லை என்ற முடிவுக்கு நீங்கள் சுலபமாக வரலாம்.
அறிவுபூர்வமாக இதைப் புரிந்து கொள்ள முடிந்தாலும் அதை மனதில் ஆழமாகப் பதிய வைத்துக் கொள்வது அவ்வளவு சுலபமல்ல. இதைத் தினமும் திரும்பத் திரும்ப சிந்தித்து உணர்ந்து உங்களுக்குள் மீண்டும் மீண்டும் பதிய வைக்க முயன்றால் ஒழிய அறிவுக்கு எட்டிய இந்த செய்தி அனுபவத்தில் வந்து உதவாது. எனவே இந்த உண்மையை உங்கள் மனதில் ஆழமாகச் சிந்தித்து பதிய வைத்துக் கொண்டு அடுத்த பயிற்சிக்குத் தயாராகுங்கள்.
1) முதல் பயிற்சியைப் போலவே இதற்கும் அமைதியாக ஓரிடத்தில் அமருங்கள்.
2) உங்களுக்கு ஏற்ற ஏதாவது ஒரு தியானத்தைச் செய்து முடியுங்கள்.
3) நீங்கள் எல்லையில்லாத பிரபஞ்ச சக்தியின் ஒரு அங்கம் என்ற நினைவை முதல் பயிற்சியில் குறிப்பிட்டது போல உங்கள் மனதில் பிரதானப்படுத்துங்கள். அதை உணர்வுபூர்வமாக உணர முயற்சி செய்யுங்கள்.
4) இந்த உடலும், மனமும் உங்களது கருவிகள் என்பதை உறுதியாக உங்களுக்குள் பிரகடனப்படுத்துங்கள். "நான் பிரம்மாண்டமான பிரபஞ்ச சக்தியின் ஒரு அங்கம். நான் உடலல்ல. மனமும் அல்ல. நான் அந்த இரண்டையும் இயக்கும் எஜமான். நான் உடலையும், உள்ளத்தையும் சார்ந்தவன் அல்ல. அவற்றால் தீர்மானிக்கப்படுபவனும் அல்ல, இயக்கப்படுபவனும் அல்ல. அவற்றை தேவைப்படும் போது, தேவைப்படும் விதத்தில் நான் பயன்படுத்த வல்லவன்". (வார்த்தைகள் இப்படியே இருக்க வேண்டும் என்பதில்லை. அவற்றின் மீது நீங்கள் சக்தி செலுத்தவும், இயக்கவும் வல்லவர் என்ற செய்தியைத் தெளிவாகச் சொல்லும்படியாக இருத்தலே அவசியம்)
5) மேலும் சொல்லிக் கொள்ளுங்கள். "உடலையும், உள்ளத்தையும் என் முழுக் கட்டுப்பாட்டில் வைத்துள்ள நான் என்னுள்ளே என் இயல்பான எல்லையில்லாத சக்தியை உணர்கிறேன். எல்லையில்லாத அமைதியை உணர்கிறேன். இந்த மகாசக்தியும், பேரமைதியும் என் பிறப்புரிமை. உலக நடப்பின் தோற்றங்களில் நான் இவற்றை இழந்து விட மாட்டேன்."
இப்படி உங்களுக்குள் சொல்லிக் கொள்ளும் போது அது உணர்வு பூர்வமாக இருக்க வேண்டும். அவை நம்பிக்கையுடன் மிக உறுதியாக சொல்லப்பட வேண்டும். அப்போது தான் இந்தப் பயிற்சி முடிக்கையில் உங்களுக்குள் சக்தியையும், அமைதியையும் நன்றாகவே உங்களால் உணர முடியும். மேலோட்டமாக, எந்திரத்தனமாகச் சொல்லப்படுபவை எந்த தாக்கத்தையும் உங்களுக்குள் ஏற்படுத்தப் போவதில்லை.
இந்தப் பயிற்சியையும் விடாமல் பொறுமையாக தினமும் செய்யுங்கள். நீங்கள் ஆத்மார்த்தமாக தினமும் செய்தால் சில நாட்களில் உங்களிடம் மாற்றத்தை உணர ஆரம்பிப்பீர்கள். அத்தோடு திருப்திப்பட்டு பயிற்சியை நிறுத்தி விடாதீர்கள். மேலும் தொடர்ந்து செய்து கொண்டே வந்தால் அந்த மாற்றம் மேலும் மெருகு பெற்று நீடித்து உங்களிடம் தங்க ஆரம்பிக்கும்.
ஒருவன் உடலுக்கோ, மனதிற்கோ அடிமையாக இருந்து கொண்டு ஆழ்மன சக்திகளை தன் கட்டுப்பாட்டிற்குக் கொண்டு வர முடியாது. ஆளுமை சக்தி அடிமைத்தனத்துக்குக் கிடைத்து விடாது. அந்த அடிமைத்தனத்தில் இருந்து மீளவே இந்த இரண்டு பயிற்சிகளும் சொல்லப்பட்டுள்ளன. இந்த இரண்டு பயிற்சிகளையும் மட்டுமே தொடர்ந்து நம்பிக்கையோடு உணர்வு பூர்வமாகச் செய்தால் ஒருவன் வெற்றியாளனாகவும், அமைதி கொண்டவனாகவும் மாறுவது உறுதி.

உணர்வு நிலைக்குச் செல்ல முதல் பயிற்சி


 என்.கணேசன்
ணுவைப் பிளந்து பார்த்த போது அறிவியல் பிரமித்துப் போனது. அணுவுக்குள் இடை விடாது இயங்கிக் கொண்டு இருந்த சக்திகளின் செயல்பாடுகள் விஞ்ஞானிகளை அசத்தின. அணுவின் சக்திகளுக்கே இப்படி என்றால் பிரபஞ்சத்தின் சக்திகளை ஒட்டு மொத்தமாக ஓரளவுக்காவது அறிவது மனிதனின் அதீத கற்பனைகளுக்கும் கூட எட்டாத பிரமாண்டம் என்றே சொல்ல வேண்டும்.
ராஜ யோகிகள் இந்த பிரமாண்டமான பிரபஞ்ச சக்தியின் ஓர் அங்கமாகவே மனிதனைக் கண்டார்கள். அந்த சக்திக்கு எதிர்மாறாக இயங்காமல், அந்த சக்திகளுக்கு ஏற்ப ஒத்த விதத்தில் தன்னை 'ட்யூன்' செய்து கொண்டால் அவன் பெறக்கூடிய சக்திகளும் எல்லை அற்றவை என்று உணர்ந்தார்கள். அந்த சக்திகளைப் பெற அவன் பிரபஞ்ச சக்தியின் அங்கமாகத் தன்னை உணர்வது மிக முக்கியம் என்பதையும் அவர்கள் உணர்ந்தார்கள்.
அரசனைப் போல அதிகாரங்களை அவன் அமல்படுத்தும் முன் தன்னை அரசன் என்பதை உணர்வது முக்கியம் என்பது அவர்கள் கருத்தாக இருந்தது. இல்லா விட்டால் அது கற்பனையான கேலிக்கூத்தாகவே இருக்கும் என்று கருதினார்கள்.
தன் உடலையும், தொழிலையும், செல்வத்தையும், மற்றவர்களுடைய அபிப்பிராயங்களையும் வைத்தே தன்னை வரையறுத்துக் கொள்ளப் பழகி இருக்கும் மனிதன் தன் உண்மையான தன்மையை அறிய, உயர் உணர்வு நிலை பெறுவது அவசியம் என்று ராஜ யோகிகள் கருதினார்கள். அந்த உயர் உணர்வு நிலைக்குச் செல்ல முறையான பயிற்சிகளை ஏற்படுத்தினார்கள். அதில் முதல் பயிற்சியைப் பார்ப்போம்.
1) அமைதியாக ஆரவாரமற்ற ஓரிடத்தில் தனிமையில் அமருங்கள்.
2) இதுவரை சொன்ன தியானங்களில் உங்களுக்கு நல்ல அனுபவத்தைத் தந்த ஒரு தியானத்தைச் செய்யுங்கள். முறையாகச் செய்து முடித்தால் உடலும் இளைப்பாறி இருக்கும், மனமும் அமைதி அடைந்திருக்கும்.
3) முதலில் உங்களை இந்த உடலுக்குள் குடியிருக்கும் பிரபஞ்ச சக்தியின் ஓர் அங்கமாக உணருங்கள். இந்த உலகில் நீங்கள் மற்றவர்களால் அறியப்படும் பெயர், தோற்றம், கல்வி, தொழில், சமூக நிலை போன்ற அடையாளங்களால் அல்லாமல் உங்களை நினைத்துப் பாருங்கள். இது ஆரம்பத்தில் மிகவும் கடினமான ஒரு விஷயம் தான். நாம் நம்மைப் பற்றிய அந்த அடையாளங்களை நீக்கி விட்டால் நினைத்துப் பார்க்க எதுவுமில்லை என்பது போலவே தோன்றும். ஆனால் சிந்தனையை ஆழப்படுத்தினால் இந்த அடையாளங்கள் தற்காலிகமாக வந்தவை, மாறிக் கொண்டே இருப்பவை என்பதை உணர்வது சிரமமல்ல. திடீர் என்று உலகில் ஒரு நாள்
தோன்றி, வாழ்க்கையில் இந்த அடையாளங்களைப் பெற்று, ஏதேதோ செய்து, திடீரென்று அழிந்து போகும் ஒரு தற்காலிக உயிரல்ல நீங்கள். தோன்றுவதற்கு முன், மறைந்ததற்குப் பின் என்ற இரண்டு பெரிய கேள்விக்குறிகளுக்கு மத்தியில் உள்ள பொருள் இல்லாத குழப்பம் அல்ல நீங்கள். மாறிக் கொண்டே இருக்கும் இந்த அடையாளங்களுக்கு நடுவே மாறாத ஒரு அற்புதமே நீங்கள். இந்த சிந்தனையை மனதில் மையமாக்குங்கள்.
4) இந்த உடல் என்ற கூட்டில் வசிக்கும் பிரபஞ்ச சக்தி நீங்கள் என்ற சிந்தனையை உங்களுக்குள் ஏற்படுத்தி அதை பலப்படுத்துங்கள். இந்த கூட்டை, வெளியுறையை பிரபஞ்ச சக்தியான நீங்கள் முழுக் கட்டுப்பாட்டில் வைத்திருப்பதாக நினையுங்கள். இந்த புதிய சிந்தனையும் உங்களுள் ஆழமாகப் பதியட்டும். உடல் என்ற கருவியை ஆரோக்கியமாகவும், சக்தி வாய்ந்ததாகவும் வைத்திருக்க உங்களால் முடியும் என்பதை நம்புங்கள்.
5) அடுத்ததாக உங்கள் உடலை விட்டு வெளியேறி உங்கள் உடலை நீங்கள் காண முடிவதாக நீங்கள் கற்பனை செய்து கொள்ளுங்கள். உங்கள் உடலைத் தெளிவாக நீங்கள் வெளியே இருந்து காண்பது போல் காணுங்கள். ஆரம்பத்தில் இது சுலபமாக இருக்காது. அதனால் சிலர் கண்ணாடி முன் அமர்ந்து கண்ணாடியில் தெரியும் தங்கள் பிம்பத்தை உண்மையான உடல் என்றும் தாங்கள் வெளியே இருந்து உடலைக் காண்பதாகவும் எண்ணிக் கொள்கிறார்கள். ஆரம்பத்தில் இந்த பயிற்சியைப் பயன்படுத்தி அப்படிக் காண்பதில் தவறில்லை. ஆனால் ஒரு கட்டத்தில் கண்ணாடியின் உபயோகத்தைத் தவிர்த்தே இந்த பயிற்சியைச் செய்து தேற வேண்டும்.
6) இனி உங்கள் கவனத்தை உடலில் இருந்து முழுமையாக எடுத்து விடுங்கள். உடலில் இருந்து வெளியேறிய நீங்கள் உங்கள் உடலைப் பார்த்து பின் உங்கள் கவனத்தினை உண்மையான உங்கள் மீது திருப்பிக் கொள்வதாக நினைத்துக் கொள்ளுங்கள். அந்த உண்மையான உங்கள் தன்மையினை நீங்கள் அமைதியாக, நிதானமாக, சிறிதும் சந்தேகம் இல்லாமல் கீழ்க்கண்டவாறு உணருங்கள்.
7) "நான் பிரபஞ்ச சக்தியின் மையம். சூரியனை பூமி சுற்றுவது போல என் உலகம் என்னைச் சுற்றியே இயங்குகிறது. என்னுடைய சக்தி எல்லை இல்லாதது. உடல் எனக்கு கூடு தான். அது எனது தற்காலிக வசிப்பிடம் தான். நான் உடலில் அடங்கிக் கிடக்கும் அடிமையல்ல. அந்த உடல் இல்லாமலும் என்னால் இயங்க முடியும். நான் நிரந்தரமானவன்/ நிரந்தரமானவள். எனக்கு அழிவில்லை. எனக்குள் இருக்கும் எல்லை இல்லாத ஆழமான சக்தியை நான் முழுமையாக
உணர்கிறேன். இந்த ஞானத்தால் என்னுள்ளே அமைதியைப் பரிபூரணமாக நான் உணர்கிறேன்."
8) இந்த எண்ணத்தை உங்களுக்குள் வேர் விடச் செய்யுங்கள். வார்த்தைகள் முழுமையாக இப்படியே இருக்க வேண்டும் என்பதில்லை. ஆனால் உங்களைப் பற்றி நீங்கள் அறிந்து வைத்திருக்கிற உண்மை இந்த செய்தியாக இருக்க வேண்டும். இது உயர்வு நவிற்சி போல சிலருக்குத் தோன்றக்கூடும். ஆனால் ராஜ யோகிகள் நம்மை மட்டுப்படுத்திக் கொண்டு, நம்மைக் குறைவாக மதிப்பிட்டுக் கொண்டு நாம் எதையும், என்றும் சாதித்து விட முடியாது என்று தெளிவாக அறிந்திருந்தார்கள். இப்படி நினைப்பதால் நமக்கு கர்வம் வந்து விடாதா என்ற கேள்வியும் சிலருக்கு எழலாம். கர்வம் என்பது அடுத்தவர்களை மட்டமாக நினைத்து நம்மை உயர்வாக நினைக்கும் போது மட்டுமே எழக் கூடியது. நமக்குப் பொருந்தும் இந்த உண்மை அடுத்தவருக்கும் பொருந்தும் என்று அறிந்திருக்கும் போது, அடுத்தவரைக் குறைவாக எண்ண முடியாது. எனவே முறையாக உணரும் போது கர்வம் வர வாய்ப்பில்லை.
9) இது ஒருசில நாட்களில் தேர்ச்சி பெறக் கூடிய பயிற்சியல்ல. தாழ்வான உணர்வு நிலையில் இருந்தே வருடக்கணக்கில் பழகி விட்ட நமக்கு மேம்பட்ட உணர்வு நிலைக்குப் பழக்கப்பட பல நாட்கள் பயிற்சி தேவைப்படும். இதில் முன்னேற்றம் கூட சிறிது சிறிதாகத் தான் தெரியும். அதனால் பொறுமையாக இந்தப் பயிற்சியைச் செய்து வரவும்.

உணர்வு நிலை மாற்றத்தின் அவசியம்


 என்.கணேசன்
ழ்மன சக்திகளை அடைவதும், அதைப் பயன்படுத்துவதும் சாதாரண மேற்போக்கான உணர்வு நிலையில் எந்த மனிதனுக்கும் சாத்தியமல்ல. ஏனென்றால் ஆழ்மன சக்திகள் உயர்ந்த, ஆழமான உணர்வு நிலைகளில் இருப்பவை. அந்த உணர்வு நிலைகளிலேயே சாத்தியமானவை. எனவே ஆழ்மன சக்திகளை அடைய விரும்புபவர்கள் அந்த உயர் உணர்வு நிலைகளை அறிந்து, அந்த உயர் உணர்வு நிலைகளுக்குச் செல்வது அவசியம்.
எனவே தான் யோகிகளும், சித்தர்களும் உணர்வு நிலை மாற்றமே (Shift in consciousness level) ஆழ்மன சக்திகள் என்னும் ரகசியக் கருவூலத்திற்குக் கதவு என்று சொல்கிறார்கள். அதைத் திறந்து உள்ளே சென்றால் மட்டுமே அந்த பிரம்மாண்டத்தை அறிவது கூட சாத்தியம் என்று
அவர்கள் சொல்கிறார்கள்..
அரவிந்தர் போன்ற யோகிகள் அந்த உயர் உணர்வு நிலைகளை மிக நுண்ணிய அளவில் சில வகைகளாகப் பிரித்து பெயரிட்டு ஒவ்வொரு உணர்வு நிலையினையும் விவரித்து அதில் சாத்தியமாகக் கூடியவற்றை விவரித்து இருக்கின்றனர். நம் தற்போதைய நோக்கத்துக்கு அந்தப் பெயர்கள், நிலைகள், செயல்பாடுகள் ஆகிய விளக்கங்கள் மிகவும் அவசியம் இல்லை என்பதால் ஒட்டு மொத்தமாகவே உயர் உணர்வு நிலை என்றே என்றே குறிப்பிட நினைக்கிறேன்.
அந்த உயர் உணர்வு நிலைக்கு சென்றால் பின் அதுவே ஆழப்பட்டு அதற்கு மேம்பட்ட நுண்ணிய நிலைகளை அடைவது நிச்சயம் என்பதால் அதற்கு பெயர்களிட்டு வாசகர்களை அதிகம் குழப்ப நான் விரும்பவில்லை. ஆனால் விருப்பம் உள்ளவர்கள் அரவிந்தர் இந்த உணர்வு நிலைகள் (States of Consciousness) குறித்து எழுதியதை புத்தகங்கள் மூலமாகவோ, இணையத்திலோ படித்து அறிந்து கொள்ளலாம்.
மேற்போக்கான உணர்வு நிலையில் நாம் யார் என்பது கூட நம் பெயர், தோற்றம், தொழில், செல்வநிலை, நாம் மேற்கொண்டிருக்கும் சித்தாந்தங்கள், நம்மை பற்றி அடுத்தவர்கள் கொண்டிருக்கும் அபிப்பிராயங்கள் ஆகியவற்றைப் பொறுத்தே நாம் அறிகிறதாக இருக்கிறது. அவையெல்லாம் மாறும் போது அந்த 'நாம்' தானாக மாறி புதிய அவதாரம் எடுக்கிறது. இப்படி நாம் யார் என்பதும் ஆழமில்லாமல், மாறிக் கொண்டே இருப்பதாக இருக்கிறது. சில 'நாம்'கள் நம்மை சந்தோஷப்பட வைக்கின்றன. சில 'நாம்'கள் துக்கப்பட வைக்கின்றன. நாம் இதில் வாழ்நாள் முழுவதும் அலைக்கழிக்கப்படுகிறோம்.
மேலும் நம் தினசரி வாழ்க்கையில் சாதாரண உணர்வு நிலையில் வெளி உலகின் நிகழ்ச்சிகள் தரும் செய்திகளும், அது பற்றிய நம் எண்ணங்களுமே நம் மனதில் மேலோங்கி இருக்கின்றன. புதிய நிகழ்ச்சிகள் நடக்கும் வரை அவை நம்மிடம் தங்குகின்றன. புதிய நிகழ்வுகள் நடந்த பின் அவையே நம் மனதின் பிரதான இடத்தைப் பிடித்துக் கொள்கின்றன. பழையன காணாமல் போகின்றன. இதில் ஆழமாக என்று எதுவும் இல்லை. பெரும்பாலான நேரங்களில் செயல்படும் மனிதர்களாக இருப்பதை விட வெளியுலகச் செயல்களால் பாதிக்கப்படும் மனிதர்களாக அல்லது உந்தப்படும் மனிதர்களாக நாம் வாழ்கிறோம். பெரும்பாலாக எல்லோரும் அப்படியே வாழ்வதால் நமக்கு அது இயல்பாகவே தோன்றுகிறது.
இப்படி மேற்போக்கான உணர்வு நிலைகளில் தன்னையே அறியாத காரணத்தினால் தெளிவின்மையும், வெளியிலிருந்தே முக்கியமாக இயக்கப்படுவதால் தனித்துவம் இன்மையும் இருக்கின்றன. இதனாலேயே மேற்போக்கான சாதாரண உணர்வுநிலை பலவீனமானதாக கருதப்படுகிறது. ஆழ்மன சக்தியை அடையத் தடை செய்யும் பண்புகளான அவசரம், அவநம்பிக்கை, அமைதியின்மை மூன்றும் இந்த பலவீனமான மேற்போக்கான உணர்வுநிலையின் வெளிப்பாடுகளே.
எனவே தான் "உன்னையே நீ அறிவாய்" என்ற புராதன காலத்திலேயே கிரேக்கம், இந்தியா, எகிப்து போன்ற நாடுகளின் சான்றோர்களால் அதிமுக்கியமான அறிவுரையாக வழங்கப்பட்டது. ஆன்மிகத்துக்கும் சரி, ஆழ்மன சக்திக்கும் சரி இந்த வாக்கியம் ஆரம்பப் பாடமாக இருக்கிறது. (இது மட்டுமல்ல, இனியும் தொடர்ந்து நாம் கற்கவிருக்கும் சில பாடங்களும், பயிற்சிகளும்,
ஆன்மிகத்துக்கும் ஆழ்மன சக்திகளுக்கும் ஒரே போலத் தான் இருக்கின்றன. ஒரு குறிப்பிட்ட கட்டம் வரை இரண்டிற்குமான பாதை ஒன்றே. பின்பு தான் ஆழ்மன சக்திகள் அடைந்த கட்டத்தையும் தாண்டி ஆன்மீகத்தின் பாதை முன்னேறிச் செல்கிறது.)
தன்னை அறிய மனிதன் தன் உணர்வு நிலையின் ஆழத்திற்குச் செல்ல வேண்டி இருக்கின்றது. என்னை முதலில் கவனி என்று ஏகப்பட்ட விஷயங்கள் நம் கவனத்தைக் கவர முயற்சிக்கும் இந்த நவீனகாலத்தில், இருக்கின்ற 24 மணி நேரங்களே போதாமல் இருக்கின்றனவே என்று மனிதர்கள் புலம்பும் இந்தக் காலத்தில் தனியாக ஒரு சமயத்தை அதற்கென ஒதுக்குவது என்பது பெரும்பாலோருக்கு எளிதானதல்ல. ஆனால் உண்மையாகவே ஆழ்மன சக்திகள் பெறவும், தன்னை அறியவும் விரும்புபவர்கள் அதற்கென ஒரு குறிப்பிட்ட நேரத்தை ஒதுக்குவதும், சோம்பலின்றி அதற்குத் தேவையான பயிற்சிகளைச் செய்வதும் மிக மிக அவசியமே.
முன்பே குறிப்பிட்டது போல மேற்போக்கான சாதாரண உணர்வுநிலை நம் பெயர், தோற்றம், தொழில், செல்வநிலை, நாம் மேற்கொண்டிருக்கும் சித்தாந்தங்கள், நம்மை பற்றி அடுத்தவர்கள் கொண்டிருக்கும் அபிப்பிராயங்கள் ஆகியவற்றைப் பொறுத்தே அமைந்திருப்பதால் உயர் உணர்வு நிலைகளுக்குச் செல்ல, உணர்வு நிலை மாற்றம் (Shift in consciousness level) ஏற்பட, நம்முடைய இந்த பொய்யான அடையாளங்களை நாம் கைவிட வேண்டியிருக்கிறது. நாம் ஒவ்வொன்றையும் உணர ஐம்புலன்களையே பயன்படுத்தும் அந்த இயல்பான பழக்கத்தையும் விட்டு விடுதல் அவசியமாக இருக்கிறது.
இந்த ஐம்புலன்களின் துணையில்லாமல் காண, கேட்க, அறிய, அறிவிக்க முடிவது என்பது இத்தனை தகவல்கள் படித்த பின்பும் சிலருக்கு சிரமமாக இருக்கலாம். மரண விளிம்பு அனுபவங்கள், உடலை விட்டு வெளியேறிச் செல்லும் சமாச்சாரங்கள் எல்லாம் கட்டுக்கதைகளாகச் சிலருக்கு இன்னமும் தோன்றலாம். அவர்களுக்கு முன்னமே சொல்லி இருக்க வேண்டிய, ஆனால் சொல்லாமல் விட்டுப் போன, தினசரி வாழ்க்கையில் நடக்கிற இன்னொரு எளிய உதாரணத்தைச் சொல்கிறேன்.
எல்லோரும் உறங்கும் போது கனவு காண்கிறோம். கனவில் பல இடங்களுக்குச் செல்கிறோம், பலரிடம் பேசுகிறோம், பலதையும் காண்கிறோம், பலதையும் கேட்கிறோம். இல்லையா? ஐம்புலன்களும் ஒடுங்கி இளைப்பாறிக் கொண்டிருக்கும் அந்த வேளையில் கனவில் நம்மால் துல்லியமாக பார்க்க, பேச, கேட்க, அறிய, உணர முடிகிறதே, அது எதனால்? சிந்தித்துப் பாருங்கள்.